Published : 11 Sep 2020 09:58 AM
Last Updated : 11 Sep 2020 09:58 AM

கொங்கு தேன் 24: ‘ஜமீன் ஊட்டுப் புள்ள...!’

எம்.என்.எஸ்ஸூடன்

சிவகுமார்

1975 டிசம்பர் 26-ந்தேதி ‘தெங்கு மரஹாடா’ அத்துவானக்காட்டிலுள்ள கிராமத்துக்கு 2 ஜீப்புக வந்து நிற்குது. அது போலீஸ் ஜீப்கள் இல்ல; சாதாரண ஜீப்கள்தான். அதுக நிக்கறதுக்குள்ளேயே பிரியாணி வாசம் ஆளைத் தூக்குச்சு.

அண்டா அண்டாவா பிரியாணி, சிக்கன். மீன் வறுவல், அப்பளம், ஊறுகாய், தயிர்சாதம்னு ஜீப்ல வந்த நாலு ஆளுக ஆளாளுக்கு எறக்கி வைக்கிறாங்க. குட்டி கல்யாண வீட்டிற்கு சமையல் பண்ணின மாதிரி அயிட்டங்கள். சும்மா 150 பேரு. காஞ்சமாடு கம்புல பூந்தாப்ல இஷ்டத்துக்கு சாப்பிட்டப்புறமும் அயிட்டங்கள் மிச்சம் இருந்துச்சு.

முந்தினநாள் ராத்திரியே, ஊருக்குள்ளே மேயற கோழிகள்ள வெடக்கோழியா 50 புடிச்சு, ‘புல்லு’ திங்கற வயசுள்ள வெள்ளாட்டுக்குட்டிக அஞ்சாறை புடிச்சாந்து 10 ஆளுகளை வச்சு விடிய, விடிய இதெல்லாம் தயார் பண்ணி, காலையில எட்டு மணிக்கு கோயமுத்தூரு மாதம்பட்டில புறப்பட்டு 12 மணிக்கெல்லாம் கொண்டாந்து தெங்குமரஹாடால படப்பிடிப்புல இருந்த 'அன்னக்கிளி' குழுவுக்கு பந்தி வச்சவர் மாதம்பட்டி ஜமீன்தார் சிவகுமார்.

விசாலமான உடம்பு. அவரோட மனசும் விசாலமானது. யானை உருவம்தான், பெரிசா இருக்கும். சுபாவம் ரொம்ப சாந்தமானது. அப்படித்தான் அவரும். அந்த பெரிய எடத்துப்புள்ளைக்குள்ளே பணிவு, அடக்கம்னா அடக்கம் அப்படி இருக்கும். கைகட்டித்தான் பேசுவாரு. சிரிக்கும்போது கண்கள் சிறுத்துப் போகும். வாயெல்லாம் பல்லா சிரிப்பாரு. சத்தம் மட்டும் வராது.

இளையராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தின 'அன்னக்கிளி' கதை செல்வராஜ் எழுதியது. பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம். அவரு தம்பி எஸ்.பி.டி., பிலிம்ஸ் சுப்பு தயாரிச்சாரு.

முழுக்க முழுக்க வெளிப்புறத்திலயே படத்தை எடுத்துறணும்னு தேவராஜ்-மோகன் இரட்டையர்கள் முடிவோட இருந்தாங்க, நானும், பஞ்சு தம்பி லட்சுமணனும், இவங்களைக் கூட்டிட்டு, வாரக்கணக்கில கொங்கு மண்டலம் பூராவும் லொகேஷன் தேடுனோம். பொள்ளாச்சி, ஆனைமலை, காரமடை, மேட்டுப்பாளையம், கோபி செட்டிபாளையம், கொங்கர்பாளையம், ஏற்காடு மலைப்பகுதி எல்லாம் சுத்தி அலைஞ்சு கடைசியில பவானி அணைக்கட்டு பக்கம் கராச்சிபுதூர். அங்கிருந்து மேற்கே காட்டுக்குள்ளே போனா தெங்குமரஹாடா-ங்கிற கிராமம். கொலம்பஸ் இந்தியாவைத் தேடி புறப்பட்டு மேற்கிந்தியத் தீவுகள்ல கால் வச்ச மாதிரி -எங்கெங்கோ தேடி அலைஞ்சு இந்த கிராமத்தைப் புடிச்சோம்.

அன்னக்கிளி படத்தில்

அந்தப் பகுதிக்கு தெங்குமரஹாடான்னு ஏன் பேர் வந்துச்சு? தென்னை மரங்கள் அடர்ந்த பிரதேசம். என்பதால் அந்த பேர். கிராமத்தைச் சுத்தியும் காட்டு மிருகங்கள் சர்வ சாதாரணமா உலா வர்ற பெருங்காடு. மேல் கோத்தகிரியில் இருக்கும் படுகர் இன மக்களுக்கு இங்கு விவசாய நிலம் இருந்திச்சு. எல்லாம் கூட்டுறவு விவசாயம்தான். குட்டியா 20, 25 ஓட்டு வீடுகள்தான். வானுயர்ந்த மரம் ஒண்ணு ஆத்தங்கரையில இருந்திச்சு. அதிலதான் தூரி (ஊஞ்சல்) ஆடற சீன் முதல்ல எடுத்தாங்க. அப்படிப்பட்ட இடத்திலதான் படக்குழுவுக்கு அன்னிக்கு பெரிய விருந்தே வச்சாரு நம்ம மாதம்பட்டி ஜமீன் சிவகுமார்.

எம்.என்.எஸ்.,னு சுருக்கமா கூப்பிடற மாதம்பட்டி சிவகுமார், ஒரு கலா ரசிகர். சுமார் 30, 40 ஆண்டுகள் சினிமா படங்களோட பாடல் ரிக்கார்டுகள் சேர்த்து லைப்ரரியே வீட்டில வச்சிருந்தாரு.

அரண்மனை மாதிரி பெரிய வீடு. லீவுல போனா குடும்பத்தோட குறைந்தபட்சம் 2 நாள் அங்கே தங்குவோம். எம்.என்.எஸ் துணைவி தாரா என் துணைவிக்கு மிக நெருங்கிய தோழி. கிராமத்துப் பட்டதாரியான என் மனைவிக்கு, பட்டண நாகரிகம், புடவை, ஜாக்கட் மாடர்னாக வாங்குவது -ஜடை போடும் பழக்கத்தை மாற்றி குட்டையாக முடி வெட்டி ‘கிளிப்’ போட்டுக் கொள்வது எல்லாம் தாரா சொல்லிக் கொடுத்ததுதான்.

என் சம்சாரம் போன் அரை மணிநேரம் ‘என்கேஜ்டு’ ஆக இருந்தால் தாரா அம்மா கூட பேசிக்கிட்டிருக்காங்கன்னு அர்த்தம்.

மாதம்பட்டி தம்பதியருடன் குழந்தைகள்

மாதம்பட்டியில் இரவு உணவு முடித்து 12 மணி வரை சினிமா அனுபவங்களைப் பேசிக் கொண்டிருப்போம். ஆஞ்சநேயர் போன்ற கட்டுமஸ்தான - உடம்பெல்லாம் ‘கொச கொச’வென முடியுடன் கூடிய 6 அடி உயரம் தாண்டிய இளைஞன் எம்.என்.எஸ் பின்னாடி உட்கார்ந்து அமைதியாக நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் ‘பளீர்’ என்று பல்லைக் காட்டியோ, சத்தம்போட்டு சிரித்தோ நான் பார்த்ததில்லை.

பெரும்பாலும் குனிந்து எங்கள் பின்னால் வருவார். எங்கள் முன்பு பணிவு காட்ட வேண்டும் என்பதும் ஒன்று. நாங்கள் பேசுவது கேட்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

‘அன்னக்கிளி’- யில் பழக்கமாகி எப்போது கோவை போனாலும் மாதம்பட்டி 2 நாள் போவோம். சினிமாவில் பட்ட கஷ்டங்கள், அவமானங்களைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் எம்.என்.எஸ் பக்கவாட்டில் திரும்பி ஆறடி மெளன இளைஞரைப் பார்த்துச் சிரிப்பார். வெகுநாள் புரியவில்லை. ஒரு நாள், ‘‘அவரைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்டேன்.

