Published : 28 Sep 2020 10:30 AM
Last Updated : 28 Sep 2020 10:30 AM

கொங்கு தேன் 29: கிழிச்சு வீசின 13 பக்க கடிதம்

சிவகுமார்

கார்ல் மார்க்ஸ்- ஏங்கல்ஸிற்கு எழுதிய கடிதங்கள், நேரு - இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், கிராவுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் என ஜீனியஸ்களின் கடிதங்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை. அவை உலகத்தாரால் வாசிக்கப்பட்டவை. அப்படியில்லாமல் 13 பக்கக் கடிதத்தை நானே எழுதி போஸ்ட் செய்து, அடுத்தநாள் அதையே போஸ்ட் ஆபீஸ் போய் திரும்ப வாங்கி, யாரும் வாசிக்கக்கூடாதுன்னு சுக்கல் சுக்கலா கிழிச்செறிஞ்சது எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம்.

எஸ்.எஸ்.எல்.சி முடிச்சதும் பி.எஸ்.ஜி.,காலேஜில எஞ்சினியரிங் கோர்ஸ் படிக்கலாம்னு விண்ணப்பிச்சிருந்தேன். எங்க ஊருக்கு காமராஜர் ஓராசிரியர் திட்டப்படி 1954-ல் குமாரசாமி அண்ணன் ஆசிரியரா வந்தாரு. சூலூர் பள்ளியில் எனக்கு 5 வருஷம் சீனியர். புள்ளார் கோயில் மண்டபத்தில் பள்ளிக்கூடம். தினம் ஒரு தடவை காலையில அவரை போய் பார்ப்பேன்.

அவருக்கு சினிமா ஆர்வம் அதிகம். அந்தக்காலத்தில ‘பேசும் படம்’, ’குண்டூசி’-ன்னு சினிமா சம்பந்தமா 2 பத்திரிகைகள் வந்திட்டிருந்தது. காங்கயம்பாளையம், குமாரசாமி ஊர். அந்த ஊர்ல பணக்காரங்க இந்த 2 புத்தகங்களையும் வாங்கிப் படிச்சுட்டு குமாரசாமி அண்ணா படிக்க குடுப்பாங்க.

ஆசிரியர் குமாரசாமி

இவரு அதை எங்க ஊருக்கு கொண்டாந்து குடுப்பாரு. அதில் முழுப்பக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, சாவித்திரி, பத்மினி படங்கள் இருக்கும். அதை எடுத்துட்டுப் போயி -அதே மாதிரி ‘லைன் டிராயிங்’ல(LINE DRAWING) வரைஞ்சு கொண்டாந்து வாத்தியார்கிட்ட காட்டுவேன். அவருக்குப் படம் போடத் தெரியாட்டியும்- சிவாஜி கண், மூக்கு, வாய் எப்படி இருக்கும்னு விவரிச்சு சொல்லி, ‘உம் படத்தில சரியா வரலே’ன்னு திருத்துவாரு.

அதே 1957-ல் குமுத்தில கார்ட்டூனிஸ்ட்டா இருந்த சந்தனு, தபால் மூலம் ஓவியம் கத்துக்குடுக்கறதா விளம்பரப்படுத்திருந்தாரு. அதில சேர்ந்தேன். மாதம் 2 பாடம் வரும். நாம வரைஞ்சு அனுப்பின படத்தில திருத்தங்கள் செஞ்சு அனுப்புவாரு.

எனது சாக்ரடீஸ் ஓவியம்

குடைபிடிக்கும் கை வரைந்து அனுப்பவும்னு கேட்டிருந்தாரு. ஒரு குடைய கையில வச்சுகிட்டு, கை விரல்கள் மடங்கி குடைய பிடிச்சிட்டிருக்கறதை அச்சு அசலா வரைஞ்சு அனுப்பினேன்.

