Published : 06 Nov 2020 11:06 am

Updated : 06 Nov 2020 11:06 am

 

Published : 06 Nov 2020 11:06 AM
Last Updated : 06 Nov 2020 11:06 AM

சித்திரச்சோலை 10: மாற்றுப்பாதை காட்டிய மகான்

chithira-solai

சிவகுமார்

1961-ஏப்ரல் மாதம் 28-ம் தேதி. மாலை நேரம்.

ஓவியக்கல்லூரி பிரின்சிபல் கே.சி.எஸ்.பணிக்கர், ‘இனிமே வருஷா வருஷம் நம்ம ஆண்டு விழாவை சிம்பிளா கொண்டாடலாம். அப்பத்தான் மாணவர்களோட மற்ற திறமைகளை அவங்க வெளிப்படுத்தறதை பாக்க முடியும்!’ னாரு.


ஒருத்தன் மிமிக்ரி பண்ணி எம்.ஆர்.ராதா மாதிரி, டி.எஸ்.பாலையா மாதிரி பேசிக்காட்டி கைதட்டல் வாங்கினான்.

ஒரு ஸ்டூண்ட் ‘உனக்காக எல்லாம் உனக்காக...’-ன்னு ‘புதையல்’ படத்தில சந்திரபாபு பத்மினியை நினைச்சு தன்னோட புடலங்காய் ஒடம்பை வளைச்சு ஆடின டான்ஸை ஆடிக் காட்டினான்.

வகுப்புத் தோழன் தங்கவேலு, ஒரு கண்ணாடி பாட்டிலை ஒடைச்சு பொடியாக்கி, எல்லார் முன்னாலயும் வாயில போட்டு அஸ்கா சக்கரையை மென்னு சாப்பிடற மாதிரி மென்னு முழுங்கி எல்லோரையும் வாயைப் பொளக்க வச்சான்.

நான் எழுந்து நின்னேன். என்ன பண்ணப்போறேன்னு எல்லாரும் சைலண்ட்டா பார்த்தாங்க.

‘‘அனார்! அனார்! மறைந்து விட்டாயே. என் மாசற்ற ஜோதி மலையே! பெண்ணின் பெரும் பொருளே! பேரழகின் பிறப்பிடமே! என் கண்ணில் படாமல் உன் கட்டழகைக் கல்லறைக்குள் மூடி விட்டார்களா, மாபாவிகள்! காதலுக்கு ஓர் எடுத்துக்காட்டே! கவிஞர்களும் தொடுத்திட இயலாக் கற்பனை ஆரமே! சிரித்துச் செழித்த உன் சிங்கார முகத்தை எரித்துக் கெடுக்க வேண்டாமென்று கல்கொட்டி மூடினரோ கல்லினும் வலிய மனமுடையோர், காதலி! அனார்!’’ன்னு நாலரை நிமிஷ நீள வசனத்தை மூச்சுவிடாம பேசி, தாரை,தாரையா கண்ணில தண்ணி விட்டு நடிச்சு முடிச்சேன்.

கைதட்டல் விண்ணை முட்டிச்சும்பாங்களே! அப்படி ஒரு வரவேற்பு. பிரின்சிபல்ல இருந்து எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டினாங்க.

வாத்தியார் அகில இந்தியப் புகழ் ஏ.பி.சந்தானராஜ் வந்தாரு. அப்படியே என்னை அலாக்கா தூக்கி ‘‘ஹா... ஹா...!’’ன்னு சத்தம் போட்டு சிரிச்சிட்டே 3 சுத்து சுத்தி எறக்கி விட்டாரு.

‘‘என்ன மேன்? நீ கிளாஸ்ல புழுவாட்டமா இருக்கறதே தெரியாது. பின்னிப்பிட்டே.. ஒண்டர்ஃபுல்! ஒண்டர்ஃபுல்! இவ்வளவு திறமை உங்கிட்ட இருக்கறது தெரியவே இல்லை மேன்!’-னு கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்திட்டாரு.

ஜெனரல் டிராயிங் 2 வருஷ படிப்பு. அடுத்தது பெயிண்டிங் 3 வருஷம். அட்வான்ஸ் பெயிண்டிங் ஒரு வருஷம். ஆக ஆறு வருஷ படிப்பு. டிப்ளமோ குடுப்பாங்க. எங்க காலத்துக்கப்புறம் அது டிகிரி ஆயிடுச்சு.

பெயிண்டிங் செக்ஷன் வாத்தியாரு சந்தானராஜ் மாஸ்டர். அவர்கிட்டத்தான் 3 வருஷம் ஓவியம் கத்துக்கிட்டேன்.

வகுப்புக்கு வந்தா, ‘பெயிண்டிங் கிளாஸ்ல நான் உனக்கு வாத்தியார். நடிப்புல நீ பெரியவன். என் முன்னாடி நீ நிக்கக்கூடாது; ஸ்டூல் போட்டு உட்காரு’-ன்னு மிரட்டி உட்கார வைப்பாரு.

