Published : 25 Oct 2015 10:22 AM
Last Updated : 25 Oct 2015 10:22 AM

எவரிஸ்ட் காலோயிஸ் 10

பிரான்ஸ் கணித மேதை

குறுகிய காலமே வாழ்ந்தாலும், கணிதத்தில் மாபெரும் சாதனைகளைப் படைத்த பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளர் எவரிஸ்ட் காலோயிஸ் (Evariste Galois) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே உள்ள போர்க்லா ரெய்ன் என்ற இடத்தில் (1811) பிறந்தார். பெற்றோர் இலக்கியம், மதம், தத்துவத் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். தந்தை அரசியல்வாதி, அப்பகுதி மேயர். காலோயிஸ் 12 வயது வரை தாயிடம் பண்டைய இலக்கியங்களைக் கற்றான்.

# பாரீஸ் நகரப் பள்ளியில் பயின்றான். இந்தப் பிறவி மேதையின் ஆர்வம் கணிதத்தின் மேல் குவிந்தது. கணித மேதை லுஜாண்டரின் வடிவியல் புத்தகம், லாக்ரான்ஸின் இயற்கணித புத்தகம் ஆகியவற்றை நாவல்போல அநாயாசமாகப் படித்து முடித்தான்.

# 15 வயதுகூட நிரம்பாத சிறுவன், அடுத்தடுத்த பல கணித மேதைகளின் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தான். சிக்கலான, பெரிய கணக்குகளைக்கூட மனக்கணக்காகப் போட்டான். தன் வகுப்பு பாடங்கள் அவனுக்கு துரும்பாகப் பட்டன.

# 17-வது வயதில் ரிட்டர்ட் என்ற கணித ஆசிரியர் இவரது கணிதத் திறமையை உணர்ந்து ஊக்கப்படுத்தினார். தனிப்பட்ட முறையில் கணித சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தொடரும் பின்னங்கள் பற்றிய தனது முதல் ஆய்வுக் கட்டுரையை 1829-ல் வெளியிட்டார்.

எகோல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர தேர்வு எழுதினார். இவரது அபாரத் திறனை கணிக்கும் அளவுக்கு தேர்வாளர்களுக்கு திறன் இல்லாததால், வெற்றி வாய்ப்பை இழந்தார்.

# அரசியல் அவதூறு புகார் காரணமாக தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதனால் விரக்தியடைந்த போதிலும், கணித ஆராய்ச்சிகளை மட்டும் இவர் நிறுத்தவே இல்லை.

# தனது கண்டுபிடிப்புகளை பிரெஞ்ச் கணித அகாடமிக்கு அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டுரைகள் பார்க்கப்பட வில்லை. இயற்கணிதச் சமன்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் தொலைந்துபோயின. இதனால் சுணக்கம் அடைந்தவர், கணித ஆய்வுகளை நிறுத்திவிட்டு அரசியலில் இறங்கினார்.

# அரசியலில் விரோதங்களை சம்பாதித்ததால், மீண்டும் கணிதத்தின் பக்கம் நாட்டம் செலுத்தினார். பல்லுறுப்பு சமன்பாட்டை விடுவிக்க துல்லியமான இயற்கணித தீர்வுகளைக் கண்டறிந்தார். இதற்கிடையே அரசியல் மோதல் காரணமாக 2 முறை கைது செய்யப்பட்டார்.

# 1832-ம் ஆண்டில் ஒருநாள் இரவு மணிக்கணக்காக அமர்ந்து தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தொகுத்து 60 பக்க கட்டுரையாக எழுதினார். அது பத்திரமாக தனது நண்பரிடம் போய்ச் சேர்வதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். ‘காலோயிஸ் கணித உயில்’ என அழைக்கப்படும் இந்த குறிப்புகளை எழுதிய அடுத்த நாள் காலை, முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு 21 வயது.

# காலோயிஸின் கண்டுபிடிப்புகள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்பட்டு கணித உலகில் பரபரப்பை ஏற்படுத்தின. 20-ம் நூற்றாண்டில் காலோயிஸ் சமன்பாடு, காலோயிஸ் குழு சமன்பாடு, நுண் இயற்கணிதம், காலோயிஸ் தொடர்புகள், காலோயிஸ் கோட்பாடு எனக் குறிப்பிடப்பட்ட பல கணிதத் தீர்வுகளுக்கு இவரது ஆய்வுகள் அடித்தளம் அமைத்தன.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x