வெற்றி தோல்வி கானா

கானா பாடலின் ஒரு காட்சி.
கானா பாடலின் ஒரு காட்சி.
Updated on
1 min read

இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? நிச்சயமாகக் கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களைவிட, அறிவிலும் திறமையிலும் பிரகாசிக்கிறார்கள். சமயோசிதமான முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்கிறார்கள். ஆனால், ஒரு பிரச்சினை, சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்போல் அவர்களில் சிலரால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வெற்றியை மட்டுமே ருசிக்கத் தெரிந்த சில இளைஞர்கள் தோல்வியின் ருசி எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு விரும்புவதில்லை. தோல்வி அடைந்தால் அதிலிருந்து மீண்டு எழுவதற்கு அவர்கள் தயாராக இருப்பதில்லை.

தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, உயர் கல்வி படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் என எங்கும் எதிலும் அவர்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். வெற்றியும் தோல்வியும் நம் வாழ்க்கையில் சகஜம். வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்; தோல்வியால் துவண்டுவிடக் கூடாது என்பதைப் பொட்டில் அடித்தது மாதிரி 'வெற்றி தோல்வி' என்னும் கானா பாடலை எழுதிப் பாடி யூடியூபில் வெளியிட்டுள்ளார் 'கானா' பாடகர் ஹக்கீம்.

"நாம் இருப்பது எந்த இடமாக இருந்தாலும் சரி, நம்முடைய நிலை எப்படி இருந்தாலும்சரி கடினமான நம்முடைய முயற்சியாலும் பயிற்சியாலும்தான் நம்முடைய கனவை நாம் நனவாக்க முடியும். தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் இருந்தால் இளைஞர்களால் சாதிக்க முடியும்" என்பதைச் சொல்லத்தான் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறேன் என்கிறார், ஹக்கீம்.

'தம்மாத்தூண்டு மேப்பில

சின்னூண்டு கேப்பில

நம்ம சென்ன சிட்டி

உருவாச்சுடா வேர்ல்டு டாப்புல…'

என உருவம் கண்டு மட்டும் அல்ல ஏழ்மை நிலைமை கண்டும் போராடத் தயங்கும் இளைஞர்களுக்கு சென்னையையே முன்னுதாரணமாகக் கொண்டு உழைப்பதற்கான யோசனையைத் தன்னுடைய பாட்டில் கானாவுக்கே உரிய மொழிநடையில் ஹக்கீம் சொல்லியிருப்பது ரசனையானது, ரகளையானது!

பாடலுக்கான காட்சியில் ஹக்கீமோடு சேர்ந்து மேடி டி குரூஸ் விளையாட்டு வீரராகப் பங்கேற்றிருக்கிறார். பாடலுக்கான துள்ளல் இசையை பென்னட் கிறிஸ்டோபர் வழங்கியிருக்கிறார். பூர்விகா நிஷாவின் இயக்கத்தில் காட்சிகளின் வழியாக ஒரு கதை சொல்லல் தன்மை இருப்பதை உணரமுடிகிறது.

வெற்றி தோல்வி பாடலைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in