‘‘அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை. அதனால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு பயந்திருப்பார்!’’ என்றார்.

ஜமீன் ஊட்டுப் புள்ள அவரது அப்பிச்சி ஊத்துக்குளி ஜமீன். 1920-களில் லண்டன் போய் படித்தவர். ராஜாவாக வாழ்ந்தவர் பரம்பரையிலிருந்து ஓர் இளைஞன் சினிமாவுக்குள் வந்து அவமானப்படுவதா?

‘‘ச்சே, மறந்து கூட அந்த எண்ணத்தை வளர்த்துக்காதே தம்பி!’’ன்னு சொன்னேன்.

என் ‘அட்வைசை’க் கேட்டு சலிச்சுப்போய் ஒரு நாள் அந்த இளைஞன், ‘‘அண்ணா! சும்மா, சும்மா ஜமீன் பெருமையப் பத்தியே பேசாதீங்க. நாளைக்கு என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் முடிஞ்சுட்டா, நான் வெறும் ஆளு. சொல்லிக்க எங்கிட்ட எந்தப் பெருமையும் இல்லை. நீங்களா மெட்ராசுக்கு கூட்டிட்டுப் போயி எந்த கம்பெனிலாவது சேர்த்து விடுங்க. இல்லே நானே போய்க்கறேன்!’’ என்றார்.

அவர் தீவிரத்தைப் புரிந்து கொண்டு சென்னை அழைச்சுட்டுப் போனேன். எடுத்த எடுப்புல சினிமாவுல பெரிசா சான்ஸ் கிடக்கும்னு வீதி வீதியா, கம்பெனி கம்பெனியா ஏறி எறங்கறதை விட நடிப்புப் பயிற்சி எடுத்துகிட்டா நல்லதுன்னு -சகஸ்ரநாமம் அவர்களின் ‘சேலா ஸ்டேஜ் நாடகக் குழு’ வில் சேர்த்துவிட்டேன்.

முதல் நாடகத்தில் 4 வரி வசனம் பேச மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், புத்திசாலியான அந்த இளைஞன் மேடையில் பக்கவாட்டில் நின்று -மற்ற நடிகர்கள் பேசி நடிக்கும் அத்தனை வசனங்களையும் மனப்பாடம் செய்து அவர்கள் முன் பேசிக் காட்டினான்.

முதல் நாடக சம்பளம் ரூ. 10. அதை வாங்கி வந்து வாழ்க்கையில முதன் முதலா சம்பாதித்த காசில் சாக்லேட் 2 கடையில் வாங்கி வீட்டுக்கு வந்து சிறுவர்களான சூர்யா, கார்த்திக்கு கொடுத்தார்.

அப்படியே சிறு, சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த போது எம்.என்.எஸ்., ‘‘என்னோட அக்கா பொண்ணு உடுமலைப் போட்டையில இருக்கு. படிப்புல சுட்டி. நல்ல பொண்ணு. இந்த இளைஞனுக்கு மணம் முடிக்கலாமா?’’ என்று கேட்டார்.

ஆனால் இவரோ, ‘‘அண்ணா! நீங்க மட்டும் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ மாதிரி படத்தில ஹீரோவா நடிச்சப்புறம் கல்யாணம் பண்ணிட்டு, துண்டு வேஷங்கள் பண்ற என்னை இப்படி மாட்டி விடப் பாக்கறீங்களே, நல்லா இருக்கா?’’ன்னு கேட்டாரு.

