

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொறியியல் கல்லூரி மாணவி கரோனா ஊரடங்கு விடுமுறையில் பழைய காலி பாட்டிகளில் அழகிய ஓவியங்களை வரைந்தும், கலைப்பொருட்களை உருவாக்கியும் கவனம் ஈர்த்து வருகிறார்.
காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதி உலகப்பன், கண்ணம்மாள். உலகப்பன் திருப்புவனத்தில் உதவி மின் செயற்பொறியாளராக உள்ளார். இவரது மகள் கீர்த்திகா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சிறுவயதில் ஆர்வமுடன் ஓவியம் வரைந்து வந்த அவர், பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததும் ஓவியம் வரைவதை கைவிட்டார். இந்நிலையில் கரோனா ஊரடங்கால் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டநிலையில் வீட்டில் இருந்த கீர்த்திகா மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கினார்.
முதலில் காகிதத்தில் வரைந்த அவர், ஒரு மாறுதலுக்காக காலி பாட்டில்களில் ஓவியங்களை வரைந்தார்.
அந்த ஓவியங்கள் தத்துவரூபமாக இருந்ததால், அவரது பெற்றோரும் பாட்டிலில் ஓவியம் வரைவதை ஊக்குவித்தனர். அதற்காக காலி பாட்டில்களை சேகரித்து கொடுத்தனர்.
மேலும் கீர்த்திகாக வீணாக தூக்கி எறியும் அட்டைகள், வளையல்கள் போன்ற மற்ற பொருட்களிலும் பல்வேறு கலைப்பொருட்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.
இதுகுறித்து மாணவி கீர்த்திகா கூறியதாவது:
உயர்கல்விக்காக ஓவியம் வரைவதை நிறுத்தினேன். ஆனால் எனது திறமை மீண்டும் புதுப்பிக்க கரோனா ஊரடங்கு எனக்கு கைகொடுத்தது. எனது ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் ஓவியம் வரைந்து வருகிறேன். எனது படைப்புகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன்.
இதை பார்த்த வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் என்னுடைய படைப்புகளை வாங்கி வருகின்றனர். தூக்கி எறியும் காலி பாட்டில்களைில் ஓவியம் வரைவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது எனக்கு சந்தோஷமாக உள்ளது, என்று கூறினார்.