கல்வி அறம்வேண்டி நிற்கும் கவுரவ விரிவுரையாளர்கள்!

கல்வி அறம்வேண்டி நிற்கும் கவுரவ விரிவுரையாளர்கள்!
Updated on
3 min read

தமிழகத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவல் 4 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளந்தியான விவசாய பூமிக்குள்ளும் கரோனா உயிர்க்கொல்லி நுழைந்துவிட்டது.

கரோனாவை விரட்டும் போர்க்கால நடவடிக்கைகளை ஒரு கையில் வைத்துக்கொண்டு; கல்லூரிகளில் பட்டம் பெறும் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு தவிர்க்க முடியாத்தது என அறிவிப்பையும் ஒருகையில் வைத்துக் கொண்டு இக்கட்டான சூழலுக்குள் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் 2019-2020 ஏப்ரல் மாத பருவத்தேர்வு ரத்து என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பெற்றோர் மற்றும் பேராசிரியர்களால் காலமறிந்து செயல்பட்ட முடிவாக பாராட்டப்படுகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு எழுதுவது குறித்த மைய அரசின் தலையீடு அதிகாரப் பாதிப்பாகவே நோக்கப்படுகிறது.

2022 வரை கரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியோடும், கரோனா அச்சத்தோடும் வாழவும் தயாராக வேண்டும் என்ற அமைச்சகங்களிலிருந்து வரும் தகவலையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது சற்று ஆறுதலைத் தருகிறது. என்றாலும் புழக்கத்திற்கு வந்தபாடில்லை என்கின்றனர் மருத்துவ ஆலோசகர்கள். இந்நிலையில் ஆயிர்ககணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் கூடும் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு குறித்தும் அதனால் எண்ணிப்பார்க்கவியலாத அளவில் தொற்றுப் பரவும் அச்சம் குறித்தும் மைய அரசின் முடிவு குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அண்டை மாநிலத்தில் தேர்வு நடத்தியதால் தொற்றுப்பரவல் எண்ணிக்கை அதிகரித்த செய்தியில் உறைந்து போயுள்ளோம். கரோனா தொற்றிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நம்முன் நிற்கும் தபால். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடும் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஏழாவது முறையாகவும் தளர்வில்லா ஊரடங்கிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றன

இந்தச் சூழலில் கவுரவ விரிவுரையாளர்களான தற்காலிகப் பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தபடுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆட்பட்டிருக்கின்றனர். கரோனா முடக்கம் காரணமாக பணி செய்யவில்லை எனக் காரணம் காட்டி கவுரவ விரிவுரையாளர்கள் தனியார் கல்லூரி தற்காலிகப் பணி பேராசிரியர்கள் ஊதியம் நிறுத்தப்பட்டிருக்கிறது என ஆதங்கப்படுவதும் வருத்தத்திற்குரியது.

தனியார் சுயநிதிக் கல்லூரியிப் பேராசிரியர்களும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என சொற்பமான மாத ஊதியத்தையும் இழந்து நிற்கின்றனர். அரசு நிறுவனங்களிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுயநிதி தனியார் கல்லூரிகளிலும் போதுமான பேராசிரியர்கள் நிரப்பபடாமல் உள்ளனர். அந்தக் காலிப்பணியிடங்களின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே உயர்கல்வித் தகுதி அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முனைவர் பட்ட கல்வித் தகுதிகளோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தேர்வு செய்யப்படுகின்றனர். தங்களுக்கு வழங்கப்படும் பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு வகுப்பறைப் பாடங்களாக நடத்தி முடித்துத் தரவேண்டுமென்பது கடமை, அவர்களுக்கு இட்டபணி. ஆனால் அவர்களது பணிக்காலமாக ஜூலை மாதம் முதல் மார்ச் மாதம் என வரையறுக்கப்படுவது வழக்கமாகவே உள்ளது.

