இடைபாலினக் குழந்தைக்கு ஒரு மனிதநேயத் தாலாட்டு!

விஜயராஜா மல்லிகா
விஜயராஜா மல்லிகா
Updated on
1 min read

ஆங்கிலத்தில் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படும் இடைபாலினக் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு செய்யக் கூடாது என கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

ஓர் இடைபாலினக் குழந்தைக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைப்பது அவசியம். அதேநேரம் அத்தகைய குழந்தைக்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பதற்கு முதலில் தேவைப்படுவது தாயின் அன்பும் நேசமும்தான். இதை வலியுறுத்தும் தாலாட்டுப் பாடலை திருநங்கைக் கவிஞரான விஜயராஜா மல்லிகா மலையாளத்தில் எழுதினார். அந்தப் பாடலை ஷினி அவந்திகா பாட, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் சந்தியா இந்தப் பாடலுக்கான நடனத்தோடு கடந்த ஆகஸ்ட் 16 அன்று யூடியூபில் வெளியிட்டனர்.

இதற்குப் பெருத்த வரவேற்பு கிடைக்கவே இந்தப் பாடலின் தமிழாக்கத்தை பத்மகுமார் பரமேஸ்வரன் எழுத, பாடலுக்கு மெட்டமைத்துப் பாடியிருக்கிறார் கரும்புழா ராதா. நிலம்பூர் ஷாஜியின் வயலின் பாடலின் இடையே நிலவும் கனத்த மவுனத்தைத் தன் தந்திகளால் மொழிபெயர்க்கிறது.

இந்தப் பாடலைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகியான

கரும்புழா ராதா
கரும்புழா ராதா

50 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ஆகவே, அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரின் 76-வது பிறந்த நாளான செப்டம்பர் 6 அன்று இந்தப் பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஆண் அல்ல பெண் அல்ல; பொன்மணி நீ எனக்கு..” என்னும் தொடக்க வரியே அன்பையும் பாசத்தையும் தாலாட்டி மகிழ்கிறது. “நீ சாபமோ, பாவமோ அல்ல; என் வானின் அதிர்ஷ்டத் தாரகை” என்று நம்பிக்கை மொழியைத் தாலாட்டின் வழியாகக் கேட்கும் குழந்தை தன்னம்பிக்கையோடுதானே வளரும்!

“ஒரு குடும்பத்தில் ஓர் இடைபாலினக் குழந்தை பிறந்தால் யார் முதலில் ஏற்றுக்கொள்வது என்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தாய்தான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாயின் அன்பு அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்பட்சத்தில் அந்தக் குழந்தையால் உலகத்தில் எந்தவிதமான பிரச்சினையையும் சவால்களையும் சந்திக்க முடியும் என்பதைத்தான் என் பாட்டில் கூறியிருக்கிறேன்.
அந்த அன்பு மட்டும் கிடைத்துவிட்டால், ஆண், பெண், இனம், சாதி, மதம் போன்ற பிரிவினைச் சட்டகத்துக்குள் சிக்காமல் சுதந்திரமாக அந்தக் குழந்தையால் வாழ முடியும்” என்றார் திருநங்கை விஜயராஜா மல்லிகா.

தாலாட்டைக் காண: https://www.youtube.com/watch?v=_5-C9UeVFYM

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in