‘அடேய் தம்பி! நீ எங்க இருக்கே?’ன்னு கேட்டிருந்தாரு. ‘நான் அத்துவானக் காட்டில, குடிக்க தண்ணி, பள்ளிக்கூடம் இல்லாத ஊர்ல இருக்கே!’ன்னு பதில் போட்டேன். ‘வருங்காலத்தில நீ பெரிய ஆர்ட்டிஸ்ட்டா வருவே’ன்னு எழுதினாரு. சந்தனுகிட் தபால் வழி ஓவியம் 2 வருஷம் கத்துகிட்டேன். முதல் வருஷம் முடிஞ்சதும், என் விநோபா ஓவியத்தை பாராட்டி, 2-ம் வருஷ ‘ப்ராஸ்பெக்டசில்’ பிரசுரித்தார்.

ப்ராஸ்பெக்டசில் இடம் பெற்ற விநோபா ஓவியம்

ஓவியங்களை தினமும் பார்த்த வாத்தியார் - பி.எஸ்.ஜி காலேஜ் போனா நீ கஷ்டப்பட்டுத்தான் படிக்கோணும். ஓவியத்துறையில போனா நிச்சயம் பெரிய ஆளா வரமுடியும்னு சொல்லி -சென்னை ஓவியக்கல்லூரியில் சேர பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்து விண்ணப்பிச்சோம். அதுக்குள்ள இந்த வருஷ நுழைவுத் தேர்வு ஆரம்பிச்சாச்சு. அடுத்த வருஷம் அப்ளை பண்ணுங்கன்னு பதில் வந்திச்சு.

மெட்ராஸ் கிளம்பறதுக்கு ஒரு மாசம் இருக்கும். திடீர்னு அம்மா ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்க. கலங்கலுக்கு குடிதண்ணீர் கொண்டார குடத்தோட போனவங்க ஒரு சேதி சொன்னாங்க.

‘உங்க மாமனோட சிநேகிதர் நாயக்கரைப் பார்த்தேன். சூலூர் பக்கத்தால சதர்ன் டெக்ஸ்டைல் மில் இருக்கு. அதில நானும் ஆறுமுகமும் பங்கு பணம் போட்டிருக்கோம். உன் பையனுக்கு அங்க வேலை வாங்கி குடுத்திடறோம். ஆறுமுகம் பொண்ணையும் கட்டி வச்சிரலாம். ஒரு மோட்டார் பைக் வாங்கி குடுத்திரலாம். பையன் பக்கத்திலேயே இருப்பான். எப்படி யோசனை’ன்னு கேட்டிருக்காரு..

மாமா

கடைசி காலத்தில கஞ்சி ஊத்த நம்ம புள்ளை நம்ம பக்கத்திலயே இருக்கறது நல்லதாச்சேன்னு எங்கம்மாவும் ஆடுமாதிரி தலையாட்டிட்டு வந்திட்டாங்க. வீட்டுக்கு வந்தவங்க குடுகுடுப்பைக்காரன் மாதிரி ‘நல்ல காலம் பொறந்திருச்சி; நமக்கு நல்ல காலம் பொறந்திருச்சி’ன்னு இந்த விஷயத்தை சொன்னாங்க.

அவ்வளவுதான். சினிமால காட்டற மாதிரி பூகம்பம் வந்து கட்டடங்கள் எல்லாம் இடிஞ்சு சரியுது. புயல்காத்தில மரங்கள் எல்லாம் பேயாட்டம் போடுது. கண்ணு கூசற மாதிரி மின்னல் வெட்டுது.-நெஞ்சில எறங்கற மாதிரி இடி, இடிக்குது. நெலை குலைஞ்சு திண்ணையில சாஞ்சேன்.

எல்லா சாமிக மேலயும் கோபம் பொத்துகிட்டு வந்தது. ‘அறியா வயசில விடியறதுக்கு முன்னாடி வேக,வேகமா போயி -பெரியாத்தா தோட்டத்தில வெள்ளரளி (வெள்ளைஅரளி) -செவ்வரளி பூ பறிச்சாந்து மாலை கட்டி உனக்கு போட்டு கும்பிட்டனே முருகா! கழுத்தை புதுக்கத்தி வச்சு அறுத்திட்டியே. நியாயமா?’ன்னு எங்கய்யன் வச்சுட்டுப் போன மொட்டையாண்டி படத்துக்கு முன்னாடி போய் தாரை, தாரையா கண்ணீர் விட்டு அழுதேன்.

