ஜெய் போடுவோம்: ராணுவ வீரர்களுக்கு ஒரு தெம்மாங்கு!

ஜெய் போடுவோம்: ராணுவ வீரர்களுக்கு ஒரு தெம்மாங்கு!
Updated on
1 min read

சீறிவரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பாட்டுகள் பாடி வைத்திருக்கிறோம். நாம் சோற்றில் கை வைப்பதற்காகச் சேற்றில் கால் வைக்கும் உழவர்களைப் பற்றியும் பாடியிருக்கிறோம்.

இந்நிலையில், நாம் உறங்கும்போதும் பனிமலையின் உச்சியில் நமக்காக விழித்திருக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் தீரத்தையும் ‘ஜெய் போடுவோம்’ எனத் தொடங்கும் பாட்டில் இறக்கி வைத்திருக்கிறார் பிரபல வயலின் வித்வான் லால்குடி கிருஷ்ணன். பாடலை எழுதியதோடு தன்னிடம் இசை பயிலும் விஜயா சங்கர், நாராயண் ஷர்மா ஆகியோரை அருமையாகப் பாடவும் வைத்திருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடல்களுக்கே உரிய தெம்மாங்கு விஜயா சங்கரிடமிருந்து தொடங்கும்போதே மனதின் எல்லாக் கதவுகளும் திறந்துகொள்கின்றன.

‘கடும் பனி… கொல்லும் குளிர்… சுடும் வெயில்… நடு நிசி.. கொல்லும் பசி… எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு… எல்லையில்லா தியாகம் பண்ணி… எல்லையத்தான் காக்கிறாங்க…’- வெகு இயல்பாக இந்த மண்ணின் காவலர்களை வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களின் மொழியில் வாழ்த்துவதுதான் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

எதிரிகளின் கொடுஞ்சிறையில் சிக்கிய வீரமகன் அபிநந்தன் மீண்டு வந்த காட்சிகளும் எண்ணற்ற வீரர்களின் தியாகங்களும் பாட்டில் வார்த்தைகளாக, சம்பவங்களாக நிழலாடுகின்றன.

‘எதிரிகளும் குண்டுகளும் இவங்களுக்குக் குண்டுமணி’ என்னும் வரிகளில் இருக்கும் உருக்கம், வீர மரணம் அடைந்தவர்களின் உருவங்களை நம் மனக்கண்ணில் தோன்ற வைக்கிறது. பாடலுக்கேற்ற இசையும் வார்த்தைகளுக்கேற்ற காட்சிகளின் தொகுப்பும் கேட்கும் ஒவ்வொருவருக்கும் பாடலை இன்னமும் நெருக்கமாகக் கொண்டு வருவதில் துணை செய்கின்றன.

‘ஜெய்போடுவோம்’ பாடலைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in