

பொதுவாக நுரையீரல் மென்மையாக இருக்கும். ஆனால் கரோனா வைரஸினால் இறந்து போன நபர் ஒருவரின் உடலை பரிசோதனை ஆய்வு மேற்கொண்ட போது தோலால் ஆனது போல் கனமாக இருந்தது தெரியவந்துள்ளது.
கரோனா பாதித்து பலியான நபர் ஒருவரின் உடலை 15 மணி நேரத்துக்குப் பிறகு தடயவியல் துறை நிபுணர் மருத்துவர் தினேஷ் குமார் உடற்கூராய்வு செய்த போது அவருக்கே அதிர்ச்சி காத்திருந்தது. இவர் ஆக்ஸ்போர்ட் மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்றவர்.
இதுவரை கரோனா பாதித்து இறந்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்து வருகின்றனர், பிரேதப் பரிசோதனை செய்வதில்லை. ஆனால் மருத்துவர் தினேஷ் ராவ் கரோனாவினால் நம் உடல் என்னவெல்லாம் மாற்றமடைந்துள்ளது, எப்படி மரணம் சம்பவிக்கிறது என்பதை தன் தனிப்பட்ட உடற்கூராய்வு மூலம் கண்டறிந்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இப்படித்தான் அவர் இறந்த கரோனா நோயாளி ஒருவரின் உடலை ஆய்வு செய்த போது கழுத்து, முகம், தோல், உள்ளுறுப்பு எங்கேயும் கரோனா வைரஸ் இல்லை. மூச்சுக்குழல் பகுதியிலும் இல்லை என்பதைக் கண்டறிந்தார். ஆனால் ஆர்.டி.-பிசிஆர் சோதனையில் மூக்குத் தொண்டை பகுதியில் கரோனா இருப்பதாக தெரியவந்தது.
உடலில் உள்ள நுரையீரல் பொதுவாக மென்மையாக இருக்கும் ஆனால் இறந்த இந்தக் கரோனா நோயாளியின் உடலில் நுரையீரல் கனமாக 2.1 கிலோ எடையிருந்தது. தொடும்போதும் கடினமாக இருந்திருக்கிறது. இந்த நோயாளி 14 நாட்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்.
கரோனா வைரஸ் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ளது போல் கரோனா பாதிப்பு இந்தியாவில் இருப்பதில்லை என்று தன் உடற்கூராய்வை முடித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்த தினேஷ் ராவ். இந்த விவகாரத்தில் இறந்த கரோனா நோயாளிகளை உடற்கூராய்வு செய்தால் மேலும் நமக்கு அந்த வைரஸ் பற்றி பல உண்மைகள் தெரியவரலாம் என்கிறார். மேலும் இந்த விஷயத்தில் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்கிறார் தினேஷ் ராவ்.