

எல்லாவற்றுக்கும் ஒரு சான்று வேண்டும். நீங்கள் பிறந்ததற்கும் கூட! அது ஏன்? எதற்கு? எப்படி? என்று பார்ப்போம்.
பிறப்புச் சான்றிதழ் ஏன் தேவை?
பிறப்புச் சான்றிதழ் ஒருவருக்கான அடிப்படை சட்ட ஆவணம். ஒருவரின் பிறப்பையும், அவர் எந்த நாட்டின் பிரஜை என்பதையும் நிறுவ அது தேவை.
பிறப்புச் சான்றிதழ் எதற்கெல்லாம் தேவை?
பள்ளியில் குழந்தைகளை சேர்க்க, வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுக்க, குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, உங்கள் வயதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் அடிப்படை ஆவணமாக தேவை.
பிறப்புச் சான்றிதழ் வழங்குவது யார் பொறுப்பு?
மாநகராட்சி பகுதிகளில் பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவது மாநகராட்சி நிர்வாகங்களின் பொறுப்பாகும். அனைத்து மாநகராட்சிகளிலும் பிறப்புச் சான்றிதழ் பணிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அல்லாத பகுதிகளில் பிறந்தவர்களுக்கு அந்தந்த பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும். நகராட்சி உள்ளிட்ட சில உள்ளாட்சி அமைப்புகளிலும் இதற்கான நடைமுறைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
பிறப்புச் சான்றிதழ் எப்படி பெறுவது?
குழந்தை பிறந்தவுடன், பிறந்த தேதி, நேரம், பெற்றோரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் பதிவு செய்துகொள் ளும். அந்தத் தகவல்களை குழந்தை பிறந்த மருத்துவமனை அமைந்துள்ள உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தபால் வழியாக அல்லது இணையதளம் வழியாக மருத்துவமனை நிர்வாகம் மூலம் அனுப்ப வேண்டும். தகவல்கள் உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
கணினிமயமாக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் இதற்கு வேறு ஏதேனும் நடைமுறை உள்ளதா?
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இதற்கான நடைமுறை கணினிமயமாக்கப்படவில்லை. ஆனால், சென்னை மாநகராட்சி யில் இதற்கான நடைமுறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கணினிமயமாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பத்தால் சான்றிதழ் அந்த உள்ளாட்சி அமைப்பின் இணையதளத்திலும் வெளியிடப்படும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுவே முதன்மை பிறப்பு சான்றிதழாக கருதப்படும்.
ஒருவர் எத்தனை நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழை பெறலாம்?
குழந்தையின் பிறப்பை 21 நாட்களுக்குள் மருத்துவமனை மூலமாகவே பதிவு செய்யலாம். 30 நாட்களுக்கு மேல், ஒரு வருடத்துக்குள் எனில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரியிடம் கடிதம் பெற்று பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு வருடத்துக்கு மேல் எனில் குற்றவியல் நீதிபதியின் ஆணை பெற்ற பிறகே பதிவு செய்ய முடியும்.