Published : 12 Oct 2020 10:29 AM
Last Updated : 12 Oct 2020 10:29 AM

சித்திரச்சோலை 3: அந்த வெள்ளி கூஜா

சிவகுமார்

1958-ஜூன் 15-லிருந்து ஜூலை 15 வரைக்கும்தான் ராயப்பேட்டை வடக்கு கோபாலபுரம் முதல் தெரு 4-ம் எண் வீட்டுல இருந்தோம். அதே வீட்டில் இருந்த ஓ.ஏ.கே.தேவர்- கே.டி. சந்தானம், பயில்வான் கிருஷ்ணன் (சம்பூர்ண ராமாயணத்தில் அனுமன் வேஷம் போட்டவர்) எல்லோருக்கும் ‘பை,பை..’ சொல்லி விட்டு ஆயிரம் விளக்கு பகுதியை ஒட்டியுள்ள ‘ரட்லண்ட்’ கேட் பகுதியில் ஜானகி.ஏ.கரீம்-ங்கிற டாக்டர் வீட்டின் பின்பகுதியில் ஒரு 10- அடிக்கு 10 அடி சதுரமுள்ள ரூமில் நானும் மாமா மகன் ரத்தினமும் 50 ரூபாய் வாடகைக்கு தங்கினோம்.

ரத்தினம் புதுப்பேட்டை ஹாரிஸ் ரோடு-ஜெயந்தி டுடோரியல் போயிடுவாரு. நான் நடந்து குலாம் அப்பாஸ் அலிகான் தெரு வழியாக மவுண்ட் ரோடு வந்து -தீப்பெட்டி வடிவத்தில தெக்குப் பாத்து இருந்த முரசொலி-தென்னகம்-தென்றல் அலுவலகங்களைத் தாண்டி ஆயிரம் விளக்கு ‘கபே’யில் காலை சிற்றுண்டி முடிப்பேன்.

ஓ.ஏ.கே.தேவருடன்

பராசக்தி -மனோகரா-மலைக்கள்ளன் -புதையல்- ராஜாராணி -ரங்கோன் ராதா படங்களுக்கு திரைக் கதை- வசனம் எழுதி அரசியலை விட திரையுலகில் கலைஞர் பிரபலமாக இருந்த காலம். முரசொலி கட்டிடம் ஒரு மாடி- அதன் மேல் ‘கையோடு’ வேய்ந்திருக்கும். அடுத்து ‘தென்னகம்’ பத்திரிகை. கே.ஏ.மதியழகன் நடத்தினார். பக்கத்தில ‘தென்றல்’ இதழ் கண்ணதாசன் அலுவலகம். இதையெல்லாம் தாண்டினால் ஆயிரம் விளக்கு தர்கா வரும். அதற்கு பின்புறம் வடக்குப் பார்த்து சர்ச் பார்க் கான்வெண்ட். அதில்தான் ஜெயலலிதா அம்மையார் படித்தார்.

இப்போது அண்ணாசாலை -அப்போது மவுண்ட் ரோடு -அதில் அப்பல்லோ மெயின் மருத்துவமனை பிரிவு தாண்டியதும் தெற்குப் பார்த்து ஆயிரம் விளக்கு கபே. பொங்கல் வடை -மங்களூர் பிராமணர்கள் தயாரிப்பு. இப்போதும் வாசம் நினைவுக்கு வருகிறது.

சிற்றுண்டி முடித்துப் பார்த்தால் -தாராபுரம் தாண்டி தூரத்தில் பழனிமலை தென்படும்போது ஒரு பரவசம் ஏற்படுமே அதுபோல கண்ணுக்கெட்டிய தூரத்தில் எல்.ஐ.சி கட்டிடம்.

