இன்று அன்று | 2014 செப்டம்பர் 7: நீலகண்ட பறவையைத் தேடிய மொழிக் காதலன்

இன்று அன்று | 2014 செப்டம்பர் 7: நீலகண்ட பறவையைத் தேடிய மொழிக் காதலன்
Updated on
1 min read

நாணல் நிழல்களினால் வேலியிடப்பட்ட நீரோட்டம் கொண்ட சோனாலி பாலி ஆறு. அதில் அசைந்தாடும் நீர்த் தாவரங்கள். குழு நடனம் புரியும் வாத்துகள், மேகங்களின் பாய்மரக் கப்பல்கள் ஓடும் ஏரி… இப்படித் தூரிகையில் தீட்டிய ஓவியம்போல வர்ணனைகளைக் கொண்ட நாவல் ‘நீல்கண்டா பாகிர் கோஜே’. வங்க மொழியில் அதீன் பந்தோபாத்யாய எழுதிய இந்நாவல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளின் நிலையையும், கவித்துவமான காதலையும் மிக நுட்பமாக விவரிக்கும் படைப்பு.

500 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்நாவலை ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. வங்காள தேசத்துக்குரிய செடி, கொடி, மரங்களைப் பற்றிய தகவல்களை அறிய, பல அகராதிகளைத் தேடியது உட்பட, பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இந்நாவலின் மொழிபெயர்ப்பை உயிர்ப்புடன் தந்தார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஐந்து புத்தகங்களையும், சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், திருக்குறள், பாரதியார் கவிதைகள், தமிழ்ப் பழமொழிகள் உட்படப் பல தமிழ் இலக்கியப் படைப்புகளை வங்காளியிலும் மொழிபெயர்த்தார். தமிழில் சொந்தக் கதைகளும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் 1929-ல் பிறந்தார் சு.கிருஷ்ணமூர்த்தி. அங்குள்ள மன்னர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் நாகபுரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இயல்பிலேயே மொழி ஆர்வம் கொண்டிருந்ததால் தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மானிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சிறிது காலம் மன்னர் கல்லூரியிலேயே ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிறகு, சென்னையில் மத்தியத் தணிக்கை அலுவலகத்தில் வேலைபார்த்து 1955-ல் பதவி உயர்வு காரணமாக கொல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டார். புதிய மொழிகள் கற்பதில் தீராக் காதல் கொண்டதால் வங்க மொழியைக் கற்றார். கொல்கத்தா தமிழ்ச் சங்க உறுப்பினரானார்.

அற்புதமான தமிழ் இலக்கியங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். வங்க இலக்கிய உலகில் அங்கீகாரம் கிடைத்தாலும், தமிழ் இலக்கிய உலகம் அத்தனை சுலபமாக அவரை அங்கீகரித்துவிடவில்லை. அவர் எதிர்கொண்ட துயரங்களையும் கடந்துவந்த பாதைகளையும் சொல்லும் படைப்பு ‘நான் கடந்து வந்த பாதை’ என்ற அவரது சுயசரிதை.

இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவலை வங்காளத்தில் மொழிபெயர்த்தபோது சிறந்த மொழிபெயர்ப்பு நூலாசிரியர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியச் சிந்தனை, சாகித்திய அகாடமி விருதுகள், ‘நல்லி திசை ஏழு’ வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலக்கியப் படைப்பாளிகளுக்கு விமரிசையான அங்கீகாரம் கிடைப்பதே அரிது. அதிலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது அரிதினும் அரிது. ஆனால், இத்தகைய எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலக்கியத்துக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். 2014 செப்டம்பர் 7-ல் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in