‘‘அப்பா! ஹீரோ ஆயிட்டப்புறம் கல்யாணம் பண்றது ஒரு ‘கேட்டகிரி’. கல்யாணதுக்கப்புறம் ஹீரோ ஆகறது இன்னொரு வழி. உனக்கு ரெண்டாம் ‘கேட்டகிரி’ அமைஞ்சிருக்கு. நீ வேணும்னா பாரு. கல்யாணத்துக்கப்புறம் நீ ஓகோன்னு வரப்போறே!’’ன்னு சொல்லி எம்.என்.எஸ்-சும், நானும் அவரை ஒரே அமுக்கா அமுக்கி கல்யாணத்தை முடிச்சிட்டோம்.

1982-ல் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’-னு என் படம் ரிலீஸ் ஆகி எமரால்டு தியேட்டர்ல 200 நாள் ஓடிச்சு. அந்த படத்துல ஆரம்பத்தில வர்ற 2 சீன்ல இந்த இளைஞன் நடிக்க டைரக்டரிடம் சிபாரிசு பண்ணினேன்.

‘‘சிவா! விவரம் தெரியாத ஆளா இருக்கியே! உன்னையும், அவரையும் ஒரே ஃபிரேம்ல வச்சா உன் தலைக்கு மேல அவர் கழுத்து, அதுக்கு மேல அவர் முகம் இருக்கும். அவர் முகத்தை கம்போஸ் பண்ணினா அவரோட நெஞ்சுகிட்ட உங்க மூஞ்சி இருக்கு. உனக்குத்தான் கெட்ட பேர் வரும்!’’ ன்னாரு.

அதை சரிக்கட்டி, 2000 ரூபாய் கொடுத்து, அந்த 2 சீன்ல நடிக்க வைக்க அந்த இளைஞருக்காக அப்படி சிரமப்பட்டேன்.

அதுக்கப்புறம் அவர் மளமளனெ்னு முன்னேறி ‘ஆன்டி ஹீரோ (Anti Hero) சப்ஜெக்ட்கள் செஞ்சு பல கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பிச்சிட்டாரு. ஹீரோவா 100 படங்கள் தாண்டி இன்னிக்கும் ‘கேரக்டர்’ ரோல்கள்ல -இக்கால ஹீரோக்களுக்கு இணைய நடிச்சிட்டிருக்கறாரு.

ரூ.10 சம்பளத்தில் எந்த சிறுவர்களுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்தாரோ, அந்த சிறுவர்கள்ல ஒருத்தன் தயாரிக்க, இன்னொருத்தன் ஹீரோவாக நடிக்க, அவனுக்கு அப்பாவா நடிச்சாரு - ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில்.

என் படத்தில அந்த இளைஞன் சின்ன வேஷம் பண்ணினது போய், அவர் ஹீரோவா நடிச்ச ‘மலபார் போலீஸ்’ படத்தில நான் சின்ன வேஷம் பண்ற நிலைமை வந்திருச்சி.

ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும் - அதுதானே வாழ்க்கை?

ஆனா, பாருங்க. மாதம்பட்டியில நான் பார்த்த அதே அன்பு, அதே மரியாதை, அதே பாசம் இன்னும் அப்படியே எம்மேல வச்சிருக்கறவரா இருக்காரு, அவரு வேற யாருமில்லை. நம்ம ‘கொங்கு தமிழ்’ நடிகன் சத்யராஜ்தான்.

எம்.என்.எஸ் மகன் சத்யனும் முன்னேறி வரும் நகைச்சுவை நடிகர். சூர்யாவை விட 1 மாதம் 12 நாள் மூத்தவர். குழந்தைப் பருவம் முதலே சூர்யா -கார்த்தி -சத்யன் நெருங்கிய நண்பர்கள். இப்போது சத்யராஜ் - புவனி மகள் டாக்டர்.திவ்யா ‘டயட்டீஷியன்’. மகன் சிபி வளர்ந்து வரும் ஹீரோ.

தீர்ப்புகள் திருத்தப் படலாம்

சூர்யா முதல் பிறந்தநாளில் - சத்யராஜ்,

சத்யராஜ் திருமணம்

குன்னூர் சத்யராஜ் ஃபார்ம் ஹவுஸ் முன்

மலபார் போலீஸ்
சிறுவயதில் கார்த்தி -சத்யன்

- சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x