Published : 28 Aug 2020 11:08 AM
Last Updated : 28 Aug 2020 11:08 AM

கொங்கு தேன் 20: வணக்கத்துக்குரிய வாத்தியாருக!

சூலூர் போர்டு ஹைஸ்கூல். 1954-ம் வருஷம். ஒரு பிற்பகல் வகுப்பு. எங்களுக்கு 9-ம் வகுப்பில க்ளாஸ் டீச்சராவும், சமூகப் பாடத்தில் சரித்திரப் புள்ளி விவரங்களை மூச்சு விடாம சொல்ற ஆசிரியராகவும் இருந்த ரத்னவேலு வாத்தியாரு க்ளாஸ் எடுக்கறாரு.

‘‘.... இந்திய வரலாற்றை கூர்ந்து கவனிச்சோம்னா, நம்ம நாடு அநாவசியமா எந்த நாட்டு மேலயும் போர் தொடுக்கலேங்கற செய்தி இன்ப அதிர்ச்சியா இருக்கும். இந்த மண்ணிலேருந்து பொருட்செல்வத்தையும், அறிவுச் செல்வங்களையும் கொள்ளையடிச்சுட்டுப் போகத்தான் உலகத்தின் பல பாகங்களிலேருந்தும், இந்தியா மேல பல பேர் போர் தொடுத்திருக்காங்க. ஏசுநாதர் பொறக்கறதுக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னயே பாபிலோனை தலைநகரா கொண்ட அஸீரியா நாட்டு ராணி சிமிராமிஸ் இந்தியா மேலே போர் தொடுத்திருக்காங்க. கி.மு.,530-ல் பாரசீக மன்னன் சைரஸ் இந்தியா மேல போர் தொடுத்தான். கி.மு.,326-ல் 40 ஆயிரம் படை வீரர்களோட மாசிடோனியாவில இருந்து அலெக்ஸாண்டர் கைபர் கணவாய் வழியா படையெடுத்து வந்தார்.

அடுத்து செங்கிஸ்கான், தைமூர்னு பலர் போர் தொடுத்தாங்க. பின்னாளில் கி.பி.1497-ல் வாஸ்கோடாகாமா, கள்ளிக்கோட்டையில் முதலில் கால்பதிச்சாரு. 16-ம் நூற்றாண்டில டச்சுக்காரன் அவன் பின்னால பிரெஞ்சுக்காரன் இந்தியாவுக்குள்ளே கால் பதிச்சாங்க. கி.பி.1600-ல இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பிக்கிறாங்க. உலகத்தில எந்த மூலையிலயும் எத்தனை வருஷங்கள் வேணும்னாலும் இஷ்டம்போல நீ வாணிபம் செய்யலாம்னு 1604-ல அந்தக் கம்பெனிக்கு அதிகாரத்தைக் கொடுத்தது இங்கிலாந்து அரசு. கி.பி. 1668-ல கிழக்கிந்தியக் கம்பெனி பம்பாயை புடிச்சுது. 1750-ல ராபர்ட் கிளைவ் திருச்சியில கொடிய பறக்க விட்டான். 1755-ல பூலித்தேவன் கூட மோதினாங்க. 1757-ல் கல்கத்தாவில் பிளாசி யுத்தம். 1772-ல் வேலு நாச்சியாரோட மோதினாங்க.

1795-ல முத்துராமலிங்க சேதுபதியோட மோதினாங்க. 1799-ல கட்டபொம்மனோட சண்டை. 1801-ல தீரன் சின்னமலையோட கொங்கு மண்ணில மோதினாங்க. 1805-ல தீரனைத் தூக்குல போட்டாங்க. 1806-ல வேலூர் புரட்சி -1857 -சிப்பாய்க் கலகம், 1858- பிரிட்டிஷ் அரசோட நேரடி ஆட்சி. 1908 - வ.உ.சியைக் கைது பண்ணி கோவை சிறையில் செக்கிழுக்க வச்சாங்க. 1911 -வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுட்டு, தானும் தற்கொலை செஞ்சுகிட்டான். 1919 -ஜாலியன் வாலாபாக் படுகொலை -ஜெனரல் ‘டயர்’ ஈவிரக்கமில்லாம போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளினான். 379 பேர் செத்தாங்க. 1197 பேர் படுகாயம்...!’’

