

இந்தியாவில் - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத் திட்டம் வகுத்தபோது... தமிழ் மொழியைப் பேசும் மக்களைக் கொண்ட பகுதி 1.11.1956இல் ‘மெட்ராஸ் மாகாணம்’எனப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நம் மாநிலத்துக்கு அழகுத் தமிழில் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டு, சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் 'தமிழ்நாடு' எனும் பெயர் சிறந்தோங்கி விளங்குகிறது.
இந்நாளைச் சிறப்பிக்கும் வகையில்... மரபுக் கவிதையில் உச்சம்தொட்ட படைப்பாளர், ‘புகாரில் ஒரு நாள்’எனும் கவிதைக்காக இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவின் திருக்கரங்களால் தங்கப்பதக்கம் பெற்ற கவிக்கோ ஞானச்செல்வன் எழுதியுள்ள கவிதையினை வாசகர்களுக்கு வழங்குகிறோம்:
வரலாற்றை மறக்கலாமா?
தேசியமாம் பூக்காட்டில் மலர்ந்த நல்ல
திருமலரே தமிழ்நாடு நவம்பர் ஒன்று
மாசிரியத் தமிழ்நிலத்தார் மனத்தில் நின்று
மணம்பரப்ப வேண்டாமா?
தமிழர் கூடிப் பேசரிய விழாவெடுத்து
மகிழ்கின் றோமா?
பெருநாளாய்த் திருநாளாய் மதிக்கின் றோமா?
கூசிடவே வேண்டும்நாம் கொண்டாட
இனியேனும் மனங்கொள் வோமா ?
ஆன்றமைந்த மாநிலத்தாய் தனிய மைந்த
ஐம்பத்து ஆறினிலே நவம்பர் ஒன்று
தேன்பிலிற்ற வேண்டாமா செவியில் நின்று!
திருநாட்டுச் செந்தமிழீர் சிந்திப் பீரே!
வான்முட்டப் பெருமைகளைப் பேசு கின்றோம்
வரலாற்றில் கடந்து வந்த பாதை தன்னை
ஏன்மறந்தோம்? எத்தனைபேர் ஈகம் செய்தார்?
எல்லைகளை மீட்டவரை மறந்து விட்டோம்!
எஞ்சியசென் னைமாகா ணமெனும் கெட்ட
இழிவுதனை நீக்கியோரை எண்ணு வோமா?
அஞ்செவியார் அமுதமெனத் தமிழ்நாடு டென்றே
அழுகுபெயர் போராடி வென்ற வர்யார்?
விஞ்சுபுகழ் சென்னைதனைக் காத்த ளித்த
வீறுறுயர்ந்த தலைவர்தமை நினைப்ப துண்டாட?
புஞ்சைமனம் கொண்டவராய் வாழு கின்றோம்;
புகழ்பூத்த வரலாற்றை மறக்க லாமோ?
- கவிக்கோ ஞானச்செல்வன்