முருகர் படத்தின் முன்னால் அழுகை

எங்க ஊட்லயிருந்து 4 வீடு தள்ளி பரமசிவங்கோயிலிருக்கு- அது புதுப்பிக்கப்பட்டபோது கேரளாவிலிருந்து செண்டை, நகாரி, கொம்பு, வாத்தியங்கள் வாசிக்க வாங்கிட்டு வந்தாங்க. யாரும் சொல்லிக் குடுக்காம செண்டை வாசிக்க நான் கத்துகிட்டேன். திங்கள், வெள்ளி விஷேச பூஜை நடக்கும். ஒருத்தர் சாமியாடி அருள்வாக்கெல்லாம் சொல்லுவாரு. செண்டை வாசிக்கறப்போ, வேர்த்து விறுவிறுத்து -வியர்வை நெத்திலிருந்து பெருக்கெடுத்து ஆறா பெருகி ஓடும். பூஜை முடிஞ்சதும் நான் ஊட்டுக்கு கிளம்பிடுவேன்.

அந்தக் கோயிலுக்குப் போயி, ‘எல்லா சாமிகளும் கூட்டா சேர்ந்து என் எதிர்காலத்திற்கு உலை வச்சிட்டீங்களே’ன்னு கதறினேன்.

தூக்கு தண்டனை அறிவிச்சவுடனே கைதி பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகி கூச்சல் போட்டு அழுது அரற்றுவான். அப்புறம் ஒரு கட்டத்தில அவனே சமாதானமாயி-மெளனமாயிருவான். எதுவும் பேசாம தூக்குக்கயிறுக்கு மனசளவில தயாராயிடுவான்.

அப்படி ராத்திரி பூரா அழுது, சரி நமக்கு விதிக்கப்பட்டது இதுதான்னு மெளனமாயிட்டேன். பள்ளிக்கூடம் போனேன். இன்னிக்கு என்ன படம் வரைஞ்சே?’ன்னு வாத்தியார் கேட்டாரு.

‘அதுக்கு இனி வேலையே இல்லை. நான் மில் வேலைக்குப் போகப் போறேன்!’ அப்படின்னு சொன்னேன். வாத்தியார் நிதானமான ஆசாமி. அதிர்ந்து பேச மாட்டார். கோபப்பட மாட்டார். எதையும் அறிவுப்பூர்வமா சிந்திச்சு சொல்றவர்.

கொஞ்ச நேரம் மவுனமா இருந்திட்டு, ‘‘சரிப்பா! மில்லுக்கு போலாம்ன்னு உங்கம்மா பேச்சை கேட்டு திடீர்னு முடிவு பண்ணீட்டே. ஒண்ணை நல்லா புரிஞ்சுக்க. மனசுல ஒரு ஆசையை வச்சிட்டு, புடிக்காத வேலையில சேர்ந்தேன்னா - ஒழுங்கா அந்த வேலைய செய்ய முடியாது. எதிர்காலம் இப்படி இருண்டு போச்சேன்னு நினைச்சு, நினைச்சு வாழ்நாள் பூரா அழுதிட்டே இருக்க வேண்டியதுதான். ஆற அமர ரெண்டு நாள் யோசனை பண்ணி முடிவு எடுன்னாரு!’’

பழையபடி நெஞ்சை நிமிர்த்தி மனசாட்சியை கேட்டேன்.

‘என்ன ஆனாலும் சரி மில்லுக்கு போகக்கூடாதுன்னு முடிவெடுத்து எங்க மாமாவுக்கு ஒரு லெட்டர் எழுதினேன். ‘எஸ்.எஸ்.எல்.சி.’ படிக்கறப்போ -சென்னையிலிருந்து மாணவர் மன்றம்- அப்படின்னு ஒரு அமைப்பை மயிலை சிவமுத்து, தணிகை உலகநாதன் ரெண்டு பேரும் நடத்தி- தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு படிக்கற எல்லா மாணவர்களுக்கும் தமிழ் -பொது- சிறப்புத் தேர்வு வச்சு -முதல் வகுப்புல தேர்ச்சி அடைஞ்சவங்களுக்கு பாராட்டுப் பத்திரம் அனுப்புவாங்க.