12 -வது மாடி வேலை நடந்து கொண்டிருந்தது. கிராமத்தில் இருந்த போது ஒரே ஒரு நாள் குருடி மலை உச்சியை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று சிறுவனாக கனவு கண்டது போல -இந்த எல்.ஐ.சி -மேலே ஒரு நாள் ஏறிப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

எல்ஐசி 1961ல் நான் வரைந்தது

வெள்ளைக்காரன் காலத்தில் 1800-களில் கட்டப்பட்ட சென்ட்ரல் ரயில்நிலையம், ஹைகோர்ட், சட்டக்கல்லூரி, கடற்கரை சாலையில் யூனிவர்சிட்டி பில்டிங், செனேட் பில்டிங், தாமஸ் மன்றோ சிலைதான் சென்னையின் அடையாளமாக ரொம்ப காலம் இருந்தது. இப்போது எல்.ஐ.சி கட்டிடம் 14-வது மாடி புது அடையாளம். கிராமத்திலிருந்து சென்னையை சுற்றிப் பார்க்க வருவோர் லிஸ்ட்டில் எல்.ஐ.சி. கட்டிடமும் சேர்ந்து கொண்டது.

எல்.ஐ.சி 10-வது மாடி கட்டிக் கொண்டிருந்தபோது 1957-ஆகஸ்ட் 30-ந்தேதி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்து விட்டார்.

எப்படியோ அனுமதி வாங்கி -கலைவாணர் ஊர்வலத்தை ‘பதிபக்தி’ படத்தின் ஒளிப்பதிவாளர் விட்டல்ராவ் -எல்.ஐ.சி கட்டிடத்தின் மீதிருந்து கருப்பு வெள்ளை ஃபிலிமில் படமாக்கி- மோகன் ஆர்ட்ஸில் ஒரு நாள் முதலாளியோடு போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கதவோரம் ஒளிந்து நின்று அக்காட்சியை பார்த்தேன். என்ன சொல்ல? காமிரா தூரத்தே ஃபோகஸ் செய்யப்படுகிறது. ‘TIGHT ZOOM’ செய்த போது 2 கி.மீ தூரம் தாண்டி ஜெமினி ஸ்டுடியோ வாசல், அதற்கு ஒரு பர்லாங் பின்னால் சன் தியேட்டர். அது தாண்டி வெறும் மனிதத்தலைகள். காமிரா PAN செய்து முன்னால் வருகிறது. ஜெமினி ரவுண்டானா- ஆயிரம் விளக்கு, - விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட் கட்டடம், ஸ்பென்சர் கட்டடம், காயிதே மில்லத் கல்லூரி வரை ரோடே தெரியவில்லை. மனித தலைகள் எல்.ஐ.சி-க்கு நேர் கீழே வேனில் கலைவாணர் பூதவுடல் பூமாலை கார் தோரணங்களுக்கு நடுவில். காமிரா முன்னால் போகிறது. ஹிக்கின்பாதம்ஸ், -பிலால் ஓட்டல் -புகாரி, நேரு கபே (இன்று தேவி தியேட்டர் அருகில்) மவுண்ட் ரோடு, கடற்கரை, எங்கும் மனித தலைகள் -தரையோ, தார் ரோடோ இம்மியும் தென்படவில்லை.

கலைவாணர் மறைவுக்கு ததும்பிய கூட்டம்.

ஒரு மனிதனுக்கு இப்படி மரியாதையா? இப்படி ஒரு கூட்டத்தை 17 வயதில் பார்த்து ஆடிப் போய் விட்டேன்.

நாட்டின் முதலமைச்சராக இருந்து அண்ணா மறைந்தபோது உலகமே வியக்கும் அளவுக்கு பல லட்சம் மக்கள் கூடினர். காமராஜர், எம்.ஜி.ஆர் மறைந்தபோதும் தமிழகமே சென்னையில் குவிந்திருந்தது.

ஆனால் அவர்களெல்லாம் நாடாண்ட முதலமைச்சர்கள். கலைவாணர் புகழ் பெற்ற ஹீரோ கூட இல்லை. ஒரு நகைச்சுவை நடிகர் அவ்வளவுதான். -அவருக்கு அப்படி மூச்சுமுட்டும் அளவுக்கு சென்னையில் ரசிகர்கள் கூடி திணறடித்தனர்.

