

ஊரடங்கு காலம் தொடங்கிய காலத்திலிருந்தே, “இதை நிச்சயம் சாப்பிடுங்க… இதைச் சாப்பிடவே சாப்பிடாதீங்க…” என்று உணவு சார்ந்து பலரும் திடீர் மருத்துவர்களாக மாறி தங்கள் ஊகங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் பரப்பிவந்தனர். சரியான ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பொதுமக்களுக்குக் கிடைப்பதன்மூலம் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புத் திறனையும் பெற முடியும் என்று நினைத்தனர் டாக்டர் தாரிணியும் பல் மருத்துவரான டாக்டர் மேனகாவும். இதற்காக இவர்களால் தொடங்கப்பட்டதே ‘தாரிணி கிருஷ்ணன் ஈஸி டயட்ஸ் யூடியூப் சேனல்’.
ஒளிப்பதிவு செய்வது, காட்சிக்கேற்ற இசையைச் சேர்ப்பது, எடிட் செய்து யூடியூபில் பதிவேற்றுவதுவரை எல்லாவற்றையும் டாக்டர் மேனகாவின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மகன் ஹமரேஷும் எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் ஹம்ரிதாவுமே செய்துவிடுகின்றனர். “இதன்மூலம் குழந்தைகளைச் சமூக வலைத்தளங்களைக் கொண்டு நல்ல விஷயங்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம் என்ற திருப்தியும் மனநிறைவும் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்கிறார் மேனகா.
உடல் பருமனுக்கு ஹைப்போ தைராய்டு எப்படிக் காரணமாகிறது, அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும், தனி மனிதனுக்கு ஒரு நாளைக்கு உணவில் எந்த அளவுக்கு உப்பு தேவைப்படும், அதிகமான உப்பு உடலுக்குக் கொண்டுவரும் உபாதைகள் என்னென்ன, பெரும்பாலான இளைஞர்களுக்கு இன்றைக்கு இருக்கும் தலையாய பிரச்சினையான முடி உதிர்வை எப்படிச் சரிசெய்யலாம் என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களையும் தகுந்த கணினி வரைபட விளக்கங்களுடன் (பவர் பாயின்ட்) சுருக்கமாகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும் மொழிநடையிலும் விளக்குவதோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் உணவுப் பழக்கங்களைக் கொண்டே அளித்துவருகிறார் தாரிணி கிருஷ்ணன்.
“புரதச் சத்துக்காக மொச்சை, கறுப்புக் கடலை, சென்னா கடலை, ராஜ்மா, பச்சைப் பயறு போன்றவற்றைத் தினமும் சாப்பிடணும். அசைவ உணவுப் பழக்கம் இருப்பவர்கள் கோழிக்கறி, மீன், முட்டை போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆட்டுக்கறி போன்றவற்றில் கொழுப்பு அதிகம். அதனால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவைச் சமைக்கும்போது, அதில் காரத்தையும் எண்ணெயின் அளவையும் குறைக்க வேண்டும். இவற்றைக் குறைத்தால்தான் தகுந்த அளவிலான புரதத்தின் அளவு ஒருவருக்குக் கிடைக்கும். பொதுவாக ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரதச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் சராசரி எடை 65 கிலோ என வைத்துக் கொண்டால் அவர் தினமும் உட்கொள்ளும் புரதத்தின் அளவு 65 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும். இதுதவிர, பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றின் மூலமும் புரதச் சத்தை நாம் பெறலாம்.
ஜிங்க் சத்து
நார்ச்சத்துள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் இந்த ஜிங்க் சத்து நிறைந்திருக்கும். பீன்ஸ், பாதாம் போன்ற பருப்புகளிலும் சூரியகாந்தி விதை போன்றவற்றிலும் இருக்கும். பெரிய வகை இறால், சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற முழு தானியங்களில் இருக்கிறது.
வைட்டமின் ஏ சத்து பப்பாளி, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் இருக்கிறது.
வைட்டமின் சி
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் இருக்கிறது. இதைப் பொடிசெய்தும் சாப்பிடலாம்.
வேகவைத்து உப்பு மஞ்சள் கலந்தும் சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு, மூன்று முறை சாப்பாட்டில் நெல்லிக்காயைச் சேர்த்துக்கொள்வது நல்லது. கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்களிலும் வைட்டமின் சி இருக்கிறது.
வைட்டமின் டி
வைட்டமின் டி சத்து கிடைப்பதற்கு வெயிலில் உங்களின் உடம்பைக் காட்ட வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலான வெயிலில் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நிற்க வேண்டும். முழு உடம்பிலும் வெயில் படாவிட்டாலும் முழங்கை, முகம் ஆகியவை வெயிலில் படுமாறு நின்றால் போதும். வாரத்துக்கு இரண்டு முறை இப்படிச் செய்ய வேண்டும்.
எண்ணெயிலும் வேர்க்கடலையிலும் வைட்டமின் ஈ இருக்கிறது.
இரும்புச் சத்து
உலகிலேயே 30 சதவீதத்தினருக்கு இரும்புச் சத்து குறைபாடு உள்ளது. கீரை வகைகள், முருங்கைக் கீரை, பேரீச்சையில் இரும்புச் சத்து இருக்கிறது. உணவுக்கு முன்னதாக இரும்புச் சத்து உணவைச் சாப்பிட்டு அதனோடு வைட்டமின் சி உள்ள எலுமிச்சை சாறு அல்லது நெல்லிக்காய் ஒரு துண்டு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
பூண்டு, பார்லி, மீன் போன்றவற்றில் இருப்பது செல்லும்னியம் சத்து. தகுதி பெற்ற ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஆலோசனைகளை கேட்டுக்கொள்ள வேண்டும். தகுந்த ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி இவற்றை முறையாக நம் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்புத் திறனை நம் உடல் பெறும். கரோனா வேண்டாத விருந்தாளிபோல் வந்த சுவடே தெரியாமல் போய்விடும்.
தாரிணி கிருஷ்ணனின் ஈஸி டயட் காணொலியைக் காண: