

கர்நாடக இசைத் துறையில் பிரபலங்களாக இருப்பவர்களானாலும், திரைப்பட மெல்லிசைக் குழுவில் பாடுபவர்களாக இருந்தாலும், இந்தக் கரோனா ஊரடங்கால் நிகழ்ச்சிகள் எங்குமே நடக்காத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இசை சார்ந்த தொழில்முறைக் கலைஞர்களாக இல்லாமல், இசையின் மீதான விருப்பத்தால் கர்நாடக இசை மற்றும் மெல்லிசையைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள் என சிலர் இருக்கின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்துவந்த மேடை வாய்ப்புகளும் இந்தக் கரோனா காலத்தில் கிடைக்காத நிலையில் சமூக வலைதளங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரபலங்களாக இல்லாதவர்களிலும் நன்றாகப் பாடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான மேடைகள் கிடைப்பது அரிதாக இருக்கும். அப்படிப்பட்ட திறமையான இளைஞர்களின் நிகழ்ச்சிகளை தம்முடைய 'லைவ்4யூ' முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பிவருகிறார் சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் ஆர்.எஸ்.வி.
"எங்களின் முகநூல் பக்கத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்குக் கலைஞர்கள் தங்களின் திறமையை விளக்கும் வீடியோவை எங்களுக்கு முதலில் அனுப்ப வேண்டும். எங்கள் நடுவர் குழு அந்த வீடியோவைப் பார்த்து அந்தக் கலைஞரின் திறமை பிடித்திருந்தால் மட்டுமே எங்கள் முகநூலில் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்போம்.
கரோனா ஊரடங்கில் எங்குமே நிகழ்ச்சிகள் நடக்காத நிலையில் கடந்த மார்ச் முதல் 300-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடந்தியிருக்கிறோம். 'லைவ்4யூ' முகநூல் பக்கத்தில் வளரும் கலைஞர்களுக்கு மேடை அமைத்துத் தருவதோடு, அபிலாஷ் கிரிபிரசாத், அக்ஷய் பத்மநாபன், நிரஞ்சனா சீனிவாசன், வனிதா சுரேஷ், மயிலை கார்த்திகேயன், பாரதி ராமசுப்பன், ஐஸ்வர்யா வித்யா ரகுநாத், ஸ்ருதிசாகர், அபூர்வா, அனஹிதா, ஆரத்தி, பத்மாவதி சாரங்கபாணி, பாலக்காடு ராம்பிரசாத், கிருஷ்ணசுவாமி, கீபோர்ட் சத்யா, சுர்முகி ராமன், கங்கா சிற்றரசு, ராஜ், சாருமதி, பைரவி கோபி போன்ற ஏற்கெனவே பிரபலமாக உள்ள கலைஞர்களும் தங்களின் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர்.
கர்நாடக இசைக் கலைஞர்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், மெல்லிசைக் கலைஞர்கள், வயலின், கீபோர்ட் போன்ற வாத்தியங்களை பிரதானமாக வாசிக்கும் கலைஞர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்ப நாள், நேரம் போன்றவற்றைச் சொல்லிவிடுவோம். அந்தக் குறிப்பிட்ட நாள், நேரத்தில் அந்தக் கலைஞர்கள் தங்களின் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதை உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பார்ப்பார்கள். இதன் மூலம் இளம் கலைஞர்கள் தங்கள் கலையை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்த உதவியைக் கட்டணம் இல்லாமல் இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் செய்வதை நினைத்துப் பெருமைப்படுகிறோம்" என்கிறார், பிரகாஷ்.