கையில எந்தக் குறிப்பும் இல்லாம இந்த மாதிரி மூச்சு விடாம சொல்லி, எனக்கு மனப்பாட சக்தியை ஊக்குவிச்சவர் ரத்னவேலு வாத்தியார்.

நாங்கள் படித்த பள்ளிக்கட்டடம்.

1952-ல விஜயராகவ அய்யங்கார் ஆரம்பப் பள்ளியில ஹெட்மாஸ்டரா இருந்தாரு. அப்பத்தான் நான் அந்த ஸ்கூல்ல 5-ங்கிளாஸ் படிச்சேன். நான் ஹைஸ்கூல் வந்தப்ப அவரும் மாற்றலாகி இங்க வந்தாரு. இந்தி டீச்சர், பிடில் வாசிப்பார். பாரதியோட தேசிய கீதங்களை உணர்ச்சிகரமா பாடிக் காட்டுவார். குழந்தை உள்ளம். கிழவர் தோற்றம். சிரிச்சார்னா பற்கள் அத்தனையும் தெரிய சிரிப்பாரு. கண்கள் கண்ணீரைச் சொறியும்.

விஜயராகவன்

அவர் ஒரு நாள் மாணவர்களை உட்கார வச்சு, பென்சிலால ஓவியம் தீட்டினாரு. என் முகத்தில் இடதுபுற, பக்கவாட்டு தோற்றத்தை 15 நிமிஷத்தில பென்சிலால வரைஞ்சாரு.

போட்டோவுல கூட எம் முகத்தை நான் சரியா பாத்ததில்லே. இந்த டிராயிங்கை பார்த்தவுடனே, எனக்கு அவர் பிரம்மா மாதிரி தெரிஞ்சாரு. பிற்காலத்தில நான் ஓவியங்கள் வரைய தன்னோட வீட்டிலிருந்த காந்தி, நேரு, படேல், சுபாஷ் மற்றும் குழந்தைகள் படமெல்லாம் குடுத்து வரையச் சொல்லுவாரு.

என் மேல அவரு காட்டின அக்கறையையும் அன்பையும் நெனைச்சா, ‘நமக்கு அப்பா உயிரோட இருந்திருந்தா இவ்வளவு பாசமா இருந்திருப்பாரா?’ன்னு சந்தேகம் வரும். அந்த அளவுக்கு கட்டி அணைச்சுக்குவாரு. 7 ஆண்டுகள் இந்தியா முழுக்க சுத்தி நான் எவ்வளவோ வரைஞ்சிருந்தாலும், அந்தக் கலை ஞானத்தை ஊக்குவித்த அந்த ஆசிரியருக்கே என் ஓவியங்களை மானசீகமா சமர்ப்பிக்கிறேன்.

பென்சில் ஸ்கெட்ச்

கலங்கல் கல்மண்டபத்தில 4-ங்கிளாஸ் வரைக்கும் கல்யாணசாமி நாயுடுகிட்ட படிச்சேன். 5-ம் வகுப்பு போகாமியே 6-ங் கிளாஸுக்கு சூலூர் போர்டு ஹைஸ்கூல்ல நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் ஆயிட்டேன்.

அங்கே திருவேங்கடசாமி நாயுடு ஹெட் மாஸ்டர். கூப்பிட்டார். சீட் குடுக்க கூப்பிடறாருன்னு உள்ளே போனா, ‘சின்னப் பொன்னா! 11-வது வகுப்புல 2 வருஷம் உட்கார்ந்து படிக்கிறியா? இல்லே, 5-ங்கிளாஸ் படிச்சிட்டு 6-ங் கிளாஸ் வர்றியா?’ன்னு கேட்டாரு.

‘‘புரியலீங்க ஐயா!’’