எங்க ஸ்கூல்ல 28 பேர் அந்த தேர்வு எழுதினோம். 25 பேர் முதல் வகுப்பில பாஸ் பண்ணினோம். சென்னையிலிருந்து எங்களுக்கு சர்டிபிகேட் அனுப்பி வச்சாங்க.

பேனாவை எடுத்தேன். உணர்ச்சிப் பிரவாகம். வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டிச்சு. பத்து மாசத்தில அப்பாவை பறிகொடுத்து, 4 வயசில அண்ணனை பிளேக்குக்கு காவு கொடுத்தது வசதியில்லாததனால அக்காவை 3-வதோட பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி, தீபாவளி, பொங்கலுக்கு புதுத்துணி போடாம, எஸ்.எஸ்.எல்.சியில 5 ரூபாய் கொடுத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க முடியாம போனது -கொடிது, கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமைன்னு அவ்வையார் சொன்ன மாதிரி, இதெல்லாம் எப்படி தாண்டி வந்தேன். சின்னவயசில எங்க ஊருக்கு வந்தப்பவெல்லாம், ‘தண்டபாணி! நல்லா படிடா. உன்னை மேல படிக்க வைக்கறேன்னு சொல்லிட்டுப் போவீங்க. இப்ப நீங்களே, என்னை மில்லு வேலையில அமுக்கப் பாக்கறீங்க.

பாரதி ஓவியம்

செத்தாலும் சாவேனே தவிர மில்லு வேலைக்கெல்லாம் போக மாட்டேன். உங்களை கையெடுத்துக் கும்பிடறேன். நீங்க எந்த உதவியும் செய்ய வேண்டாம். ஆளை உட்டா போதும்னு என் கோபம், ஆங்காரம் எல்லாம் கொட்டி 13 பக்கம் லெட்டர் எழுதி பொள்ளாச்சி மாமா அட்ரசுக்கு போஸ்ட் பண்ணீட்டு வந்தேன்.

அது வெள்ளிக்கிழமை நாள். பொழுது உழுந்து செவ்வானம் படர்ந்திருந்தது. சந்தைக்கு போயிட்டு அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், செலக்கரிச்சல் போறவங்க தலையில சும்மாடு கூட்டி, கூடைய வச்சுட்டு, சூடா வாங்கின கடலை பொரிய மடியில கட்டி எடுத்து ஒரு வாய் போட்டு, மென்னுட்டே ஏதேதோ பேசிட்டுப் போறாங்க.

கலங்கல் மொகத்தலையில (பிரிவு) நார்த்தாங்குட்டை இருக்கு. அங்க இருந்த முட்டாங்கல்லு (குத்துக்கல்லு) மேல குத்தவச்சு உட்கார்ந்தேன்.

உடம்பு சூடாகி உணர்ச்சி பொங்கி கண்ணீரா பிரவாகம் எடுக்குது. வாழ்க்கையில் முதல் தடவையா எங்கப்பாவை நெனைச்சேன்.

‘இப்படி அனாதையா என்னை விட்டுட்டுப் போய்ச் சேர்ந்திட்டியே. அய்யா! நீ இருந்தா எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா?’ன்னு -தகப்பன் பெருமையை அந்த வினாடி உணர்ந்து -துடிச்சேன். கதறினேன். வீட்டுக்குத் திரும்பி வெறும் வயித்தோடவே தூங்கிட்டேன்.

