

அண்மையில் பிரதமர் மோடி, நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப் பாறை போன்றவற்றைப் புறக்கணிக்காமல் அவற்றை எடுத்து வளர்ப்பதில் மக்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று தன்னுடைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் நாட்டு நாய்கள் வளர்ப்பில் பலருக்கு ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவில் உள்ள ‘பியாண்ட் தியேட்டர்’, மெய்நிகர் அரங்கு வழியாகச் செல்லப் பிராணியான நாயை மையப்படுத்தித் தனிநபர் நாடகத்தையும், மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாயின் மூலமாகச் சிகிச்சை அளிக்கும் நிபுணரின் உரையாடலையும் அரங்கேற்றியது.
சுதர்ஷியின் தனிநபர் நாடகம்
இயக்குநர் மாரி செல்வராஜின் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘எனக்கு அவர்கள் சுரேஷ் என்று பெயரிட்டார்கள்!’ என்ற சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு தனிநபர் நாடகத்தை சுதர்ஷி நிகழ்த்தினார்.
செல்லப்பிராணியின் பார்வையில் ஒரு குடும்பத்தில் இருக்கும் பலரின் குணாதிசயங்களும் கதைசொல்லியான சுரேஷ் என்னும் நாயின் மூலமாக வெளிப்பட்டன. உடல் மொழியின் மூலமும் வசன உச்சரிப்பின் மூலமும் ரசிகர்களுக்கு நாயின் அவஸ்தைகளை அற்புதமாக வெளிப்படுத்தினார் சுதர்ஷி.
உயிருள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதர்கள் மொழி மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். விலங்குகள் அவற்றின் செயல்கள் மூலமும் உடல் மொழி மூலமும் உணர்வுகளை வெளிப்படுத்தும். ஆனாலும், விலங்குகளின் பல உணர்வுகள் மனிதனுக்குப் புரியாமலே போய்விடும் பரிதாபத்தை, நெகிழ்ச்சியுடன் தனிநபராக ரசிகர்களுக்குக் கடத்தினார் கனடாவைச் சேர்ந்த அரங்கக் கலைஞரும் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றிலும் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடித்துவரும் நடிகையுமான சுதர்ஷி.
அனிமல் அசிஸ்டெட் தெரபிஸ்ட் ஷில்பா
தனிநபர் நாடகத்துக்குப் பின் சுதர்ஷி, சென்னையைச் சேர்ந்த ‘அனிமல் அசிஸ்டெட் தெரபிஸ்ட்’ ஷில்பாவுடன் செல்லப்பிராணிகளின் மனநிலையைக் குறித்தும், தெரபி குறித்தும் உரையாடினார். அதன் சுருக்கமான வடிவம் இது:
''தனது தீய பழக்கவழக்கத்தாலோ உறவுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாலோ பலவீனமான மனநிலையோடு வாழும் ஒருவருக்கு அளிக்கப்படும் ஆற்றுப்படுத்தும் சிகிச்சைகள் பல இருக்கின்றன. வண்ணங்கள், ஓவியங்களைக் கொண்டு அளிக்கும் சிகிச்சை, நடனத்தின் மூலமாக அளிக்கப்படும் சிகிச்சை, இசையின் மூலமாக அளிக்கப்படும் சிகிச்சை போன்றவை அவற்றுள் சில. இவற்றைப் போன்ற சிகிச்சை முறைகளில் ஆகச் சிறந்ததாக மேற்குலக நாடுகளில் கொண்டாடப்படுவதுதான் இந்த அனிமல் அஸிஸ்டெட் தெரபி. இதற்கென்றே நான் தொடங்கியிருக்கும் அமைப்புதான் ‘டேல்ஸ் வித் டெய்ல்ஸ்’!
குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலிருந்தே ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் போன்ற விலங்குகளும் பறவை இனங்களும் அவர்களோடு நெருக்கமாக இருந்தன. கிராமங்கள் மறைந்து நகர எல்லைகள் விரிவானதில் காணாமல் போனவற்றின் பட்டியலில், வீட்டில் நாம் வளர்த்த செல்லப்பிராணிகளும் அடங்கும். செல்லப்பிராணியான நாய்க்கும் நமக்கும் இடையே 50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருக்கிறது என்பதை ஆய்வுகள் சொல்கின்றன.
நான் செய்யும் தெரபியைப் பொறுத்தவரை நோயாளியையும் செல்லப் பிராணியையும் முதலில் தயார்படுத்த வேண்டும். நோயாளியினால் சிகிச்சைக்கு உதவும் விலங்கும் பாதிக்கப்படக் கூடாது. விலங்கால் நோயாளிக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது. இந்தப் புரிதலையும் நோயாளியின் அழுத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என்னும் விவரங்களை எல்லாம் அறிவியல்பூர்வமாக ஆராய்வதற்கு ஒரு ரோபோ நாயை முதன்முதலாக வடிவமைத்துள்ளோம். எங்களுடைய சிகிச்சை விலங்கை நோயாளியிடம் பழகுவதற்கு முன்னதாக இந்த ரோபோவைக் கொண்டு நோயாளியின் பழகும் முறையை ஓரளவுக்குக் கணிக்க முடியும்.
தெருவில் கண்டெடுத்து நான் தத்தெடுத்து வளர்த்துவரும் ஜானிதான், பிரத்யேகமாக நோயாளிகள் சிலருக்கு நான் சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. நோயாளியிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றித் தன்னை ஒப்புக்கொடுக்கும் செல்லப்பிராணிகள்தாம் இந்தச் சிகிச்சைக்கு முதன்மையான மருந்து. அதனால்தான் அவர்களின் உதவி முக்கியம் என்கிறேன்.
ஜானிக்கும் ஆயுள் காப்பீடு
ஒரு நாளில் ஒரு தெரபி என்பது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம்தான் கொடுக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்குப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அங்கே மருத்துவ ஆயுள் காப்பீட்டில்கூட இந்த தெரபியைச் சேர்த்திருக்கின்றனர். ஒரு தெரபி விலங்கால் நோயாளி பாதிக்கப்பட்டாலோ, நோயாளியால் தெரபி விலங்கு பாதிக்கப்பட்டாலோ இருவருக்கும் இது பொருந்தும். இந்தத் தெரபியை அளிப்பதில் நான் என்னுடைய பார்ட்னராகத்தான் ஜானியைப் பார்க்கிறேன். அதனால், நான் வாங்கும் தொகையில் அவனுக்கான மருத்துவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்.
எலியும் பூனையும்
வீட்டுச் செல்லப்பிராணிகளில் எலி இனத்தில் ஒரு வகை, முயல், பூனை, பன்றிக்குட்டி ஆகியவற்றையும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பறவைகளையும் இதற்குப் பழக்கப்படுத்துகின்றனர். பறவைகளை அப்படிப் பழக்குவது தவறு என்பது என் கருத்து. அதனால், அதை நான் செய்வதில்லை. ஆதி காலத்திலிருந்தே செல்லப் பிராணிகளோடு மனிதர்களுக்குப் பெரிய அளவுக்கு உணர்வுரீதியான நெருக்கம் இருக்கிறது. அதுதான் இந்தத் தெரபிக்கு அடிப்படை.
சிலருக்குத் தெரபி விலங்கைத் தொடுவதன் மூலமே அவர்களின் மனம் சந்தோஷப்படும். தன்னம்பிக்கை மிகவும் குறைந்து காணப்படும் நோயாளிகளிடம் செல்லப் பிராணிகளின் கதையையும் கூறுவோம். உதாரணத்துக்கு ஜானியைத் தெருவில்தான் கண்டெடுத்தேன். ஆனால், தற்போது சிகிச்சை அளிக்கும் செல்லப் பிராணியாக அது மாறியிருக்கும் கதையைக் கூறுவேன். இதுபோன்ற நிஜக் கதைகள்கூடச் சில நோயாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
அதேபோல் அவர்களின் தனிப்பட்ட வலிகளை, பிரிவுகளை, எதிர்பார்ப்புகளை தெரபி விலங்குகளுடன் பகிர்ந்துகொள்வார்கள். மனிதர்களேகூட சில நேரங்களில் அடுத்தவரின் பிரச்சினைகளைக் கேட்கும்போது, ஏனோதானோவென்று அலட்சியத்துடன் நடந்துகொள்வதற்கு வழி இருக்கிறது. அதோடு அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் மற்றவர்களுக்குத் தெரிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், தெரபி விலங்கு, சைக்காலஜிஸ்ட், தெரபி விலங்கின் பாதுகாவலர், நோயாளி இவர்களுக்கு இடையே பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்களின் ரகசியம் காக்கப்படும் என்னும் உத்தரவாதத்துடனே இந்தத் தெரபி நடக்கும்'' என்றார் ஷில்பா.