மாதிரித் தேர்வு, பருவத் தேர்வு, விடைத்தாள் திருத்தப் பணிக் காலங்களான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பாடம் நடத்தும் பணி இல்லாததாலும் பெரும்பாலும் ஜூன் மாதத்தின் பாதியில்தான் கல்லூரி வேலை நாள் தொடங்கும் என்பதாலும் ஜூலை முதல் மார்ச் மாதங்களே தற்காலிகப் பணியாளர்களின் பணிக்காலங்கள் எனக் கணக்கிடப்பட்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்குப் பாடம் நடத்தும் வேலை இல்லை என்று கருதி ஊதியமும் வழங்கப்படுவதில்லை. தனியார் கல்லூரிகள் தற்காலிகப் பேராசிரியர் பணிக்கு மிகச் சொற்பமான ஊதியமே வழங்கி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் தனியார் சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் நிரந்தரப் பணி கிடைக்காத நிலையில் நம்பிக்கையற்றுப் ‘பண்ரூட்டி’என்ற ஊரைச் சேர்ந்தவர் முறுக்கு சுட்டு விற்கின்றேன் என ஒளிப்படக் காட்சியோடு செய்தி ஊடகங்களில் வரப் பார்த்திருக்கிறோம். அது கல்வித் தகுதியின் மீது சமூகம் வைத்துள்ள அவநம்பிக்கை.

தமிழகத்தின் தனியார் கல்லூரிகளில் முனைவர் பட்டம் பெற்று 20, 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தகுதி அனுபவங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் பணியை உயிர்க்கொல்லி கரோனா காலம் பறித்து விடும் பேராபத்தில் நின்று கொண்டிருக்கின்றனர் கவுரவ விரிவுரையாளர்கள்.

குறைவான ஊதியத்தோடு உயர் கல்விப் பணி செய்துவரும் பேராசிரியர்கள்; கல்வி அறப்பணி செய்யும் மரியாதையோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கரோனா ஊரடங்கின் தொடர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களுக்கு ஜூலை மாதத்தில் தற்காலிக ஊதியப் பணியும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட் என கரோனா காலங்களில் தற்காலிக ஆசிரியர் பணியும் இல்லாத நிலையில் அவர்களுக்கு கல்வி அறக்கொடை நிவாரணங்கள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என கோரிக்கைகளும் வைக்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் நியமனத்தின்போது பணி அனுபவங்கள் மதிப்பெண்களாக அமைவதால், அந்த மதிப்பெண் பெறும் வாய்ப்பிற்காக தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கும் இசைந்தபடி பணியாற்றும் ஆசிரியர்கள் அதிகம். ஆனால் கரோனா காலத்தில் பணி செய்யவில்லை என்பதால் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு (4) மாதங்களும் ஊதியம் மறுக்கப்பட்டவர்களாக மறுதலிக்கும் நிலை ஆசிரியர்களை நிலை குலையச் செய்துள்ளது.

தங்களிடம் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு Parents, Teachers Association Fond – PTA பெற்றோர், ஆசிரியர் கழக நிதியிலிருந்து கரோனா காலத்து நிவாரணமாக ஊதியம் வழங்குதல் சால்புடையது என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் சொல்லுவது போல 2022 வரை கரோனாவின் தாக்கம் நீடித்தால் கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் பெறுவதில் இக்கட்டான தருணங்களே நீடித்திடும் நிலையும் உருவாகலாம். அப்படியொரு சூழலை ஆசிரியர்கள் சந்தித்துவிடக் கூடாது. அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் சொற்ப ஊதியப் பணியும் பாதிக்கப்பட்டால் முனைவர் பட்ட ஆய்வுகளை முடித்து உயர்கல்வித் தகுதியோடு கல்லூரி ஆசிரியர் பணியை மட்டுமே நம்பியிருக்கும் அவர்களின் நிலை கேள்விக்குள்ளாக்கப்படும். அந்நிலை அமைந்திட கூடாது.

“அறம்” தாங்கிய நீதித்துறையின் இளம் வழக்கறிஞர்களுக்கு கரோனா கால நிவாரணமாக ரூபாய் மூவாயிரம் வழங்கி உதவும் அரசு;- கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்களுக்கு கல்வி அறக்கொடை வழங்கிட வேண்டும் என வேண்டி நிற்கின்றனர்.

“கல்வி” அறப்பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்களுக்கு கரோனா கால அறக்கொடை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் என கல்வியாளர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

கட்டுரையாளர்: முனைவர் க.அ.ஜோதிராணி,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை-2.
தொடர்புக்கு: jothirani.ka@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in