Published : 08 Oct 2020 10:47 AM
Last Updated : 08 Oct 2020 10:47 AM

பாமரர்களின் பாட்டுடைத்தலைவன் பட்டுக்கோட்டை

லாரன்ஸ் விஜயன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள் இன்று...

வானம் பார்த்து, வளமான கற்பனையில் வாழ்ந்திட்ட கவிஞர்கள் மத்தியில், பூமி பார்த்து, விடியலுக்கான பூபாளம் பாடிய 2 ஆம் புரட்சிக் கவிஞர், இவர். நிமிர்ந்து பார்த்து, வானமுதான நிலவளந்த கவிஞர்கள் மத்தியில், ஏழைகளின் நிலையறிந்து, நிலமளந்து பாடி, நிலப்பிரபுக்களின் நித்திரை கலைத்த சத்தியக் கவிஞர் இவர். இவர் வேறுயாருமல்ல...! நம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள, செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் அருணாச்சலனார்- விசாலாட்சி தம்பதிக்கு 1930 ஆம் ஆண்டு இளைய மகனாய் பிறந்தார் பட்டுக்கோட்டை... எளிய விவசாயக் குடும்பம்... மண்வெட்டியால், நிலம் உழுதபோதே... பேனா எடுத்து எளிய மக்களின் மனம் உழுதவர்.

19 வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்று, பட்டாளி மக்களின் ஆசையையும், ஆவேசத்தையும் தன் பாட்டில் வெளிப்படுத்திய பட்டுக்கோட்டை... தமிழர்களின் "பாட்டுக்கோட்டை''. விவசாயியான இவரது தந்தை அருணாச்சலனாரும் கவிபாடும் ஆற்றல் பெற்றவர் என்பதால், கவிதையும், கலப்பையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு ரத்த உறவானது. கணபதி சுந்தரம் என்ற மூத்த சகோதரருக்கும், வேதநாயகி என்ற இளைய சகோதரிக்கும் நடுவின் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.

விவசாயி, இட்லி வியாபாரி, மாட்டு வியாபாரி, உப்பளத் தொழிலாளி, நாடக நடிகர்... இப்படி எத்தனையோ பரிணாமங்கள். கருத்துச்செறிவும், கற்பனை உரமும் கொண்டு இவர் எழுதிய பல கவிதைகள், "ஜனசக்தி" ஏட்டில் வந்தது. 1955 ஆம் ஆண்டு வெளியான "படித்த பெண்" என்ற படத்தில்தான், இவரது கற்பனை, முதல் பாடலாக பாட்டில் வந்தது... பின்னாளில் இவர் எழுதிய பல பாடல்கள்... பாமர மொழி பேசியது... பாட்டாளி மக்களுக்கு வெண் சாமரம் வீசியது.

இளமையிலேயே கவிதை மீது நாட்டம் கொண்ட பட்டுக்கோட்டை, முறைப்படி தமிழ் இலக்கணம் பயின்றதில்லை. பாமரர்களின் பாடுகளையே பாடல்களாக்கிப் பாடுவதில் வல்லமை பெற்றவராக இருந்ததால் எளிய மனிதர்களின் உள்ளங்களில் நிரந்தர நாற்காலி போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தார் இந்தக் கவிஞர். இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாலோ என்னவோ, இவரது பாடல்களில் வர்க்க சிந்தனை, வஞ்சனையின்றி அமைந்திருந்தது. அதுதான், 'இருப்பது எல்லாம் பொதுவாப் போனா, பதுக்குற வேலையும் இருக்காது, ஒதுக்குற வேலையும் இருக்காது' என பின்னாளில் இந்தக் கவிஞனைச் சிந்திக்க வைத்தது.

பாமரர்களின் பாட்டு வாத்தியாராய்த் திகழ்ந்த பட்டுக்கோட்டை, மனிதகுல விடியலுக்கு, விழிப்பாய் இருக்கவேண்டுமென எச்சரித்துப் பாடிய, விடிவெள்ளி பாடல்தான் நாடோடி மன்னன் திரைப்படத்தில் அவர் எழுதிய ''தூங்காதே தம்பி தூங்காதே'' பாடல். எத்தனை கருத்துச் செறிவு. 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்' என்ற இந்தப் பாடல், தூங்கும் சமுதாயத்தை நோக்கி அவர் வைத்த சாடல். இந்தப் பாடல், தலைமுறைகள் தாண்டி பலரை விழிக்க வைக்கும் ஒரு விழிப்புணர்வுப் பாடல்.

