Last Updated : 10 Oct, 2020 02:51 PM

Published : 10 Oct 2020 02:51 PM
Last Updated : 10 Oct 2020 02:51 PM

தேசிய அஞ்சல் வார விழா: இதயத்துக்கு நெருக்கமான தபால் நினைவுகள்

கிட்டத்தட்ட ''சார் தபால்'' என்ற வார்த்தை தெரு வாசலில் கேட்கும் வாடிக்கையான நாட்கள் நம் காலத்தை விட்டுப் போய்விட்டன. எனினும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாலே தபால் நினைவுகள் ஏதோ ஒரு வகையில் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பதை உணரமுடிகிறது.

அஞ்சல் நிலைய வாசலில் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த சிவப்புப் பெட்டியில்தான் நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதங்களைப் போடலாம். அங்கிருந்து காலை, மாலை எடுக்கப்படும் கடிதங்கள் டெல்லி வரை மட்டுமல்ல, வெளிநாட்டிற்கும் செல்கிறது என்பதை அறிந்தபோது அந்த சிவப்புப் பெட்டி எவ்வளவு மதிப்பு வாய்ந்தததாக மாறியது என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாக உள்ளது.

தட்ட வீட்டு தாழ்வாரத்தின் இன்னொரு முனையில் கட்டுக்கட்டாக அஞ்சல் அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்த அந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவுக்கு வருகிறது. தாழ்வாரத்தின் ரீப்பர் சட்டமொன்றில் கொக்கி போட்டுத் தொங்கிக்கொண்டிருக்கும் கம்பியில், கட்டுக்கட்டாக எக்கச்சக்கமான கடிதங்கள் செருகப்பட்டிருக்கும்.

அவை எவ்வெப்போதோ யார் யாரோ போட்ட கடிதங்கள், ''தேவரீர் அண்ணா, நான் நலம், தங்கள் நலனை அறிய ஆவல், இங்கு கல்லூரியில் பணம் கட்ட கடைசி நாள் அறிவித்துள்ளார்கள்.

அன்புள்ள மாமா, தங்கள் அன்பு மருமகன் எழுதிக்கொண்டது. இந்த முறை தீபாவளிக்கு ஊருக்கு வருவதும் வராததும் உங்கள் கையில்தான் உள்ளது. மீதி போடவேண்டிய ஐந்து பவுன் நகை குறித்து எதுவுமே பேசமாட்டேன் என்கிறீர்கள்.

அன்புடையீர், நெல்லுக்கு உரிய விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளிட்டு நமது தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளது.

மூத்த பெரியப்பாவுக்கு கண்ணீருடன் இதை எழுதுகிறேன். அவர் போக்கு வரவர சரியில்லை....

இப்படித் தொடங்கும் போஸ்ட் கார்டுகளில்தான் எத்தனை பிரச்சினைகள்.... எத்தனை கோரிக்கைகள்... எத்தனை ஆதங்கங்கள். காலம் ஒவ்வொன்றாக எடுத்து எரவானத்தில் செருகிவிடுவதுபோல இந்தக் கடிதங்களும் அதன் பிரச்சினைகளும் ஏதோ ஒரு மூலைக்குப் போய்விடுகின்றன.

பெரும்பாலும் பழைய கடிதங்களை, அதிலும் மற்றவர்களுக்கு வந்த கடிதங்களை வரிக்கு வரி படிப்பதில் எந்தவித நியாயமுமில்லை. ஒருவித அயர்ச்சியும் உருவாக வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட கடிதங்களில் அவரவர் வாழ்க்கைப் பாடு காரணமாக சோகமும் சந்தோஷமும் வாழ்வும் தாழ்வும் அலை அலையாய் எட்டிப் பார்க்கும்.

உண்மையில், கடிதங்களைப் பொறுத்தவரை நமது இளமைக்கால சொந்த நினைவுகள் ஒரு நரம்பு வாத்தியத்தில் நம் விரல் மீட்ட சுகமாய் ஒலிக்கும் ஒரு கம்பியைப் போல அதிரும்.

முக்கியமாக அந்தப் பொங்கல் வாழ்த்து அட்டைகள். அற்புதமான இயற்கை எழில் ஓவியங்களுடன் கூடிய பொங்கல் வாழ்த்தும் அதற்கான சில கவிதை வரி வாசகங்களுடன் நண்பர்கள், அரிதான சில தோழிகள் கையெழுத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசங்களுக்கு ஈடு இணையே இல்லை.