‘‘எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத உனக்கு 15 வயசு முடிஞ்சிருக்கணும். நீ 14 வயசுல எஸ்.எஸ்.எல்.சி படிப்பே. வயசு பத்தாதுன்னு இன்னொரு ஒரு வருஷம் 11-ம் வகுப்புலயே உட்கார வச்சிருவாங்க. எப்படி வசதி. 11-ங்கிளாஸ் 2 வருஷம் படிக்கலாமா? ஒழுங்க 5 -ங்கிளாஸ் படிச்சிட்டு வர்றியா?’’

‘‘நான் 5 -ங்கிளாஸ் படிச்சிட்டே வர்றேன். 4-ம் வகுப்புலயிருந்து 6-ம் வகுப்புக்கு டபுள் புரொமோஷன் வாங்கினா இப்படி ஒரு சிக்கல் இருக்குன்னு தெரியாதுங்கய்யா..!’’

‘‘போ! எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஒரு வருஷம் படிச்சிட்டு வா!’’ன்னு தொரத்தி உட்டுட்டாரு.

திருவேங்கடசாமி

சூலூர் ஆஸ்பத்திரிக்கு பின்னால காட்டூர்ல எலிமெண்ட்ரி ஸ்கூல். அங்கே போயி ஒரு வருஷம் படிச்சிட்டு பழையபடி இதே ஸ்கூல் வந்து சேர்ந்தேன்.

ஹெட் மாஸ்டர் திருவேங்கடசாமி நாயுடு, பீளமேடு சர்வஜன ஹைஸ்கூல்ல முதல் பேட்ச் ஸ்டூடண்ட். அங்க படிச்சிட்டு திருச்சி செயின்ட் ஜோசப் காலேஜில படிச்சிருக்காரு. இவரும் கணக்குல புலி.

ஆறடி உயரம். விசாலமான நெற்றி. கூர்மையான கண்கள். கனமான தொண்டை. பேசும்போது பல்லை ‘வெறுகி’ட்டே பேசுவாரு. ஏதோ வாயில போட்டு மென்னுட்டிருக்கிற மாதிரி நமக்கு தோணும். ‘புஷ்’கோட்டு போட்டிருப்பாரு. காலையில பெல் அடிச்சு. இறை வணக்கம் பாட, எல்லா மாணவர்களும் அவங்கவங்க கிளாஸ் முன்னால வரிசையா நிக்கணும். தெற்கு பகுதி வகுப்புகளுக்கு சீமை ஓட்டுக்கூரை - வடபுற கட்டடத்தில தளம் போட்டு ‘தார்ஸ்’ கட்டிடம். நடுவுல சதுரமா புல்வெளி இருக்கும். இந்தப் புல்வெளிய சுத்தி நின்னு பசங்க, ‘வாழிய செந்தமிழ்’ பாடுவாங்க.

பாட்டு முடியற ஒரு நிமிஷத்துக்குள்ளயே சுத்திலும் ஒரு நோட்டமிட்டு, எந்த வகுப்பில, எந்த மாணவன் வரலேங்கிறதை காலியா இருக்கிற எடத்தை வச்சே கண்டுபிடிச்சு, லேட்டா வந்தவன் தலையில கொண்டை பெரம்புல கொட்டுவாரு.

மத்தியான சாப்பாட்டுக்கு முன்னாடி 12.30-லிருந்து, 1 மணி வரைக்கும் சாப்பாட்டுக்கப்புறம், 2.30 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் திருச்சி வானொலி ஒலிபரப்பை எல்லாரும் கேட்கணும்னு ஹெட்மாஸ்டர் ரூமுக்கு வெளிய, அந்தக் கால ரேடியோவை கொண்டாந்து வச்சுருவாரு.

‘ஸ்புட்னிக் லைக்கா’-ன்னு ரஷ்யா நிலாவுக்கு முத முதல் ராக்கட் விட்டதை, 16 எம்.எம் புரொஜக்டர்ல எங்களுக்குப் போட்டுக் காட்டினாரு.

1953 ஜூன் 2-ம் தேதி நடந்த எலிசபெத் ராணி பட்டமளிப்பு விழாவை நாங்க பாக்கறதுக்கு சூலூர் சண்முகாதேவி தியேட்டருக்கு காலையில 10 மணிக்கு க்யூவுல நடக்க வச்சு கூட்டீட்டுப் போனாரு.