மிகச்சிறந்த ஓவியர்னு தேசிய விருது 6, 7 தடவை டெல்லி போய் வாங்கிட்டு வந்தவர்.

வெள்ளைக்கார சிறுமி (ஓவியம்)

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்லயிருந்து காலேஜுக்கு நடந்து வருவாரு. நாட்டுக்கோழி சேவல்கள் ரெண்டு வழில சண்டை போட்டுட்டு இருந்திச்சு. அப்படியே பிரம்மிச்சுப் போயி எப்படி தலைய சிலுப்பிக்குது - எப்படி சத்தம் குடுக்குது. எப்படி எகிறி பறந்து காலால அடுத்த சேவலை அடிக்குதுங்கறதை தன்னை மறந்து பாத்திட்டிருந்தாரு.

காலேஜ்ல பெல் அடிச்சு அரை மணி நேரம் கழிச்சுத்தான் வந்து சேர்ந்தாரு. அன்னிக்கு ABSTRACT STYLE நவீனமுறையில PALLET KNIFE- வச்சு பிரஷ் பயன்படுத்தாம, ரெண்டு கோழிங்க ஆக்ரோஷமா சண்டை போடறதை கேன்வாஸ்ல ஓவியமா தீட்டினாரு.

கண்ணால பாக்கறதை வரையறது வேற. சண்டை போடற கோழிங்க உணர்ச்சியை வெளிப்படுத்தற நவீன பாணி ஓவியம் வேற.

சராசரி மனிதனுக்குப் பார்த்தா புரியற மாதிரி ஓவியங்கள் இருக்கணும். கோழிங்க கோபத்தை விதவிதமான கலர்ல எதிரும்< புதிருமா வீசி அவர் வரைஞ்ச ஓவியங்களைப் புரிஞ்சுக்க ஒரு பயிற்சி வேணும். அந்தப் படமும் அந்த வருஷம் NATIONAL ART EXHIBITION-ல அவார்டு வாங்கிச்சு.

எப்பப் பார்த்தாலும் பரதேசி மாதிரி, குளிக்காத முகம், எண்ணையே பார்க்காத பரட்டை தலை, மூர் மார்க்கட்ல பயன்படுத்தி தரம்பீட்டு -விக்கறதுக்கு கடையில கிடக்கற பழைய டீ சர்ட், பேண்ட் வாங்கிப் போடறாரோன்னு சந்தேகப்படற மாதிரி டிரஸ் பண்ணுவாரு. தாடி வேற வச்சிருக்கறதனால ஞானக்கிறுக்கன்னு மத்த வாத்தியார்கள் நினைப்பாங்க.

பள்ளிக்கூடம் போய் படிச்சிருப்பாரான்னு சந்தேகம் கூட வரும். ஆனால் அவர் பேசற ஆங்கிலத்தை எந்தப் பேராசிரியரும் பேச முடியாது.

90 வயதுபாட்டி ஓவியம்

கொடைக்கானல்ல ஒரு வெள்ளைக்காரனுக்கு உதவியாளரா சின்ன வயசில 5, 6 வருஷம் இருந்திருக்காரு. அந்த வெள்ளைக்காரரோட பேசி ஆங்கில மொழிய தண்ணி மாதிரி ஆக்கிட்டாரு. தமிழ்ல சொல்ல முடியாத, விளக்க முடியாத விஷயங்களை ஆங்கிலத்தில் சாதாரணமா விளக்குவார்.

ஒரு நாள் என்னைக்கூப்பிட்டு, ‘என்னைப் பார்த்தா இந்த வாத்தியார்களுக்கு ஒரு பக்கிரி மாதிரி, லூசு மாதிரி தெரியுது. இவங்க எல்லோரையும் விட ‘டீக்’கா என்னால டிரஸ் பண்ண முடியும். ‘கோட்- சூட்- டை’ கட்ட முடியும். லைஃப் என்னன்னு எனக்கு நல்லா புரியும் மேன். நாளைக்கு பொணமா போற ஒடம்புக்கு இவனுக பவுடர் அடிச்சு, ஷேவ் பண்ணி அலங்காரம் பண்றானுக.

இதெல்லாம் முட்டாள்தனம். ART IS LONG; LIFE IS SHORT’னு நான் உள்வாங்கிட்டவன். என் படைப்புகள்தான் EVER LASTING- நான் போயிடுவேன். என் கற்பனையில இருக்கறதை CANVAS ல PAINTING -ஆ கொண்டு வர நான் உயிரோட இருக்கணும். குடிக்கத் தண்ணி, சாப்பிட உணவு, படுக்க ஒரு எடம் அது போதும் மேன் எனக்கு.

நீ ஆண்டு விழாவுல நடிச்சு எனக்கு அதிர்ச்சியை குடுத்திட்டே. சந்திரபாபு, அசோகன் ரெண்டு பேரும் என் ROOM MATES ஆக இருந்திருக்காங்க. சந்திரபாபு -மெழுகுவர்த்தி வெளிச்சத்தில முகத்தில 1000 EXPRESSIONS செஞ்சு காட்டுவான். பிரமிப்பா இருக்கும்.