சின்ன வயதில் அஞ்சல் நிலையம் சென்று இன்லேண்ட் கடிதம் வாங்கிவரச் சொன்னதுபோது இங்கிலாண்ட் லெட்டர் என்று கேட்டு அங்குள்ளவர்களின் கிண்டலுக்கு ஆளானாதை எல்லாம் எப்படி மறக்க முடியும். அதுவும் ரிப்ளை கார்டில் கடிதம் எழுதினால் நிச்சயம் பதில் வரும் என்ற உறுதியை வேறு எங்கு நாம் பெறமுடியும். காமிக்ஸ் புத்தகங்களைப் பெறுவதற்காக ரிப்ளை கார்டு அனுப்பியதையும், பிடிக்காத நண்பன் பெனால்டி கட்டட்டுமே எனக் குறைவான ஸ்டாம்ப் ஒட்டிக் கடிதம் அனுப்பும் நண்பர்களையும் காலம் மெல்ல மெல்ல மறக்கடித்துவிட்டது.

சிறுசேமிப்பாக 5 காசு முதல் 50 காசு வரை ஸ்டாம்புகளை கட்டங்களில் ஒட்டி மொத்தம் கொண்டுபோய் போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்து 10 ரூபாயோ, 25 அல்லது 50 ரூபாயோ பெற்றுவந்த சின்னஞ்சிறு பொறுப்புமிக்க காலங்கள் நம் வாழ்க்கையில்தான் நடந்துள்ளன.

சில இனிஷியல் மாறி வந்த கடிதங்களாலும் தாமதித்து வந்த கடிதங்களாலும் சிலரது வாழ்க்கையே மாறிப்போயுள்ளன. ஆனாலும், ஒரு கடிதத்திற்காக தபால் ஊழியர்கள் காடு, மேடு பாராமல் கிராமங்களுக்கு வெளியேயும், வனாந்தரங்களில் வீடு கட்டி வாழ்பவர்களிடம் சென்றதையும், ஊருக்கு வெளியே நீண்டதூரம் தள்ளி வாழும் மலைவாசி, ஆதிவாசி குடும்பங்களைத் தேடிக் கொண்டுபோய் கடிதங்கள் வழங்கியதையும், விவசாயப் பணிகளின்போது நிலங்களிலேயே வாரக்கணக்கில் தங்கியிருப்பவர்களை அங்கேயே தேடிச்சென்று சிரமம் பாராமல் கடிதங்கள் விநியோகிப்பத்தையும் நவீன காலம்தான் எவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது.

கிராமங்களில் தனியே வாழும் முதியவர்களை தபால்களே உயிர்ப்பிக்கும் அதிசயங்கள் நடக்கும். தபால் ஊழியரை எதிர்நோக்கி வழி மேல் விழிவைத்துக் காத்திருக்கும் முதியவர்களின் முகத்தில் புன்னகை வரவழைக்கும் கடிதங்களே அவை. பட்டினத்திற்கு வேலைக்குப் போன மகனிடமிருந்து வரும் கடிதமோ மணியார்டரோ, மணியார்டரில் உள்ள அப்பா, அம்மா எப்படியிருக்கீங்க, அடுத்த வாரம் நான் நேரில் உங்களைச் சந்திக்கிறேன் போன்ற சில வாசகங்களுமே அவர்களின் அடுத்தடுத்த நாட்களைத் தெம்பாக்கி நடமாடவைக்கும் என்பதும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியும்.

அப்போதெல்லாம் பெண் பார்க்கும் சம்பிரதாயங்களில் அங்கே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்வதைப்போல போய் கடிதம் எழுதுகிறோம் என்று பதில் சொல்பவர்களும் இருந்தார்கள். அதன்படி பெண்ணைப் பிடித்திருக்கிறது எப்போது திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று உண்மையிலேயே போய் கடிதம் எழுதுவார்கள் என்று காத்திருக்கும் பெண் வீட்டாரின் சோக நிலையும் சொல்லி மாளாது. மாறாக, சில நேரங்களில் நல்ல முடிவோடு சம்மதம் என்று வரும் கடிதங்களால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழும் சம்பவங்களும் அந்நாட்களில் உண்டு.

