Last Updated : 16 Oct, 2020 06:18 PM

 

Published : 16 Oct 2020 06:18 PM
Last Updated : 16 Oct 2020 06:18 PM

சிவா அறக்கட்டளையின் தசரா நாட்டிய உத்சவ்

குச்சிப்புடி நாட்டிய மேதை வேம்பட்டி சின்ன சத்யத்தின் பிரதான சீடர்களில் ஒருவர் மாதவபெட்டி மூர்த்தி. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மேதையின் குருகுலத்தில் குச்சிப்புடி நடனத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட மூர்த்தி, குருவின் நாட்டியப் பள்ளி சார்பில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குச்சிப்புடி நாட்டியத்தின் புகழை நிலைநாட்டியவர் மாதவபெட்டி மூர்த்தி.

தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஸ்வராபிஷேகம்’ திரைப்படத்தில் நடித்துள்ள மூர்த்தி, பிரபல நடனக் கலைஞரான ஹேமமாலினியோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கும் சிவன் – பார்வதி நடனங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அண்மையில் கின்னஸ் சாதனைக்காக ஆந்திர மாநிலத்தின் கலாச்சாரத் துறை ஏற்பாடு செய்திருந்த நாட்டிய நிறைவு விழாவில் ஆயிரம் நடனக் கலைஞர்களுடன் இவர் நிகழ்த்திய சிவ தாண்டவம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இளம் கலைஞர்களுக்கு மேடை

மாதவபெட்டி மூர்த்தி இயக்குநராக இருக்கும் குச்சிப்புடி நாட்டியப் பள்ளியான சிவா அறக்கட்டளை, தசரா நாட்டிய உத்சவத்தை அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி 26 வரை சமூக வலைதளங்களின் வழியாக நடத்துகிறது.

இந்த மெய்நிகர் நாட்டிய நிகழ்வில் பிரபல கலைஞர்கள் ஹேமமாலினி, வி.பி.தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன், அனிதா ரத்னம், ரேவதி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர், இளம் கலைஞர்களையும் கலையையும் வாழ்த்திப் பேசுகின்றனர்.

இந்த மெய்நிகர் நாட்டிய விழாவில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், ஒடிஸி, கதக், அசாமின் பாரம்பரியமான நடனமான மயூர்பன்ச் சாவ் ஆகிய நடனங்களை 33 இளம் கலைஞர்கள் நிகழ்த்தவிருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x