பள்ளியின் உள் மைதானம்

கோயமுத்தூர் பிளாட்பாரத்தில பிச்சை எடுத்திட்டிருந்த 14 வயசுப் பையன் கிழிஞ்சு போன சட்டை, பரட்டைதலை கைகால்ல செரங்கு - அந்தப் பையன் கணக்குல ‘பிறவி மேதை’ன்னு ஒரு வாத்தியார் கண்டுபிடிச்சு எங்க ஸ்கூலுக்கு கூட்டீட்டு வந்தாரு. 9643721 x 851394 - ஐ பெருக்கி விடை கண்டுபிடிக்க நம்மளுக்கு கண்ணு முழி பிதுங்கீடும்.

ஆனா அந்தப் பையன், 10 எண்றதுக்குள்ளே போட்டு முடிச்சிட்டான்.

ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்கும். நாடகமெல்லாம் போடுவோம்.

தினமும் மாலையில விளையாட்டு பீரியட் கட்டாயம் இருக்கும். ஃபுட் பால், வாலிபால், பேஸ் பால், பேஸ்கட் பால், ஓட்டப்பந்தயம்னு சகலவிதமான விளையாட்டும் இருக்கும்.

காலை 7 மணிக்கு ACC வகுப்பு மைதானத்தில இருக்கும். ‘லசீம்’ பயிற்சியெல்லாம் குடுப்பாங்க. அந்தப் பயிற்சி முடிஞ்சா NCC பயிற்சி. இது ராணுவப் பயிற்சியின் தொடக்க நிலை.

குடிமைப் பயிற்சின்னு ஒரு வகுப்பு. மாரல் எஜூகேஷன் எல்லாம் உண்டு. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், புத்தர் -பற்றியெல்லாம் டீச் பண்ணுவாங்க.

6-ம் வகுப்பு சுந்தராம்பாள் கிளாஸ் டீச்சர். 7-ம் வகுப்பு சேதுராமய்யர். 8-ம் வகுப்பு சந்திரசேகரய்யர். 9-ம் வகுப்பு ரத்னவேலு வாத்தியார். 10-ம் வகுப்பு திருமலைசாமி. 11-ம் வகுப்பு ஹெட்மாஸ்டர் - கிளாஸ் டீச்சரா இருந்தாங்க. டியூஷன் பீஸ், எதுவும் கேக்காம, சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பாங்க.

‘சோதா முண்டங்களா! மறுபடி மாடு மேய்க்கப் போயிடாதீங்கடா!’ன்னு பாசத்தோட திட்டி படிக்க வச்ச வணக்கத்துக்குரிய வாத்தியாருங்க.

1950-கள்ல சூலூர் பள்ளி மாடல் பள்ளின்னு பேர் வாங்கறதுக்கு காரணம் திருவேங்கடசாமி நாயுடுதான். படிப்பு, ஒழுக்கம், பெற்றோரை மதித்தல் போன்ற உயர்ந்த குணங்களை போதிச்சாரு.

மாணவர் மன்றம்னு மயிலை சிவமுத்து, தணிகை உலகநாதன் என்ற இரண்டு பெரியவர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுக்க -பொதுத்தமிழ், சிறப்புத் தமிழ் இரண்டுலயும் தேர்வு வச்சு அதில் தேர்ச்சிடையறவங்களுக்கு சென்னையிலிருந்தே சர்டிபிகேட் கொடுத்தாங்க.

பள்ளித்தோழிகளுடன்.

எங்க வகுப்பில 25 பேர் தேர்வு எழுதி 22 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சர்டிபிகேட் வாங்கினோம்.

அப்படி கோவை மாவட்டடத்திலயே குறிப்பிடும்படியான அரசுப் பள்ளியா அது இருந்துச்சு. திருவேங்கடசாமி நாயுடு பிற்காலத்தில் நல்லாசிரியர் விருது தமிழக அரசிடம் வாங்கினாரு. சூலூர் பள்ளியிலயே 20 ஆண்டுகளுக்கு மேலா தலைமை ஆசிரியரா இருந்த ஒரே மனிதர் அவர்தான்.

