

கரோனா காலத்திலும் தடையின்றி குருதிக்கொடை கொடுத்து உயிர் காக்கும் தன்னலமற்ற சேவையாற்றி மனிதநேயத்தை உயிர்ப்பித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த 61 வயது‘இளைஞர்’ பி.வரதராசன்.
மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்தவர் பி.வரதராசன் (வயது 61). தந்தை பெரியாரின் தொண்டரான இவர், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் தலைவராக இருந்து இதுவரை 103 முறை குருதிக்கொடை கொடுத்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காலத்திலும் 70 முறைகுருதிக்கொடை கொடுத்ததை மதுரையின் முன்னாள் ஆட்சியர் டி.ஜி.வினய்பாராட்டி விருது வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பி.வரதராசன் கூறுகையில், பெரியாரின் தொண்டராக இருந்து சாதி மறுப்பு திருமணம் செய்தேன். அமுது.ரசினி என்பவரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டேன்.
பொது வாழ்க்கைக்கு பிள்ளைகள் இடையூறாக இருந்துவிடக்கூடாது எனக்கருதி குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை. மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறேன்.
மேலும் தந்தைபெரியார் குருதிக்கொடைக்கழகத்தின் தலைவராக இருந்து குருதிக்கொடை அளித்து வருகிறேன். இதுவரை சுமார் 103 முறை குருதிக்கொடை செய்துள்ளேன்.
எனதுரத்த வகை அரியவகையான ‘ஏ நெகடிவ்’ வகையைச் சேர்ந்தது. கரோனா ஊரடங்கு காலத்தில் மகப்பேறு, புற்றுநோய், கரோனா சிகிச்சையிலிருந்த 70 பேருக்கு குருதிக்கொடை கொடுத்துள்ளேன். பல்வேறு முகாம்கள் நடத்தி 10 ஆயிரம் பேருக்கு மேல் குருதிக்கொடை செய்துள்ளோம்.
கரோனாகாலத்தில் 70 பேருக்கு குருதிக்கொடை வழங்கியதை பாராட்டி அப்போதைய ஆட்சியர் டி.ஜி.வினய்விருது வழங்கினார்.
மேலும், புரட்சிக்கவிஞர் மன்றம் சார்பில் எம்பள்ளியில் தமிழறிஞர்களின் இலக்கியக் கூட்டங்களையும், புத்தக வெளியீடுகளையும் நடத்தி வருகிறேன். உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சையில் குருதிக்கொடை கொடுக்க எப்போதும் தயாராகவே உள்ளேன், என்றார்.