

உயிரிழந்த கோயில் காளைக்கு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தி நத்தம் கிராம மக்கள் காண்போரை நெகிழவைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திநகரில் மலையாளத்து கருப்பு, மந்தையம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்குச் சொந்தமான கோயில் காளை ஒன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது. இதையடுத்து இறந்த காளையின் உடல் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டு ஊர்மக்கள் இறுதிமரியாதை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சுற்றுப்புற கிராமமக்கள் திரண்டு வந்து காளைக்கு அஞ்சலி செலுத்தினர். சந்தனம், ஜவ்வாது பூசி, வேட்டி, துண்டு போர்த்தி காளைக்கு கோயில் சார்பில் இறுதிமரியாதை செலுத்தப்பட்டது.
இறந்த கோயில் காளை அலங்காநல்லூர், பாலமேடு, அரளிப்பாறை, கொசவபட்டி உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுபோட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.
மேளதாளம் முழுங்க இறுதி ஊர்வலம் நடத்தி கோயில் காளையை அடக்கம் செய்தனர்.