

பெண் மொழியைத் தமிழ் எழுத்துலகில் பதித்து புகழ்பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். 1925-ல் திருச்சி முசிறியில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே கிருஷ்ணன் என்பருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவர் தந்த ஊக்கத்தால் தாமே புத்தகங்களைப் படித்து கதைகள் எழுதத் துவங்கினார்.
தூத்துக்குடி மீனவர்களின் அபாயகரமான வாழ்வைக் கண்கூடாகக் கண்டு அவர் எழுதிய ‘கரிப்பு மணிகள்’ நாவல், பிஹார் கொள்ளைக்கூட்டத் தலைவன் டாகுமான்சியை சந்தித்து, அதன் அடிப்படையில் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் போன்றவை பெரும் புகழை ஈட்டித்தந்தன. பெண் அடிமைத் தனம், பெண் சிசுக் கொலை போன்ற சமூக அநீதிகளை அவருடைய எழுத்துகள் தட்டிக்கேட்டன.
சமூக அரசியல் குறித்தும் எழுதினார். கலை மகள் விருது, சாகித்ய அகாடமி விருது, நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் விருது, சோவியத் லான்ட் விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைக் கவுரவித்தன. கணவரின் மறைவுக்குப் பிறகு, முதியோர் இல்லத்தில் வசித்த அவர் 2014 அக்டோபர் 20-ல் காலமானார்.