விடிஞ்சதும் அம்மா இன்னொரு அதிர்ச்சி செய்தி சொன்னாங்க. ‘பொள்ளாச்சிலருந்து உங்க மாமா வந்திரக்காராமா - வா, போயி பார்த்திட்டு வரலாம்!’ன்னாங்க. ‘9 வயசில விதவையான அக்கா, அடுத்தவன் காட்டுல போய் பாடுபட வேண்டாம்னு 15 ஏக்கரா பூமி வாங்கி கிணறு வெட்டி விவசாயம் பண்ண ஏற்பாடு செஞ்சவரு அவரு. கலங்கல் பக்கத்தால அந்த தோட்டம் இருக்கு. அந்த தோட்டத்துக்கு இப்ப வந்திருக்காரு. எங்க மாமா மூஞ்சிய நேருக்கு நேரா பார்த்து, யாரும் பேச முடியாது. அப்படி ஒரு உசரம். கம்பீரம். அதட்டல் குரல்... நான் 13 பக்கம் கடிதம் எழுதின விஷயத்தை அவருகிட்டவே போய் எப்படிச் சொல்றதுன்னு பயம் வந்திருச்சு.

‘நான் ஒண்ணும் வரலே. மில்லு வேலைக்கெல்லாம் போக முடியாதுன்னு உம் பொறந்தவன்கிட்ட (சகோதரன்) போயி சொல்லு!’ அப்படின்னேன்.

‘அட, நாயி! நேத்து ராத்திரி வரைக்கும் நல்லாத்தானே இருந்தே? ‘உன் இஷ்டப்படி மில்லுக்கு போறேம்மா’ன்னு சொன்னவன் மனசை, விடியறதுக்குள்ளே எவன்டா இப்படி மாத்தினான்? சரி, உனக்கு என்ன தோணுதோ அப்படியே செய்! ஆனா, நீயே உங்க மாமங்கிட்ட வந்து எனக்கு மில்லுக்குப் போக இஷ்டமில்லைன்னு சொல்லு -வா போலாம்’ன்னு கூப்பிட்டாங்க அம்மா.

தலைக்கு மேல வெள்ளம் போயிருச்சு. இனி பயந்து என்ன ஆகப்போகுது? துணிஞ்சு சொல்லிட வேண்டியதுதான்னு புறப்பட்டேன். பசி உயிரு போகுது -பச்சை தண்ணி குடிக்கலே. கொளுத்தற வெயில். கால்ல பொடி பத்திக்குது. வெறுங்கால்ல வேகாத வெயில்ல அம்மா கூடப்போனேன்.

கலங்கல் நாயக்கர் வீட்டில இருந்தாரு மாமா. வீட்டுக்குள்ளே நுழையறோம். சூடா விவாதம் நடந்திட்டிருக்கு.

எங்க மாமா பேசறாரு. ‘நாயக்கரே! நீங்க சொல்றதை மறுத்துப் பேசறேன்னு நினைக்காதீங்க. மெட்ராஸ் போனா பணக்கார வீட்டுப் பசங்க கெட்டுப் போயிருவாங்கன்னு சொல்றீங்க. ஒத்துக்கறேன். என் பையனும் கெட்டுப் போவான். உங்க பையனும் கெட்டுப் போவான். ஆனா, இவனை அந்த லிஸ்ட்ல சேர்க்காதீங்க. சின்ன வயசிலிருந்தே அவனை, ’நான் படிக்க வைக்கிறேன்’னு சொல்லிட்டு வந்திருக்கேன்.

பசங்களுக்கு, எதை படிக்க ஆசை இருக்கோ, அதை படிக்கத்தான் நாம உதவி செய்யணும்.. அவன் ஆசை ஒண்ணு, நம்ம விருப்பம் ஒண்ணுன்னு இருக்கறப்போ -நாம நெனைக்கறதை படிக்கச் சொன்னா படிப்பு ஏறாது. காசும் வீணா போகும். காலமும் வீணாப் போகும். இந்த ஒரு விஷயத்தில என் இஷ்டப்படி உட்ருங்க’ன்னாரு.

கை கட்டிட்டுப் பக்கத்தில நின்ன என்னைப் பார்த்து, ‘நீ போடா மெட்ராஸ் - போயி உனக்கு புடிச்சதை படி!’ன்னாரு மாமா.

இந்த பத்தரை மாற்றுத் தங்கத்துக்கா 13 பக்கம் திட்டி லெட்டர் போட்டோம். நெனைச்சு ரத்தக்கண்ணீர் வடிச்சேன்.