நீ அவரை மாதிரி பிரமாதமான நடிகனா வருவே. ஒன்னோட ஓவியங்கள் அசாத்தியமானவை. ‘அகடமிக்’ ஓவியங்கள்ல மகாத்மா காந்தி படத்தை லைன் டிராயிங்கல நீ வரைஞ்சிருக்கியே. அதை நேஷனல் அவார்டு வாங்கின என்னால நினைச்சுக்கூட பாக்க முடியாது. அது 100% முழுமையான ஓவியம். நீ வரைஞ்சிருக்கிற தஞ்சாவூர் கோயில் -அது அவ்வளவுதாம்பா. அதுக்கு மேல வரைய முடியாது!’ன்னு நிறைய பேசியிருக்கார். ‘மாடர்ன் ஆர்ட்டுக்கு வா!’ன்னு பல தடவை அட்வைஸ் பண்ணினாரு. எனக்கு ஏனோ அதுல ஈடுபாடு வரலே.

லண்டன்- கேம்ரிட்ஜ் கிங்க்ஸ் காலேஜ்

‘அனார்கலி’- வசனம் பேசினதுக்கப்புறம், ‘இது MODERN ART WORLD - நீ வரையற பாணிய இந்த ஓவியர்கள் கொண்டாட மாட்டாங்க. நடிப்புத்துறைக்குப் போ!’ன்னு வற்புறுத்தினாரு.

‘காதலிக்க நேரமில்லை!’ படம் எடுக்க ஸ்ரீதர் முடிவு செஞ்சு முழுக்க, முழுக்க புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போறதா அறிவிச்சு கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்னு விளம்பரம் குடுத்திருந்தாரு.

‘டேய் பழனி! நீ அப்ளிகேஷன் போடு. நாம கொஞ்சம் போட்டோ எடுத்து அனுப்பலாம்’-னாரு.

ஓவியக்கல்லூரிக்கு மேற்குப் பகுதியில் செயிண்ட் -ஆண்ட்ரூஸ் சர்ச். சுமார் 200 ஆண்டு பழமையான சர்ச். அதைச்சுற்றி பெரிய பூங்கா இருக்கு. அதிகாலை 5.30 மணிக்கு தாமஸ் மவுண்ட்லயிருந்து ரயில் புடிச்சு அந்த சர்ச்சுக்கு வந்த சந்தானராஜின் ஆர்வத்தை இப்ப நினைச்சாலும் புல்லரிக்குது.

ஓவியக்கல்லூரி மாணவன் பவாநந்தம் கேமரா கொண்டு வந்தாரு. சந்தானராஜ் தனக்குப் பிடிச்ச கோணங்கள்ல என் முகத்தைப் படம் எடுத்தாரு. ஸ்ரீதருக்கு விண்ணப்பிச்சோம். ஆயிரக்கணக்கில விண்ணப்பங்கள் குவிஞ்சிது.

ஆனா, மலேசியாவில் படித்த திருச்சி இளைஞன் ரவிச்சந்திரனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடிச்சுது.

1964-ல் நான் சினிமாவில நடிக்கப்போறேன்னு சொன்னதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை, அவர் காட்டிய முகபாவத்தை வார்த்தைகளால விளக்க முடியாது.

மனித வடிவில் சிலை.

அன்னக்கிளி -பத்ரகாளி -வெள்ளிக்கிழமை விரதம், புது வெள்ளம் படங்களை அவரைத் தியேட்டருக்கு கூட்டிட்டுப் போய் காட்டினேன்.

நான் எதிர்பார்க்கற வேஷம் இன்னும் உனக்குக் கிடைக்கலே -நீ வேற நடிகன். உன்னுடைய உண்மையான திறமையை இதுவரைக்கும் யாரும் ‘எக்ஸ்பிளாய்ட்’ பண்ணலேன்னே சொன்னாரு.

ஒரு வேளை சிந்து பைரவி, இனி ஒரு சுதந்திரம், மறுபக்கம் படங்களை பார்த்திருந்தா திருப்தியடைஞ்சிருப்பாரோ என்னமோ. அதுக்குள்ளே அவரு உலகத்தை விட்டே போயிட்டாரு.

போராட்டமும் அடக்கு முறையும்

எது எப்படியிருந்தாலும், சாகும்வரை ஓவியனாகவே வாழ வேண்டும் என்று நினைத்து சென்னை வந்த என்னை உன் ஓவியங்கள் உனக்குச் சோறு போடாது; உங்கிட்ட வேற திறமை இருக்குன்னு மாற்றுப்பாதை காட்டிய மகான் ஏ.பி. சந்தானராஜ் மாஸ்டர்தான்.

---

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

தவறவிடாதீர்!Chithira solaiசித்திரச்சோலை 10சித்திரச்சோலைசிவகுமார் தொடர்நடிகர் சிவகுமார்சிவகுமார் ஓவியங்கள்Blogger specialActor sivakumarSivakumar paintings

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x