

வாராய் நீ வாராய், கல்யாண சமையல் சாதம், ஆசையே அலைபோலே, அடிக்கிற கைதான் அணைக்கும்… போன்ற மறக்க முடியாத பாடல்களால் நம் மனத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் திருச்சி லோகநாதன். அவரின் மூன்றாம் இசை வாரிசான டி.எல்.தியாகராஜன் ‘வாரம்தோறும் வெண்பா’ என்னும் தலைப்பில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சாய்பாபாவைப் போற்றி, துதிகளைப் பாடி யூடியூபில் பதிவேற்றி வருகிறார்.
சென்னை நந்தனம் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், கல்லூரியில் படித்தபோதே இசைக் குழுக்களில் பாடி வந்தவர். மலேசியா வாசுதேவன், சந்திரபோஸ் ஆகியோரின் இசைக் குழுக்களில் பாடியவர். சந்திரபோஸின் இசையில் ‘தேடும் என் காதல் பெண் பாவை’ என்னும் மு.மேத்தாவின் பாடலை வாணி ஜெயராமோடு இணைந்து பாடி, பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘வாய்க்கொழுப்பு’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணி பாடியிருக்கிறார் தியாகராஜன்.
ஐயப்ப சரித்திரம், திருவிளையாடல், வள்ளித் திருமணம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய நாட்டிய நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளார் டி.எல்.தியாகராஜன். இவற்றில் வள்ளித் திருமணம், தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகத்துக்கான பாடல்களையும் இவரே எழுதி உள்ளார்.
செட்டிநாட்டுத் தெய்வங்கள், சரணம் அய்யப்பா, ஜயஜய சாயீ, ஆனை முகமும் ஆறு முகமும், சிவாலயம், பாவ நாராயண சாமி, அழகொல்லை விநாயகர், சாய் மகா சாய், பாபா உன்னைக் கண்டுபுட்டா.. உள்ளிட்ட இவரின் இசைக் குறுந்தகடுகள் வெளிவந்திருக்கின்றன.
இருநூற்றுக்கும் அதிகமான பக்திப் பாடல்களை எழுதியிருக்கும் இவர் அண்மையில் வெளிவந்த, ’ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல’ திரைப்படத்தில் ரெஹைனா இசையமைப்பில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இவர் இசையமைத்துப் பாடியிருக்கும் அருணகிரிநாதர் அருளிய ‘நீலங்கொள் மேகத்தின்’ (திருமணம் நடக்க) என்னும் பாடலையும், திருமணமான தம்பதிகளுக்குக் குழந்தை செல்வம் கிடைப்பதற்கு ‘ஜெகமாயை’ என்னும் பாடலையும் சமூக வலைதளங்களில் ஏறக்குறைய ஏழு லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.
‘வியாழன்தோறும் வெண்பாவில்’ இவர் பாடும் பாடல்களைக் கவிஞர் கு.மா.பா. திருநாவுக்கரசு, மீ.மணிகண்டன், வா.கோ. இளங்கோவன், சாயி செல்வம், கவிஞர் பகவான் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘வாரம்தோறும் வெண்பா’ பாடலைக் காண: https://youtu.be/SnBiWfi7Q18