

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது நாகசுர வித்வான்களின் நிகழ்ச்சிகளை யூடியூபில் பதிவேற்றி காத்திரமான கர்னாடக இசை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கின்றது பரிவாதினி அமைப்பு.
பரிவாதினி அமைப்பின் கீழ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, அவற்றை முறையாக ஒலித் திருத்தம் செய்து வெளியிடுவது போன்ற பணிகளில் ஆத்மார்த்தமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர் பரிவாதினி அமைப்பின் நிறுவனர் லலிதா ராமும் அவரின் நண்பர் சுவாமிமலை சரவணனும்.
இதுகுறித்து அவர்கள் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசும்போது, ''ஆண்டுதோறும் நவராத்திரியின்போது நடக்கும் கச்சேரிகளைக் கரோனா பெருந்தொற்றுப் பேரிடர் ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டது.
இந்தக் கரோனா காலத்தில் கச்சேரிகளை வைக்கலாமா, வேண்டாமா என்று எங்கள் மனதில் கேள்வி அலைகள் எழுந்தன. எண்ண அலைகளின் ஊசலாட்டத்தில், அற்புதமான கலைஞர்களின் நாகசுர, தவில் வாசிப்பு, ரசிகர்களைச் சென்றடைய நம்மிடமிருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தோம்.
கலைஞர்களிடம் உங்களின் சவுகரியப்படி கச்சேரியைப் பதிவு செய்து அனுப்புங்கள், அதன் ஒலித்தரத்தை இறுதி செய்து நாங்கள் யூடியூபில் நாளுக்கு ஒன்றாய்ப் பதிவேற்றிக் கொள்கிறோம் என்று சொன்னோம். பந்தமங்களம் யுவராஜ், பழையசீவரம் காளிதாஸ், கொட்டூர் கே.என்.ஆர். வெங்கடேசன், பழனி சிவசாமி, கல்யாணபுரம் கே.ஜி.ஸ்ரீநிவாசன், மாம்பலம் சிவகுமார், கீழ்வெலுர் என்.ஜி.ஜி. பாலசுந்தரம், தேசூர் சகோதரர்கள், திருமகளம் டி.எஸ்.பாண்டியன் ஆகிய கலைஞர்கள் அற்புதமான தங்களின் வாசிப்பை ஒளி, ஒலி வடிவில் எங்களுக்கு அனுப்பினர். அதன் ஒலித்தரத்தை இறுதி செய்து அவற்றை நாள் ஒன்றுக்கு ஒரு கச்சேரியாக யூடியூபில் பதிவேற்றினோம்'' என்றனர்.
ஒவ்வொரு கலைஞரின் நாகசுர வாசிப்பும் நம்மை இசையைச் சுவாசிக்க வைப்பதுபோல் இருந்தது. காலத்தைக் கடந்து ஒலிக்கும் அந்தக் கலைஞர்களின் நாகசுர இசையோடு நம் மனம் இரண்டறக் கலக்கிறது. மனம் லேசாகிறது.
நவராத்திரியில் ஒலித்த நாகசுர இசையைக் கேட்க: