ஓய்வுபெறும் மாசற்ற மாநகராட்சி அலுவலர்: மகிழ்ச்சியுடன் ஓய்வெடுங்கள் சிவாஜி!

சிவாஜி
சிவாஜி
Updated on
2 min read

மாநகராட்சி பணியாளர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு திருச்சியில் உள்ள அத்தனை பத்திரிகையாளர்களும் வருத்தப்படுகிறார்கள். தங்கள் முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் இவரது ஓய்வை பற்றி அங்கலாய்க்கிறார்கள். இனி இப்படி ஒரு அலுவலர் கிடைப்பாரா? என்று பரிதவிக்கிறார்கள். யார் அவர்? அப்படி என்ன செய்துவிட்டார்?

திருச்சி மாகநராட்சியின் செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சிவாஜி என்பவர் நாளை (ஆக.31) பணி ஓய்வு பெறுகிறார். அரசு அலுவலர்கள் என்றாலே கடுகடுத்த முகத்தோடு இருப்பதுதான் இலக்கணமாக இருக்கும் நிலையில் இவர் மட்டும் எப்போதும் மாறாத புன்னகையோடுதான் இருப்பார். பி.ஆர்.ஓ அலுவலகத்தில் உள்ளே நுழைந்தால் இவர்தான் முதலில் அமர்ந்திருப்பார். உள்ளே வருபவரை புன்னகையோடு வரவேற்று ஏ.சி அறையில் அமரவைத்து, பிஸ்கட் மற்றும் தேநீர் கொடுத்தபிறகுதான் என்ன விஷயம் என்றே கேட்பார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பி.ஆர்.ஓ இல்லாமலே அந்த அலுவலகம் இயங்குகிறது என்றால் அதற்கு பெரும்பங்கு சிவாஜியுடையதுதான். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனம் கோணாமல் செய்திகள் தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பார். பத்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு தகவலை கேட்டால் கூட அதை தேடி எடுத்துவந்து கொடுத்தால் தான் அவருக்கு திருப்தியே. அதுவே போலி பத்திரிகையாளர்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். அலுவலகத்துக்குள்ளும் அனுமதிக்க மாட்டார்.

பத்திரிகையாளர்கள் என்று மட்டுமில்லை, அவரது அலுவலகத்துக்குள் வரும் பொதுமக்களிடமும் பரிவு காட்டுவார். அவர்கள் கேட்கும் விபரங்களை பொறுமையாக எடுத்துக்கூறுவார். அவர்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பார். நியாயமான கோரிக்கைகளை கையோடு செய்துகொடுக்கவும் அறிவுறுத்துவார்.

தனது பணிக்காலத்தில் மிகமிக நேர்மையாகவே பணியாற்றினார். லஞ்ச லாவண்யங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. நெருங்கிய பத்திரிகையாளர்கள் டீ வாங்கித் தந்தால்கூட குடிக்க மாட்டார். பாலக்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து சுமார் ஆறுகிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்றுவரை தனது மிதிவண்டியில் தான் வந்து செல்கிறார். அலுவலத்தின் அவசரப்பணி நிமித்தமாக வெளியில் சென்றால் மட்டுமே அலுவலக ஜீப்பை பயன்படுத்துவார்.

'இது தனது தந்தையிடம் கற்றுக்கொண்டது' என்கிறார் சிவாஜி. "பெரியாரின் அணுக்கத் தொண்டரான என் தந்தை அபிமன்யூ அவர் திருச்சியில் தங்கியிருந்த காலத்தில் ஒரு உதவியாளராக அவருடனே பயணப்பட்டவர். அதனால் நான் பிறந்தபோது எனக்கு பெயர் சூட்டியதும் பெரியார்தான். எனக்கு மட்டுமல்ல எனது தம்பிகள், தங்கை எல்லோருக்குமே பெரியார்தான் பெயர் சூட்டினார். நான் சிறுவனாக பெரியார் மாளிகையில் பெரியாரை சுற்றி வந்திருக்கிறேன்.

கூட்டுறவுத்துறையில் பணியாற்றிய என் தந்தை தான் ஓய்வு பெறும்நாள்வரை நேர்மையாக வாழ்ந்தவர். அவரது ஓய்வுக்குக்கூட எந்த விழாவும் வைக்கக் கூடாது என்று கறாராக சொல்லிவிட்டு, மற்ற நாட்களில் எப்படி அலுவலகம் வந்து போனாரோ அதேபோலவே அன்றைக்கும் வீடு திரும்பினார்.

அவரை பின்பற்றித்தான் நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நாளை ஓய்வு நாளிலும் எந்த விழாவும் வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எப்போதும் போல எனது சைக்கிளில் வீடு திரும்பிவிடுவேன்" என்கிறார் சிவாஜி.

"தினமும் சந்திக்கிற இந்த முகங்களை இனி சந்திக்க அதிகம் வாய்ப்பு இல்லை என்பதுதான் ஒரே வருத்தமே தவிர எனது பணியை முழு திருப்தியுடன் செய்தேன் என்ற மகிழ்ச்சியோடுதான் ஓய்வு பெறுகிறேன். ஓய்வு பெற்றாலும் மக்களுக்குப் பணியாற்றுவதற்கு எப்போதும் ஓய்வு கொடுக்க மாட்டேன்" என்கிறார்.

திருச்சி மாநகராட்சியில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய சிவாஜியின் மாசற்ற பணிக்காக மாநகராட்சி சார்பில் அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைவிட பெரிய விருது திருச்சி பத்திரிகையாளர்களின் உள்ளமெல்லாம் அவர் நிறைந்திருப்பதுதான்.

மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் ஓய்வெடுங்கள் சிவாஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in