

சில நாட்களுக்கு முன்பு ஐ.ஐ.டி-யில் வரலாற்று ஆய்வாளர் அனன்யா வாஜ்பய் உரை நிகழ்த்தினார். நானும் சில நண்பர்களும் பார்வையாளர்களாய்க் கலந்துகொண்டோம். சூத்திரரான சிவாஜி எவ்வாறு பிராமணர்களின் உதவியுடன் தன்னை சத்திரியராய் உருமாற்றி, அதை உறுதிப்படுத்துவதற்கான சடங்குகள் நடத்தி, தன் குடும்ப வரலாறு பற்றி ஒரு பொய்யான தகவலை உருவாக்கினார் என்று அனன்யா பேசினார்.
அவருடைய பேச்சு முடிந்ததும் கலந்துரையாடல். நான் சில கேள்விகள் கேட்டேன். அதன் பிறகு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா ஆண்டபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். அப்போது மொத்த அரங்கிலும் சிரிப்பலைகள் பரவின. எனக்குச் சில நொடிகள் ஒன்றுமே விளங்கவில்லை. நான் எவ்வாறு தமிழகத்தின் பகுதியான திருவிதாங்கூரை முன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டார் என்ற போது மீண்டும் சிரித்தார்கள். நான் எதாவது தவறாய்ச் சொல்லிவிட்டேனா அல்லது அவர்களுக்குப் புரியவில்லையா என்று குழம்பிவிட்டேன். முன்பு மலையாள மன்னர்களின் ஆட்சியின் பகுதியாய் இருந்த சமஸ்தானம் திருவிதாங்கூர். அது பின்னர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்றதும்தான் சிரிப்பலை ஓய்ந்தது.
பின்னர் நான் இந்தக் கூட்டத்தின் விநோத எதிர்வினை பற்றி ஒரு பேராசிரியரிடம் விசாரித்தேன். அவர் சொன்னார், “மாணவர்களில் கணிசமானவர்கள் மலையாளிகள். அதுதான் விஷயம்”. அவர்கள் மனதில் மார்த்தாண்ட வர்மா ஒரு மலையாள மன்னர் என பதிந்திருக்க வேண்டும். திருவிதாங்கூர் என்பதும் ஒரு மலையாளப் பிரதேசம் என அவர்கள் நினைத்திருக்கலாம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் ஆட்சியின் கீழே உள்ளது. இந்த பத்மநாபபுரம் 1729-ல் இருந்து 1795 வரை திருவிதாங்கூரின் தலைநகராக இருந்தது. கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்கள் 16-ம் நூற்றாண்டில் தொடங்கி 20-ம் நூற்றாண்டில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை தமிழகப் பகுதியான திருவிதாங்கூரை மையமிட்டுத்தான் ஆட்சி நடத்தினர். மார்த்தாண்ட வர்மாவின் கீழ் திருவிதாங்கூர் குமரி துவங்கி கொச்சின் வரை விரிந்து கிடந்தது. இந்த வரலாறு அம்மாணவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் திருவிதாங்கூரை ஒரு கேரளப் பகுதி என்றும் பின்னர் தமிழகம் பிடுங்கிக்கொண்டது என்றும் நினைத்திருக்கலாம். எப்படியோ இப்போது தமிழக மண்ணாக உள்ள ஒரு பகுதியை மலையாள மன்னர் ஆண்டார் எனும் வாக்கியம் அவர்களுக்குப் பெரிய நகைச்சுவையாகிவிட்டது.
செல் சேவிஸ். விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கவிஞர். அப்பகுதியின் விசேடத் தமிழில் கவிதை எழுதும் ஒரே கவிஞர் அவர் தான். அவர் ஒரு முறை சொன்னார்; குமரி மாவட்டம் 1956-ல் கேரளப் பகுதியில் இருந்து தமிழகத்தின் மாவட்டமாய் இணைந்த விசயம் அவரது பெற்றோர்களுக்கு நீண்ட காலம் தெரியாமல் இருந்ததாம். அவர்களும் வேறும் சிலரும் அப்போதும் தாம் கேரள மாநிலத்தவர் என்றே நம்பி வந்தனர். இன்றும் குமரி மாவட்டத்தினர் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் நடுவில்தான் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். மலையாளம் கலந்த தமிழ் பேசுகிறார்கள். இரண்டு மொழிகளையும் பேசுகிறார்கள். இரண்டு மாநில கலாச்சாரமும் கலந்த ஒரு தனி அடையாளம் அவர்களுக்கு உள்ளது. விளைவாக, தமிழர்கள் அவர்களை மலையாளி என்றும் மலையாளிகள் அவர்களைப் பாண்டி என்றும் அழைப்பார்கள். ஒரு முக்கியமான மலையாள மன்னர் தமிழகப் பகுதியை ஆண்டார் என்ற வாக்கியம் மலையாளிகளை இவ்வளவு குஷியாகச் சிரிக்கத் தூண்டுகிறது என்பது இன்றும் அப்பகுதி யாருடையது எனும் குழப்பம் தீரவில்லை என்பதைக் காட்டுகிறது.
மற்றொரு செய்தியையும் நான் புரிந்துகொண்டேன். தமிழகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறோம் என்பதாலேயே அது பொதுவான வழக்கமான இடம் என நாம் நம்பி விடக் கூடாது. இதையே நான் ஒரு இலக்கியக் கூட்டத்தில் சொன்னால் முன்னெண்ணம் இன்றிக் கவனிப்பார்கள். ஆனால், மலையாளிகள் மிகுந்த இடத்தில் சொன்னால் அவர்களுக்கு எளிதில் உள்வாங்க இயலாது. வட இந்தியாவுக்குப் போய் மோடியை எளிதில் விமர்சித்து ஒரு கூட்டத்தில் பேசவோ இந்துத்துவாவைக் கண்டிக்கவோ முடியாது. இங்கு கைதட்டுவார்கள். அங்குள்ள கூட்டத்தின் எதிர்வினை வேறொன்றாக இருக்கும்.
என்னதான் ஒருமித்த இந்தியா எனப் பேசினாலும் பக்கத்தில் மலையாளிகள், தொலைவில் வடக்கில் இந்திக்காரர்களுக்கு நடுவே நாம் எவ்வளவு தனிமையாய் இருக்கிறோம் என இது எனக்கு உணர்த்தியது.