Published : 24 Sep 2015 09:46 AM
Last Updated : 24 Sep 2015 09:46 AM

பீகாஜி ருஸ்தம் காமா 10

விடுதலைப் போராட்ட வீராங்கனை

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பெண் சுதந்திரம், வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான பீகாஜி ருஸ்தம் காமா (Bhikhaiji Rustom Cama) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# பம்பாயில் வளமான பார்சி குடும்பத்தில் பிறந்தார் (1861). சட்டம் படித்திருந்த தந்தை வியாபாரம் செய்து வந்தார். அலெக்ஸாண்ட்ரியா நேடிவ் பெண்கள் ஆங்கில கல்வி நிறுவனத்தில் பயின்றார். பல மொழிகளை வெகு எளிதாகக் கற்று நிபுணத்துவம் பெற்றார்.

# தனது பெரும்பாலான நேரத்தை தர்ம காரியங்களிலும் சமூக சேவைகளிலும் செலவிட்டார். 1896-ல் முதலில் கடுமையான பஞ்சமும் அதைத் தொடர்ந்து கொடூரமான கொள்ளை நோய் ப்ளேகும் பம்பாய் மாகாணத்தை தாக்கின. நிவாரணக் குழுக்களில் இணைந்து பணியாற்றினார். ப்ளேக் நோய்த் தாக்குதலுக்கு ஆளானாலும் பிழைத்துக்கொண்டார்.

# உடல்நிலை மிகவும் பலவீனமானதால் சிகிச்சைக்காக 1901-ல் இங்கிலாந்து அனுப்பிவைக்கப்பட்டார். குணமடைந்து நாடு திரும்பத் தயாரான சமயத்தில் தேசியவாதியும் சிறந்த பேச்சாளருமான ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா மூலம் தாதாபாய் நவ்ரோஜியை சந்திக்க நேரிட்டது. அவரது தனிச் செயலராகப் பணியாற்றத் தொடங்கினார்.

# அங்கு பல தேசபக்தர்கள், மாணவர்கள், இந்தியா மீது அனுதாபம் கொண்ட ஐரோப்பிய அறிவுஜீவிகளை சந்தித்தார். 1905-ல் இந்தியா திரும்ப வேண்டும் என்றால் தேசியவாத நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு இவர் உடன்படவில்லை.

# அதே வருடம் பாரீஸ் சென்ற இவர், அங்கிருந்த இந்திய தேசியவாதி களுடன் இணைந்து பாரீஸ்-இந்தியன் சொசைட்டி என்ற அமைப்பை உருவாக்கினார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான இந்த இயக்கத்தின் பிற குறிப்பிடத்தக்க உறுப்பினர்களுடன் இணைந்து, வந்தே மாதரம் இதழை வெளியிட்டார்.

# மதன்லால் திங்க்ரா நினைவாகத் தொடங்கப்பட்ட மதன்ஸ் தல்வார் என்ற மற்றொரு இதழுக்கும் விநியோகஸ்தராக செயல்பட்டார். 1907-ல் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் ‘இந்திய சுதந்திரக் கொடி’ வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

# இந்த மாநாட்டில் இந்தியாவில் மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் பிரிட்டனிடமிருந்து சுயாட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். பாலியல் சமத்துவம், பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமை ஆகியற்றுக்காகப் போராடினார்.

# விநாயக் தாமோதர் சாவர்கர் மற்றும் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவுடன் இணைந்து இந்திய சுதந்திரக் கொடி என இவர் குறிப்பிட்ட கொடியை வடிவமைத்தார். அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், அநீதியை எதிர்க்க வேண்டும் என்றும் கூறினார். சுயாட்சி முறையைத் தீவிரமாக ஆதரித்தவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். இவரது நடவடிக்கைகளால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசு இவரைக் கொல்லத் திட்டம் தீட்டியது.

# அதை அறிந்த இவர், பிரான்சுக்குத் தப்பிச் சென்றார். இவரது பாரீஸ் உறைவிடம் ஏராளமான புரட்சி வீரர்களுக்குப் புகலிடமாக அமைந்தது.1935-ல் உடல்நிலை மோசமடைந்ததால் பம்பாய் வந்து சேர்ந்தார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு எழுதி வைத்தார்.

# இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொது அமைப்புகளுக்கு பீகாஜி காமா அல்லது மேடம் காமா என்று பெயர் சூட்டப்பட்டது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது. வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பீகாஜி காமா 1936-ல் 74-வது வயதில் காலமானார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x