

சம்பத் தனியார் நிறுவனம் ஒன்றில் குமாஸ்தாவாக உள்ளவர். சக ஊழியர்களின் வீட்டு விசேஷங்கள், பணி நிறைவு விழாக்களுக்கு அன்பளிப்பு செய்துவிட்டு, அவர்கள் தனக்கும் திருப்பி செய்து விட எதிர்பார்ப்பார்.
ஒரு முறை சக ஊழியரின் மகள் திருமணத்துக்கு அவரிடம் மற்றவர்கள் மொய் செய்ய கேட்டபோது, “அவனுக்கு நான் மொய் செய்ய மாட்டேன். சென்ற முறை இருநூறு ரூபாய் எழுதினேன். ஆனால் அவன் என் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு ஒன்றும் செய்யவில்லை” என்று மறுத்துவிட்டார்.
வீட்டில் ஒரு நோட்டு போட்டு யாருக்கு , எந்த தேதியில் எவ்வளவு மொய் செய்திருக்கிறோம் என்று எழுதி, அதற்கு நேர் எதிரில் தன் வீட்டு கிரகப் பிரவேசம், மகள் திருமணம், பேத்தியின் காது குத்து போன்றவற்றுக்கு அவர்கள் திருப்பி செய்திருக்கிறார்களா என்று கணக்கு வைத்துக்கொள்வார்.
சம்பத்தின் கடைசி மகன் தருணுக்கு திருமணம் முடிவானது. தருண் பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறான்.
“தருண் உன் கல்யாணம்தாண்டா நம்ம வீட்டுல கடைசி விசேஷம் ... இதுலதான் நாம மத்தவங்களுக்கு செஞ்சது எல்லாம் திரும்ப வரணும்” என்றார் சம்பத். தருண் அமைதியாக இருந்தான்.
தருணின் திருமண வேலைகள் நடந்து கொண்டிருந் தன. தருண் தனது திருமண அழைப்பிதழை அச்சடித்து கொண்டு வந்து சம்பத்திடம் நீட்டினான்.
ஒரு பத்திரிக்கையை எடுத்து படிக்க ஆரம்பித்த சம்பத்தின் முகம் மாறியது . “என்னடா... இப்படி அடிச்சிருக்கு... ப்ரூப் கூட சரியா இருந்துச்சே... அவன் தப்பா அடிச்சுட்டானா?” என்று கர்ஜித்தார்.
சம்பத் காட்டியது பத்திரிக்கையின் கீழே “தயவு செய்து அன்பளிப்புகளை தவிர்த்து, உங்கள் வாழ்த்துக்கள், ஆசிகளை மட்டும் தரவும்” என்று போட்டிருந்ததைத்தான்.
“நான்தான்ப்பா அப்படி அடிக்கச் சொன்னேன்” என்றான் தருண் பவ்யமாக.
“ஏன்டா உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா? வர அன்பளிப்ப யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா?” என்றார் சம்பத்.
‘உண்மைதான் அப்பா. அன்பளிப்பு எல்லோருக்குமே பிடிக்கும்தான். அது அன்பின் அடையாளமா பெறுவது. அதுக்கு எல்லாம் உங்கள மாதிரி வரவு, செலவு கணக்கு வைக்க முடியாது. அவங்க தகுதி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அன்பளிப்பு பண்ணுவாங்க. அதுல நாம அதிருப்தி பட்டுகிட்டா, அடுத்த முறை அவங்கள நேர்ல பார்க்கிறப்போ இவங்க நமக்கு குறைச்சலா பண்ணாங்கன்னு, முழு மனசோட பழக முடியாது” என்றான் தருண்.
“அதைவிடு. என்ன போட்டிருந்தாலும் நமக்கு மொய் பண்றவங்க பண்ணாமலா போய்டுவாங்க?” என்ற சம்பத்திடம், “அப்படியும் அன்பளிப்பு தரலாம் . ஆனா அதை எல்லாம் நாங்க முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பா தரலாம்னு இருக்கோம். இது என் முடிவு மட்டும் அல்ல, என் வருங்கால மனைவியோட முடிவும்தான்” என்றான் தருண் தீர்மானமாக.