திரைப்படப் பாடல் வாய்ப்புக்காக திரைப்பட அதிபர்களையும், இசையமைப்பாளர்களையும் பட்டுக்கோட்டை என்ற இளம் கவிஞன் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பாசவலை என்ற திரைப்படத்தில் பாடல் எழுத, பட்டுக்கோட்டைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள். பாடல் எழுத ஒரு இளைஞன் வந்திருக்கிறான். இவனுக்கு சரியாக எழுத வருமா? டியூனுக்கு ஏற்றபடி பல்லவி வருமா? சரணம் இந்த இளைஞரிடம் சரணடையுமா? என்றெல்லாம் கேள்விகளுடன், பட்டுக்கோட்டையை அணுகுகிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற அந்த இளைஞன் எழுதிக் கொடுத்த பல்லவியில், கிறங்கிப் போய், உடனே பாடல் எழுத வாய்ப்பு தருகிறார். அந்தப் பல்லவி இதுதான்.

'குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்கு சொந்தம்

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்

தட்டுப்பட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்

சட்டப்படி பாக்கப்போனா எட்டடி தான் சொந்தம்'

60 வயதைத் தாண்டியும் பலருக்கு வராத சிந்தனை, 19 வயது மட்டுமே கடந்த ஒரு இளைஞனுக்கு வருகிறது என்றால், அவன் வாழ்க்கையின் நிலையாமையை எந்த வயதில் வாசித்திருப்பான் என்ற ஐயம் ஏற்படுகிறதல்லவா? இதுதான் பட்டுக்கோட்டையின் பரந்த சிந்தனை. உலகை அளந்த உயர்ந்த சிந்தனை. நான்கே வரிகளில் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை வேறு யாரால்? இப்படிச் சொல்லமுடியும். எம்.எஸ். விஸ்வநாதன், பட்டுக்கோட்டையாரின் கையைப் பற்றிக்கொண்டார். பாட்டெழுதிய தாளை கண்ணில் ஒற்றிக்கொண்டார். பின்பு என்ன? பட்டுகோட்டையார் பாட்டுலகில் வெற்றி கண்டார்.

வர்க்க சிந்தனையை, சமூக ஏற்றத்தாழ்வுகளை உரத்த குரலில், பாமரர்கள் மொழியில் பாடியவர் பட்டுக்கோட்டை. சக்கரவர்த்தி திருமகள் என்ற திரைப்படத்தில் 'யானையைப் பிடித்து ஒரு பானையில் அடைத்து' என்ற பாடலில் வரும் கேள்வி-பதில் அறிவாயுதங்களின் அணிவகுப்பு. சமூக சீர்திருத்தத்தின் கலைப்படைப்பு. அந்தப் பாடலில், 'உலகிலேயே பயங்கரமான ஆயுதம் எது?' என்ற கேள்விக்கு, 'நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது' எனப் பதிலைப் பதிவு செய்திருப்பார் பட்டுக்கோட்டை. நாக்கு தான் எவ்வளவு அபாயகரமான ஆயுதம்?

காதல் ஊற்றெடுக்க வேண்டிய இளம் வயதில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும், காதல் கசிந்தது. இளம் பெண்ணிடம் அல்ல. இந்த மண்ணிடம். விவசாய சங்கத்தில் விழி பதிந்தது. பொதுவுடமைக் கொள்கையில் மனம் கரைந்தது. புரட்சிக்கு அவர் வைத்த புள்ளியால், இந்தப் பூவுலகம் அறிந்துகொண்டது, ஏழை-எளிய, விளிம்புநிலை மக்களின் கோலங்களை. கோபங்களை. பொதுவுடைமைத் தத்துவங்களைத் தன் பாடலில் வடித்தாலும், காதல் பாடல்களிலும் பட்டுக்கோட்டையின் கற்பனை வளமையாக ஊற்றெடுத்தது. ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப் பரிசு திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பட்டுக்கோட்டை எழுதியிருந்தார். துள்ளாத மனமும் துள்ளும் என்ற ஒரு காதல் தாலாட்டு இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும். காதலனுக்குத் தன் காதலை, நாயகி வெளிப்படுத்த வேண்டும், அதுவும் நளினமாக, நாகரிகமாக. இங்குதான் கவிஞர் பட்டுக்கோட்டை தன் வரிகளால் ஆட்சி செய்கிறார்.

'சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்

காய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்

உறவு கொண்டால் இணைந்திடும், அதில் உண்மை இன்பம் விளைந்திடும்'

என்று பாடி நாயகி, தன் காதலை வெளிப்படுத்த உதவினார் பட்டுக்கோட்டை. அதேபோல், அந்தப் படத்தில் 'காதலில் தோல்வியுற்றாள் கன்னியொருத்தி' என்ற மற்றொரு பாடல். வழக்கமாக ஒருசில வார்த்தைகளுக்கு எதுகையோ மோனையோ சரியாக அமையாது. கற்பனை வறட்சி கொண்ட கவிஞர்கள் திண்டாடித்தான் போவார்கள். ஆனால், 'காதலில் தோல்வியுற்றாள் கன்னியொருத்தி' என்று எழுதிய பட்டுக்கோட்டை, அடுத்த வரியிலேயே 'கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி' என்று எழுதி, தன் கற்பனை வளத்தை வாரி வழங்கியிருந்தார்.