அண்ணா முதலமைச்சராக இருந்த கடைசி நாட்களில் 1969- பொங்கல் திருநாளில் ஜி.என். செட்டி ரோட்டில் எம்.ஜி.ஆர்., கலைஞர், திலீப்குமார், எஸ்.எஸ்.வாசன், ஏஎல்எஸ் முன்னிலையில் கலைவாணர் சிலையை திறந்து வைத்தார்.

49 வயதே வாழ்ந்த ஒரு நகைச்சுவை நடிகர் - எதனால் அவருக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு இருந்தது என்று ஆராய்ந்தேன்.

1908-ல நாகர்கோயிலில் கலைவாணர் பொறந்தாரு. 12 வயசோட படிப்பு முடிஞ்சிருச்சு. பல சரக்கு கடையில மாதம் ரூ. 5 சம்பளத்துக்கு கொஞ்ச நாள் வேலை பார்த்தாரு. அப்புறம் நாடகக் கொட்டகையில சோடா விக்கற வேலை. டிகேஎஸ் நாடகக்குழுவில 14 வருஷம் நடிச்சாரு. சினிமாவுல 21 வருஷம் நகைச்சுவை காட்சிகளை இவரே உருவாக்கி, ஒவ்வொரு படத்துக்கும் நடிச்சுக் குடுத்தாரு. 49 வயசில உலகத்தை விட்டு புறப்பட்டுட்டாரு.

ஏற்றம் இமயமலை; இறக்கம் பாதாளம். ரெண்டையும் அந்தச் சின்ன வயசிலயே பார்த்திட்டாரு.

நான் வரைந்த ஓவியம் -கலைவாணர்

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் கதை. நாடக உலகத்தில வாத்தியாரா இருந்த கந்தசாமி முதலியாருக்கு ஒரே மகன் - எம்.கே.ராதா -பின்னாளில் சந்திரலேகா -அபூர்வ சகோதரர்கள் - படங்கள்ள ஹீரோவா நடிச்சவர். தன்னோட மகனை சினிமாவுல கொண்டு வர்றதுக்காக சதிலீலாவதி கதைய வாங்கி படம் எடுத்தாரு. அதில் எம்.கே.ராதா கூட ஏகப்பட்ட பேர் அறிமுகமாகறாங்க. எம்.ஜி.ஆர் -டி.எஸ்.பாலையா- கலைவாணர்- டி.ஏ.மதுரம்னு ஏகப்பட்ட பேர்.

ஒரு பையனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேஷம் -சைடு வேஷம். 17 நாள் தினம் மேக்கப் போட்டுட்டு ஸ்டுடியோவுல உட்கார்ந்திருக்கறாரு. இவருக்கு ‘ஷாட்’ வரலே. 17-வது நாள் - அந்த போலீஸ் வேஷத்தில நடிக்கற பையன் தயாரான்னு கேட்டாரு டைரக்டர்.

‘‘ரெடியா இருக்கார் சார்!’’

‘‘அந்தப் பையனுக்கு சைக்கிள் இருக்கா?’’

‘‘இல்லை சார்...!’’

‘‘சைக்கிள் இல்லாம போலீஸ் சீன் எப்படி எடுக்கறது. நாளைக்கு பிளான் பண்ணுவோம்.’’

17 நாள் காத்திருந்த பையன். ‘ஒரு நிமிஷம் சார்!’னு ஓடிப்போய் எதிர்த்தாப்பல பெட்டிக்கடை முன்னாடி இருந்த சைக்கிளை தள்ளிட்டு வந்து, ‘நான் ரெடி சார்!’ன்னான்.