பளீர்ன்னு மனசுக்குள்ளே மின்னல் வெட்டுச்சு. மாமா லெட்டர்.. போஸ்ட் ஆபீஸ் ஓடினேன். தபால்காரர்

அருணாசலம்கிட்ட விவரத்தை சொல்லி அந்த லெட்டரை எடுத்துத் தரச் சொன்னேன். ‘யாராயிருந்தாலும் ஒரு லெட்டரை ஒருத்தர் பேருக்கு எழுதி, அவங்க அட்ரசுக்கு அனுப்பீட்டா அது அவருக்குத்தான் சொந்தம். வேணும்ன்னா பொள்ளாச்சி போயி, அந்த அட்ரஸ்ல, திருப்பி வாங்கிக்கச் சொல்லு!’ன்னு போஸ்ட் மாஸ்டர் கத்தறாரு. போஸ்ட் மாஸ்டர் மெட்ராஸ்காரர். அவருக்கு என்னைத் தெரியாது.

அருணாசலம் போயி- போஸ்ட் மாஸ்டர் காதைக் கடிச்சாரு. உடனே என்னை உள்ளே கூப்பிட்டாங்க. போஸ்ட் மாஸ்டர் எழுதீட்டே, எம் மூஞ்சியப் பாக்காம - ‘வாப்பா! செளக்கியமா? உங்கக்கா செளக்கியமா?‘’ன்னாரு. எங்கக்காவை, மெட்ராஸ்கார போஸ்ட் மாஸ்டருக்கு எப்படி தெரியும்? சரி விடுன்னு மனசில நெனச்சிட்டு, ‘’செளக்கியமா இருக்காங்க!’’ன்னேன்.

‘‘எந்த அக்கா?’’

‘‘எந்த அக்கா சார்?’’

‘‘சாவித்திரி அக்கா...?’’ அப்படின்னாரு. போஸ்ட் ஆபீசே சிரிப்பு அலையில அதிருது. நான் வெக்கத்தில நெளியறேன்.

அஞ்சாறு மாசமா, சிவாஜி-எம்.ஜி.ஆர், ஜெமினி, சாவித்திரின்னு நடிகர்களுக்கு ஓவியம் வரைஞ்சு அவங்க அட்ரசுக்கு அனுப்பி, ஒரு வாரத்தில பதில் வரலேன்னா தபால் கார்டு மூலம் - ‘என் ஓவியம் கிடைச்சதா சாவித்திரி அக்கா -சீக்கிரம் பதில் போடுங்க’ன்னு எழுதி போஸ்ட் பண்ணுவேன். ‘போஸ்ட் கார்டு’ல -’சாவித்திரி அக்கா’ன்னு ஒரு கிராமத்துப் பையன் எழுதியிருப்பதை பார்த்திருக்காரு போஸ்ட் மாஸ்டர். இந்தப் படம் போடற பையனை பாக்கணும்யா-ன்னு போஸ்ட்மேன்கிட்ட அப்பப்ப சொல்லியும் இருக்காரு.

எனது அலிபாபா எம்ஜிஆர் ஓவியம்

இப்ப நானே வந்திட்டேன். ‘உங்க சாவித்திரி அக்கா, ஜெமினிய லவ் பண்றாங்களா, கல்யாணம் பண்ணிக்குவாங்களா?’ன்னு கேட்டாரு. ‘ஆமா சார்!’ன்னு அப்பவே நான் சும்மா அடிச்சு விட்டேன். சிரிச்சு சமாதானமாகி - ‘நாம எழுதின லெட்டரை போஸ்ட் பண்ணீட்டா, அது அந்த அட்ரஸ்ல உள்ளவருக்குத்தான் சொந்தம். நாம கேட்டா தர மாட்டாங்க. இனிமே இப்படி செய்யாதீங்க!’ன்னு சொல்லி லெட்டரை கையில குடுத்தாரு.

ஜெமினி -சாவித்திரி

வாங்கிட்டு பக்கத்தில இருக்கிற சூலூர் குளத்துக்குப் போயி, அந்த லெட்டரை பீஸ், பீஸா அரை மணி நேரம் கிழிச்சு குளத்துக்குள்ளே போட்டப்பறந்தான் மனசுக்கு பூரண நிம்மதியாச்சு.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x