

கோவை மாவட்டத்தில் காசிகவுண்டன்புதூர் எனும் எளிய கிராமத்தில் பிறந்து, சென்னையில் 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, 40 ஆண்டுகள் திரைப்படங்களிலும் நாடக மேடையிலும் சின்னதிரையிலும் உணர்ச்சிமிக்க நடிப்பின் மூலம் மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் பன்முகக் கலைஞர் சிவகுமார். நடிப்புத் துறையில் இருந்தாலும் யதார்த்த வகை ஓவியத்தில் தனித் தடம் பதித்தார். பின்னர், எழுத்தாளராக, பேச்சாளராகத் தனது எல்லைகளை விரித்துக் கொண்டார். இன்று 80-ம் அகவை காணும் பன்முகக் கலைஞரைக் கவுரவம் செய்யும் விதமாக மூத்த ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகரும் கவிஞருமான திரு.வீரபாண்டியன் (திருநாவுக்கரசு வீரபாண்டியன்) எளிய மரபுக் கவிதை எழுதி வாழ்த்தியுள்ளார்.
அந்தக் கவிதை இதோ:
தமிழ்போல வாழ்ந்திடுக!
சிவக்குமார் என்றிவரைச் சொல்வது பொருத்தமில்லை;
தவக்குமார் என்றுநான் தமிழ்கொண்டு வாழ்த்துகிறேன்!
எண்பதே வயதான இளைஞனிவன்! முதுமையைத்
தின்றுவிட்டு நிமிர்ந்துநிற்கும் தேக்குமரக் கிழவனிவன்!
முன்னோர்செய் தவங்களினால் முகிழ்த்துவந்த பொற்பூவே;
பின்னருள்ள பேரறத்தைப் பேணவந்த அற்புதமே!
பாரதத்தின் தருமனைப் பார்த்ததில்லை என்பதனால்
நேரெதிரே உனைநிறுத்தி நிஜமென்று காட்டுகிறோம்!
உலைபொங்கச் சோறளித்து உடல்காக்கக் துணிகொடுத்து
விலையில்லா கல்வியினை வெள்ளமெனப் பாயவிட்டு
சூழ்கொண்ட குழந்தைக்குச் சுகமளிக்கும் கர்ப்பிணிபோல்
பால் நினைத்த மாத்திரத்தில் பரிந்தூட் டும் தாயைப்போல்
ஊர்நடுவே பழுத்த மரம்! ஊருணியாய் வாழும் நிலம்!
யாரருகில் வந்தாலும் அரவணைக்கும் அன்னை மனம்!
இத்தனையும் உனக்கென்று யார்கொடுத்தார் புண்ணியனே!
புத்தனிலும் காந்திலும் புடம்போட்ட சத்தியனே!
கம்பனிலும் கரைகண்டாய் - கர்ணனிலும் நிலை கொண்டாய்;
நம்புவதற் கியலாத நினைவாற்றல் நீ கொண்டாய்!
காணாமல் போய்விடான் கண்ணதாசன்; கண்டிருந்தால்
நாணாமல் உன்னைத்தான் நாவுக்கரச னென்பான்!
ஆலமரம் போல்நாளும் அகண்டு நிழல்கொடுத்துக்
காலமெலாம் வாழ்ந்திடுக! கருணைமழை பொழிந்திடுக!
கண்ணம்மா பேட்டையிலே கண்ணுறங்கும் அன்னை உன்னைத்
திண்ணமாய் வாழ்த்திடுவாள்; சந்ததியைக் காத்திடுவாள்!
கம்பனாய் வள்ளுவனாய்க் காலமெலாம் நிலைத்திருக்கத்
தம்பிநான் வாழ்த்துகிறேன்! தமிழ்போல வாழ்ந்திடுக!!
- திரு.வீரபாண்டியன்
தொடர்புக்கு: thiru.veerapandian@gmail.com