மாற்றம் என்பது மானிட தத்துவம், மாறாது இருக்க நான் ஒன்றும் வனவிலங்கு அல்ல. மாற்றம் குறித்த கவியரசு கண்ணதாசனின் மாறாத வாக்குமூலம் இது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இது

வாழ்க்கைத் தத்துவம். அப்படி இருக்க பழமையை எப்படி மாற்றி அமைப்பது?. மாற்றம் தானாக வந்துவிடுமா? இல்லை இல்லை. மாற்றம் வரவேண்டியது அல்ல. உருவாக்கப்பட வேண்டியது. இந்தக் கருத்தை இளம் வயதிலேயே படிக்க வேண்டும். ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையுமா? திருடாதே படத்தில் இடம்பெறும் 'திருடாதே பாப்பா திருடாதே' என்றொரு பாடல்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக் கொண்டே இருக்குது - அதை

சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது

கவிஞன் வாய்மொழி பொய்க்குமா? ஐந்தில் வளைத்த பட்டுக்கோட்டையாரின் அறிவுரைப் பாடல் இது. அறவுரைப் பாடல் இது.

பாட்டாளி - தொழிலாளி வர்க்கத்தின் வரவு, செலவுத் திட்டம் எப்போதும் அவனுடைய ஊதியத்துடன் ஊடல்கொண்டே இருக்கிறது. வள்ளுவன் வாய்மொழிப்படி ''ஊடுதல் காமத்திற்கு மட்டுமே இன்பமாக இருக்கிறது. ஊதியத்திற்கு இல்லை'' என்பது பட்டுக்கோட்டையின் வாக்கு. இரும்புத்திரை படத்தில் வரும் 'கையில வாங்குனே பையில போடல, காசு போன இடம் தெரியல' என்ற பாடல், ஏழை-எளிய, நடுத்தரக் குடும்பத் தலைவனின் பொருளாதார வாக்குமூலமாக அமைந்துவிட்டது.

ஒருமுறை தனது தோழர்களுடன் நாடகம் போட வெளியூர் சென்றார் பட்டுக்கோட்டை. நாடகமும் நடைபெற்றது. ஆனால், வசூல் சரியில்லை. தளர்ந்த மனதுடன் தோழர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்த எழுதிய பாடல்தான் ஆரவல்லி படத்தில் இடம்பெற்ற 'சின்னக்குட்டி நாத்தனா சில்லறையை மாத்துனா' என்ற நையாண்டிப் பாடல்.

வர்க்க சிந்தனை, வாழ்க்கைப் போராட்டம், காதல் பயணம் என வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் பட்டுக்கோட்டையின் ஒரு பாடல் எளிய மனிதர்களின் கை பிடித்து நடந்து வரும். அதனால்தான், அவர், மண்ணின் கவிஞர். மக்கள் கவிஞர். பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

தனது 29 வயதில் இந்த மண்ணை விட்டு மறைந்த மண்ணின் கவிஞர் பட்டுக்கோட்டை, பாடாத பொருள் இல்லை. செங்கப்படுத்தான்காடு என்ற கிராமப்புற மண்ணின் வாசத்தை சினிமா என்ற வெள்ளைத் திரையில் அப்பியவர் பட்டுக்கோட்டை. 10 ஆண்டுகளில் சினிமா பாட்டுத்துறையில், அவரது சிந்தனையிலிருந்து சிதறி விழுந்த கற்பனை முத்துகள், தமிழ்த்திரைப்பட பாடல் வரலாற்றை மாலையாய் அலங்கரிக்கும். சில கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. படித்தவர்கள், பண்டிதர்கள், கற்றுவந்த ஞானிகள், இந்தச் சமூகத்தின் பல்வேறு கோளாறுகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள். படித்தவன் செய்த தவறுகள் பாமரனையும் பாதிக்கிறது. இதைத்தான் பட்டுக்கோட்டை பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்.

சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதிஎழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணி கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்தச் சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி, இன்னும் கேள்வியாகவே இருக்கிறது...

பாட்டாளி மக்கள் இருக்கும் வரை பட்டுக்கோட்டையின் பாடல்கள் பட்டொளி வீசி பறந்துகொண்டே இருக்கும். காரணம், அவரது பாடல்களில் எளிய மனிதர்களின் வியர்வையும், கண்ணீரும் கலந்தே இருப்பதால்...

லாரன்ஸ் விஜயன்,

மூத்த பத்திரிகையாளர்,

தொடர்புக்கு : vijayanlawrence64@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x