காமிரா இடது பக்கம் இருந்து சைக்கிளை ஓட்டிட்டு வலது பக்கம் போகணும். பையனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அம்மா சத்தியம் வாங்கியிருக்காங்க. சைக்கிள், பைக், கார் எல்லாம் நீ ஓட்டக்கூடாது. வாகனத்தில கண்டம்னு ஜோசியகாரன் சொல்லியிருக்கார்.

ரெண்டு தடவை சைக்கிள்ள ஏறி ஓட்டற மாதிரி ஷாட் எடுத்தாங்க. அதுக்குள்ள ‘திருடன்! திருடன்..! சைக்கிள் திருடன்’-னு ஒருத்தர் ஓடி வந்து, ‘‘சார், என் சைக்கிளை திருடிட்டு வந்திட்டான் சார்!’ன்னான்.

‘‘Tell him his cycle is acting’’-ன்னாரு டைரக்டர் எல்லிஸ்.ஆர்.டங்கன்.

‘‘இங்கிலீஷ் எனக்கும் தெரியும் சார். என் சைக்கிளை தரச்சொல்லுங்க!’’ன்னாரு சைக்கிளுக்கு சொந்தக்காரன்.

உடனே இந்தப் பையன் ஓடிப்போய், ‘தப்பா நெனைச்சுக்காதீங்க சார்! 17 நாளுக்கப்புறம் இன்னிக்குத்தான் எனக்கு முதல் ஷாட். முடிச்சிட்டு சைக்கிளை திருப்பித் தர்றேன்னான். அந்தப் பையன்தான் எம்.ஜி.ஆர். சைக்கிளுக்கு சொந்தக்காரன் டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்ல ஒருத்தரான கிருஷ்ணன்.

இந்த ‘சதி லீலாவதி’ படத்தில என்.எஸ்.கே-மதுரமும் அறிமுகம். ஆனாலும் துறு, துறுன்னு இருக்கற கலைவாணர்கிட்ட முதல் படத்திலேயே, ‘உனக்கு வேண்டிய காமெடி சீனை நீயே எழுதிக்க!’ன்னு டைரக்டர் சொல்லீட்டாரு.

கல்கத்தாவுல 1938-ல ‘தட்சயக்ஞம்’ படம் எடுத்தாங்க. எம்.ஜி.ஆர் -வளர்ந்து வர்ற ஹீரோ. கலைவாணர் 9 வயசு பெரியவர். கல்கத்தால திறந்தவெளி கால்வாய் 6 அடி அகலம் இருந்திச்சு. ஸ்டுடியோவுக்கு போற வழியில எம்.ஜி.ஆர் - அந்த கால்வாயை ‘ஜம்ப்’ பண்ணித் தாண்டினாரு. கூட வந்த கதாநாயகியும், தோழிகளும், ‘அடேயப்பா’-ன்னாங்க.

போதாதா -வாலிபனுக்கு வேகம் வந்திட்டுது. -ரெண்டு தடவை, அப்படியும், இப்படியும் தாண்டினாரு. செருப்போட கூட்டுவாரு அறுந்து போச்சு. அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டு ரெண்டு செருப்பையும் ஓரமா போட்டுட்டு வெறுங்கால்ல ஸ்டுடியோ போனாரு. கலைவாணர்கிட்ட ‘ஆசானே! செருப்பு அறுந்து போச்சு!’ன்னு சொல்ல ராத்திரி ஆயிருச்சு. ‘நாளைக்கு காலையில கடைக்குப் போய் வாங்கிக்கலாம்!’ன்னாரு கலைவாணர்.

மறுநாள் 7 மணிக்கே எம்ஜிஆருக்கு ஷாட். ‘ஆசானே திடீர்னு ஷூட்டிங் வச்சிட்டாங்க. செருப்பு வாங்கலியே!’ன்னார். ‘செருப்பு வாங்கிட்டேன்’னாரு கலைவாணர். எப்படி? உள்ளே போய் ஒரு பொட்டலத்தை எடுத்து வந்து எம்.ஜி.ஆர்கிட்ட குடுத்தாரு. பிரிச்சுப் பார்த்தா, அவரு ரோட்ல தூக்கி எறிஞ்சிட்டு வந்த செருப்பை கடையில குடுத்து கூட்டுவாரை உள்ளே செருகி, ஆணி அடிச்சு பாலிஷ் போட்டு வாங்கிட்டு வந்திருக்கார் கலைவாணர்.

எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. ‘‘நீ வளர்ந்து வர்ற நடிகன். அனாவசியமா காசை வீணாக்கக்கூடாது. ஒழுங்கா இதைப் போட்டுட்டு போ!’’ன்னு சொன்னாராம். அது மட்டுமல்ல, கொடை வள்ளலா எம்.ஜி.ஆர் போற்றப்படறதுக்கு முன்னாடி சினிமாவுல கொடை வள்ளலா இருந்த முன்னோடி கலைவாணர்தான்.

கலைவாணர், மதுரம்-மதுரைவீரன் எம்.ஜி.ஆருடன்

மட,மடன்னு படங்கள் வரிசையா புக் ஆகுது. படமும் கூடுது. சம்பளமும் கூடுது. நடிக்க ஆரம்பிச்ச 5 வருஷத்தில -1941-ல் சொந்த ஊரான நாகர்கோயில்ல -காதல் மனைவி மதுரம் பெயரால ‘மதுர பவனம்’- புது வீடு கட்டறாரு. கானக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி, ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் -நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை கச்சேரி.

அடுத்து மதுரம் பிறந்த ஸ்ரீரங்கம் நகரத்தில கிருஷ்ண பவனம்- பங்களா கட்டினாரு. நாடு சுதந்திரமடைஞ்சவுடனே சுதந்திர நினைவுத்தூண் ஒண்ணை 60 அடி உயரத்துக்கு நிறுவி அப்ப தமிழ்நாட்டு முதலமைச்சரா இருந்த குமாரசாமி ராஜாவை வரவழைச்சு நாகர்கோயில்ல திறப்பு விழா செஞ்சவர் கலைவாணர்.

லட்சுமி காந்தன் கொலை வழக்கில 2 வருஷம் 2 மாதம் சிறைக்குப் போய் திரும்பிய பிறகுதான் ரொம்பவும் பாப்புலர் ஆயிட்டாரு.

பணம், மணமகள் - 2 படங்களை தயாரிச்சு இயக்கினாரு. சென்னை-சேலம்-கோயமுத்தூர்னு -கார்ல பறந்திட்டே இருந்தாரு. 8000 அடி, 10000 அடி படம் எடுத்து கலைவாணர்கிட்ட போட்டுக் காட்டுவாங்க. அந்த கதைக்கு ஒத்திசைவா காமெடி டிராக் எழுதி தன்னோட காமெடி குழுவை வச்சு 3000 அடியோ, 4000 அடியோ இவரே ஷூட் பண்ணி குடுத்திடுவாரு. டைரக்டர்கள் -செளகரியமான இடங்கள்ள அதுகளை சேர்த்துக்குவாங்க.

முதல் தேதி -சிவாஜியுடன்.

கோயமுத்தூர்ல கலைவாணருக்கு பட விநியோகம் செய்யற அலுவலகம் இருந்திச்சு. ஒருநாள் இன்கம்டாக்ஸ் ரெய்டு அங்கே நடந்திச்சு. ஒரு நோட்ல தானம் 2000 -தானம் 8000 -தானம் 10000-ம்னு எழுதியிருந்திச்சு. ‘என்னய்யா, மொட்டையா -வெறும் தானம் தானம்னு எழுதி வச்சிருக்கீங்க?’ன்னு ஆபீஸ் மேனேஜரை ரெய்டு பண்ணின ஆபீசர் கேட்டாராம்.

‘‘எங்கய்யா, யாருக்கு தானம் பண்ணினாலும் அவங்க பேரை எழுத மாட்டாருங்கன்னாரு மானேஜர்.

