இன்று அன்று | 1971 செப்டம்பர் 3: புலம்பெயர் வாழ்வின் இலக்கியப் பதிவு

இன்று அன்று | 1971 செப்டம்பர் 3: புலம்பெயர் வாழ்வின் இலக்கியப் பதிவு
Updated on
1 min read

இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் இங்கிலாந் திலும் வாழும் அனுபவத்தைத் தத்ரூபமாக வடித்துக்காட்டிய ஆங்கில நாவல் ‘தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ்’. கிழக்கின் பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்க முடியாமல், மேற்கின் நாகரிகத்தையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிப்பவர்களைப் பற்றிய அந்நாவலை எழுதியவர் கிரண் தேசாய். அவருடைய தாய் அனிதா தேசாய் சிறந்த நாவலாசிரியராக அங்கீகரிக்கப்பட்டவர். மூன்று முறை புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.

1971 செப்டம்பர் 3-ல் சண்டிகரில் கிரண் தேசாய் பிறந்தார். புணேயிலும் மும்பையிலும் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தவர், 15 வயதில் தாயுடன் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார். அடுத்து அமெரிக்கா அனுப்பப்பட்டவர் 1993-ல் பென்னிங்டன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கிருந்து நியூயார்க் நகரம் சென்று மேற்படிப்பை முடித்தார். கிரண் தேசாயோ 1997-லேயே ‘மிரர் வர்க்’ எனும் தன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

தன் வாழ்க்கை அனுபவங்களைக் குறியீடாக வைத்து, 1998-ல் ‘ஹல்ல பல்லு இன் தி கோவா ஆர்சர்ட்’ எழுதினார். அஞ்சல் துறையில் வேலைபார்க்கும் கதாநாயகன், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு கொய்யா மரத்தில் குடியேறுகிறான். ஊர் மக்களுக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்து அவர்களைப் பற்றி அறிந்துவைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளுக்குக் குறிசொல்லத் தொடங்குகிறான். அவனுடைய தந்திரம் தெரியாத அப்பாவி மக்கள் அவனைத் தீர்க்கதரிசியாக வணங்குகின்றனர்.

இப்படிக் கேலியும் கிண்டலும் இழையோடிய அந்த நாவல், ஆங்கில இலக்கிய வாசகர்களின் வரவேற்பை ஓரளவு பெற்றுள்ளது.

அவருடைய அடுத்த நாவலான ‘தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ்’1980-களில் நிகழ்வதாகப் புனையப்பட்டாலும் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்புக்குப் பிந்தைய அமெரிக்காவையும் அமெரிக்கக் குடியேறிகளின் வாழ்க்கைப் போராட்டங்களையும், உலகமயமாதலினால் துண்டாடப்பட்ட வாழ்வியலையும் பூடகமாகப் புனைந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

“என் முதல் புத்தகத்தைக் காட்டிலும் இது இந்திய வாசகர்களின் வரவேற்பைப் பெருமளவு பெற்றது. ஆனால், புக்கர் பரிசு வென்றபோது டார்ஜிலிங் மற்றும் கலிம்பாங் மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நேபாள மக்களை இழிவுபடுத்தும் புனைவு எனச் சில பகுதிகளில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன. இனி, இந்தியா வந்தாலும் நான் அந்த ஊர்களுக்குச் செல்லமுடியாது” எனச் சமீப நேர்காணல் ஒன்றில் கிரண் தேசாய் குறிப்பிட்டார். இந்த நாவல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் ஒரு கதை மாந்தரையும் உள்ளடக்கியது. அந்தப் புனைவு குறித்தும் அவர் பெருமளவில் விமர்சிக்கப்பட்டார்.

மறுபுறம் சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார். அதே உற்சாகத்தோடு தனது அடுத்த நாவலைப் படைத்துக்கொண்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in