பள்ளிப்படிப்பு முடிச்சு சென்னை போயிட்டேன். 7 ஆண்டு ஓவியம் படிச்சேன். நடிகனுமாயிட்டேன். அந்தக் கனவுத் தொழிற்சாலையில் புகை, மது, மாதுன்னு போகங்களுக்கு அடிமையாகாம இருக்க, சூலூர் பள்ளிக்கூடத்தில போட்ட அஸ்திவாரம்தான் காரணம்.

ஹீரோ ஆகி 10 வருஷங் கழிச்சு ஒருநாள் திடீர்னு ஹெட்மாஸ்டரை தேடிப் போய் அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும்னு தோணுச்சு. சென்னையிலிருந்து ஊருக்குப் போனேன். சதர்ன் டெக்ஸ்டைல் மில் சூலூருக்கு மேபுறம் இருந்திச்சு. அதை ஒட்டி கிழபுறம் ஒரு சாலையில ஹெட்மாஸ்டர் இருந்தாரு.

பெரிய தாம்பாளத்தட்டு நிறைய ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்னு வாங்கி எடுத்துட்டுப் போனேன்.

வாசல்ல ஹெட்மாஸ்டர் -அவரு சம்சாரம் நின்னு வரவேற்றாங்க. தட்டை வாசல்ல வச்சிட்டு எண்சாண்கிடையா தரையில உழுந்து கும்பிட்டுட்டு தலையத் தூக்கிப் பாக்கறேன். ஹெட்மாஸ்டரைக் காணோம்.

ஓடிப்போய் ஊட்டுக்குள்ளே பூந்து கதவை சாத்தீட்டாரு. கண்ணாடிப் படல் சந்தில எட்டிப் பார்த்து, ‘‘என்ன வேலை செஞ்சீங்க? மொதல்ல மேல எந்திரீங்க; நான் வரமாட்டேன்!’’ன்னு பதறினாரு.

தலைமை ஆசிரியர் குடும்பம்

நானோ, ‘‘சார்! ஆசீர்வாதம் பண்ணணும் வாங்க!’’-ங்கறேன்.

‘‘அதெல்லாம் பண்றேன், முதல்ல எந்திரீங்க!’’

‘‘எனக்கு நீங்க வாத்தியாரு. நீங்க இல்லாட்டி நான் இந்த நெலமைக்கு வந்திருக்க முடியாது..’’

‘‘அதெல்லாம் சொல்லாதீங்க. நீங்க முயற்சி பண்ணி கடுமையா உழைச்சதனால மேலுக்கு வந்திருக்கீங்க!’’

‘‘இருக்கலாம் சார்! ஆனாலும் இந்தச் செடிக்கு அன்னிக்கு வேர்ல தண்ணி ஊத்தி உரம் போட்டது நீங்கதானே?’’

‘‘எல்லாச் செடிக்கும்தான் நாங்க வேர்ல தண்ணி ஊத்தி உரம் போட்டோம். எல்லாச் செடியும் அப்படி பெரிசா வரலியே!’’

‘‘இதோ, நான் வந்திருக்கேனே. உங்க வழிகாட்டல் இல்லேன்னா இந்த நிலைக்கு வந்திருக்க முடியாதே!’’

‘‘எல்லாம் சரி! நீங்க எந்திரிச்சு உள்ளே வாங்க. நாம சாவகாசமா பேசலாம்!’’னு உள்ளே வரவழைச்சு, தன் 60 ஆண்டு கால வாழ்க்கையை சிரிச்சுக்கிட்டே அவர் விவரிச்ச அழகை என்னன்னு சொல்றது?

அவரு சம்சாரம் சொன்னாங்க. ‘‘உங்க ஹெட்மாஸ்டர் கோபக்காரர்னு உங்களுக்கெல்லாம் நல்லா தெரியும். அவரோட ரெண்டு பசங்களுமே எட்ட நின்னுதான் அவர்கிட்ட பேசுவாங்க. அவர் வாழ்க்கையில் இப்படி சிரிச்சு சந்தோஷமா இருந்ததை நான் பார்த்ததே இல்லை!’’ன்னாங்க.

மாதா, பிதாவுக்கு மேலான குருதானே தெய்வம்..

- சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x