‘‘உங்களுக்கு சந்தேகம் இருந்தா சென்ட்ரல் ஸ்டுடியோவுல ஐயா ஷூட்டிங்ல இருக்காரு போய் ‘டெஸ்ட்’ பண்ணிப் பாருங்கன்னாரு.

ஆபீஸர் ஒரு கதர் சட்டை வேஷ்டி, மஞ்சப்பை, நெத்தில விபூதி பூசிகிட்டு ஸ்டுடியோ போனாரு. ஷாட் இடைவெளியில கலைவாணர் வெளியே வந்தாரு. ‘‘ஐயா! நான் கோயமுத்தூர் பக்கம் தொண்டாமுத்தூருங்க. பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கேன். நீங்க வந்திருங்கீங்கன்னு கேள்விப்பட்டு சும்மா பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன்!’னாரு.

‘‘அட, பைத்தியக்காரா! இன்னிக்குப் பாத்து வந்திருக்கியே, கோயமுத்தூர் ஆபீஸ்ல ரெய்டு நடக்குது. எப்படியும் ராத்திரி ஆயிரும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வந்து பாருன்னாரு. அதாவது இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கே தானம் குடுக்கறேன்னு சொன்னவரு நம்ம கலைவாணர்.

கடைசியா அவர் கலந்துகிட்ட நிகழ்ச்சி சேலத்துக்குப் பக்கத்தில தாரமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் அண்ணா படத்திறப்பு விழா. அதே மாதிரி அண்ணா முதல்வரா கடைசியா கலந்துகிட்ட நிகழ்ச்சி சென்னை வாணி மகால் பக்கத்தில கலைவாணர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி.

சிலை திறப்பு 1969 ஜனவரி 14

அவருடைய படங்கள் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அத்தனை நடிகர்களுக்கும் ஆசானாக பாசம் காட்டும் அண்ணனாக, கொடை குணத்தின் முன்னுதாரணமாக திரையுலகில் அவர் திகழ்ந்ததுதான் போற்றுதலுக்குரியது.

அந்திம காலம் நெருங்கிடுச்சு. உடம்பு ரொம்ப கெட்டுப் போச்சு. வழக்குக்காக இருந்த சொத்தெல்லாம் வித்து செலவு பண்ணினாங்க. மேலும் இருந்த கடனை அடைக்க சம்பாதிச்ச காசெல்லாம் குடுத்தாரு.

சொல்லிக்கிற மாதிரி இப்ப எதுவும் இல்லை. -தன்னைப் பார்க்க வர்றவங்களை சும்மா அனுப்பக்கூடாதுன்னு ஆஸ்பத்திரிக்கு பக்கத்திலிருந்த ஓட்டல்ல சாப்பாட்டு டிக்கெட் ஒரு மாசத்துக்கு 30 வாங்கி வச்சிருந்தாரு. அதில கடைசி டிக்கெட்டையும் ஒருத்தருக்கு இன்னிக்கு குடுத்து சாப்பிட அனுப்பீட்டாரு. கடைசியா ஒரு நாடக நடிகன் பொண்ணு கல்யாணம்னு சொல்லி கையேந்தி வந்தான். வெந்நீர் ஊத்தி வச்சிருந்த வெள்ளிக் கூஜாவை குடுத்து - மதுரம் வெளியில போயிருக்கா, அவ வர்றதுக்குள்ளே எடுத்திட்டு போயிருன்னாரு.

அடடே, இப்ப நம்மகிட்ட எதுவுமில்லே. நாளைக்கு யாராவது வந்து ‘ஐயா!’ன்னா எதைக்குடுப்போம்? ஐயோ நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு நினைச்சாரு. போயி சேர்ந்திட்டாரு. அவ்வளவு பெரிய கூட்டம் எப்படி வந்து, எதனால வந்து மரியாதை செஞ்சதுன்னு இப்ப புரிஞ்சுது.

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x