அரசு வேலைவாய்ப்புக்கு போஸ்டல் ஆர்டர்கள் வாங்க அஞ்சல் நிலையத்தில் கியூவில் கால்கடுக்க நிற்கும் இளைஞர்கள் இன்று எந்த அலுவலகத்தில் பணியாற்றுகிறார்களோ தெரியவில்லை.

கதை அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லாத நிலையில் திடீரென ஒருநாள் பிரபல வார இதழிலிருந்து தங்கள் சிறுகதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற கடிதம் வரும்போதோ, தங்கள் படைப்பு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக இதையே அளவுகோலாக கருதவேண்டாம் என்ற வாசகங்களைக் கண்ட மாத்திரத்தில் சிறு புன்முறுவலோடு அன்றைய தினங்களைக் கடக்கும் பக்குவத்தையும் தபால் துறை அன்றி வேறு எது வந்து நமக்குத் தந்திருக்க முடியும்?

எப்போதும் போஸ்ட்மாஸ்டர் அறையில் கடக் கடக் கடக் என தந்தி அடிக்கப்படும் சத்தமும் தந்தி வருவதற்கான சத்தமும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குடும்பத்திற்கு தந்தி வருகிறது என்றால் அது தொண்ணூறு சதவீதம் துக்க செய்தியாகத்தான் இருக்குமென்பது அந்நாளைய (அவ)நம்பிக்கை. ஒருவகையில் அது உண்மைதான்.

நற்செய்திகளை தந்திகளில் அனுப்பும் பழக்கம் அப்போது அதிகம் ஏற்பட்டதில்லை. ஆனால், திருமண வாழ்த்துத் தந்திக்கான விண்ணப்பத்தில் எண் 4 அல்லது 8 எனக் குறிப்பிட்டு அனுப்பினாலேபோதும் ''இனிய திருமண வாழ்த்துகள்'' என்ற முழு வாசகத்துடன் மணமக்களுக்கு திருமண மண்டபத்திலேயே உரியநேரத்திற்குள் நமது வாழ்த்துகள் சென்றடைந்ததும் மிகச் சமீபத்தில்தான்.

எத்தனையோ பழைய திரைப்படங்களில் கிராம வீடுகளிலேயே தபால் ஆபீஸ்கள் இயங்கியதைக் காண முடிவதில் திரைப்படங்களும் தங்கள் பங்குக்கு கணிசமாக ஆவணப்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது. இன்றுவரை பல ஊர்களில் ஒரு பள்ளிக்கூடத்தைப் போலவே ஒரு வங்கியைப் போலவோ சார் பதிவாளர் அலுவலகத்தைப் போலவோ தனக்கென்று சொந்தமாக ஒரு கட்டிடத்தில் தபால் அலுவலகங்கள் இயங்கியதில்லை.

பெரிய பெரிய ஊர்களில் துணை தபால் நிலையங்களிலிருந்து காலை எட்டரை ஒன்பது மணியளவில் ரன்னர்கள் வெளியேறுவார்கள். அவர்கள் எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து ஆற்றங்கரை ஏரிக்கரை, காடு கழனிகளைக் கடந்து குக்கிராமங்களுக்கு நோக்கி வேகவேகமாக சைக்கிளில் பறந்து செல்வார்கள்.

அத்தகைய ரன்னர்கள் எனப்படும் தபால் ஊழியர்கள் கடிதப் பைகளை எடுத்துச் சென்றதை எல்லாம் இன்று அறவே காண முடியவில்லை. ரன்னர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. ஒருவேளை அத்தகைய ஒரு நபரேகூட இன்று எங்கேயாவது உட்கார்ந்து தனது தோழர்களுக்கு அஞ்சல் நிலைய தின வாழ்த்துகளை அல்லது தேசிய அஞ்சல் வார விழா வாழ்த்துகளை, ஆண்ட்ராய்டு செல்பேசி மூலம், ஃபேஸ்புக் மெசஞ்சரிலோ, வாட்ஸ் அப்பிலோ அனுப்பிக் கொண்டிருக்கலாம்.

வாழ்க்கை திருப்பங்களோடு நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதோடு, உலகமும் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவதில் தபால்துறை நம் வாழ்வின் முக்கியக் குறியீடோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x