

க.விக்னேஷ்வரன்
இன்றைக்கு இணைய உலகில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் விரவிக்கிடக்கின்றன. மானுட இனத்தின் எதிர்கால நம்பிக்கைகளாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து உலகெங்கும் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சித்தரிப்பதாக விமர்சிக்கப்படும் 'க்யூட்டீஸ்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு பலரது எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.
பிரெஞ்சு மொழியில் 'மிக்னோனஸ்' என்ற பெயரில், மெமூனோ டிக்குரே என்ற பெண் இயக்குநர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், 2020-ம் ஆண்டுக்கான சன்டான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்கத்திற்கான விருதைப் பெற்றது.
மதக் கொள்கைகளில் ஊறிப்போன குடும்பத்திலிருந்து வரும் 11 வயது கறுப்பின சிறுமிதான் இப்படத்தின் நாயகி. வெளி உலகத்தில் தன் சம வயது சிறார்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளும்போதும், நடனத்தின் மூலம் புகழ்பெற முயற்சிக்கும்போதும் அந்தச் சிறுமி எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பதிவுசெய்யும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
வலுவான திரைக்கதை அமைப்புக்காகவே இப்படத்துக்கு விருதும் கிடைத்தது. அதேசமயம், இப்படத்தில் பதின்வயது சிறுமிகள் ஆபாசமான உடையுடனும், வக்கிரமான முறையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என கடும் விமர்சனங்கள் எழுந்தன.
விருது விழாக்களில் மட்டும் வலம் வந்துகொண்டிருந்த இப்படத்தைப் பொதுவெளியில் வெளியிட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவெடுத்தது. செப்டம்பர் 9-ல் இப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. "17 வயதுக்குட்பட்டோர் பார்க்கத் தகாத இந்தப் படம் 11 வயது சிறார்களைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது. இது கொடூரமான நகைமுரண்" என்றும், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை சகஜமானதாகக் காட்டும் நெட்ஃப்ளிக்ஸின் முயற்சி வெட்கக்கேடானது" என்றும் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் யூ-டியூப் தளத்தில் வெளியாகியிருக்கின்றன.
இந்த ட்ரெய்லரை அகற்றக் கோரியும், படத்தைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியும், Change.org இணையதளத்தின் மூலம் குழந்தை நலச் செயற்பாட்டாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள்.
எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து, "குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் ஆதரிப்பது இல்லை" என்று மையமாகப் பதிலளித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். ஒருபுறம் இத்திரைப்படத்துக்கு எதிரான குரல்கள் வந்து கொண்டிருந்தாலும், "இன்றைக்கு உலகம் முழுக்க தொலைக்காட்சியில் வரும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறார்களே? அவர்களை நோக்கி எழாத கேள்விகள், நிதர்சனத்தைப் பேசும் ஒரு திரைப்படத்தை நோக்கி மட்டும் எழுவது சரியா? கண் முன் நடக்கும் அக்கிரமத்தைத் துணிச்சலாகக் கேள்விக்குட்படுத்தும் படைப்புகளை முடக்கப் பார்ப்பது நியாயமல்ல" என்று சிலர் வாதிடுகிறார்கள்.
"இப்படத்தை எதிர்க்கும் பலரும் இதுவரை படத்தை முழுமையாகப் பார்த்ததில்லை. ஒரு நிமிடம் முப்பது விநாடிகள் மட்டுமே ஓடும் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை எதிர்ப்பது என்பது சரியான வழிமுறை கிடையாது" என்பது அவர்களின் வாதம்.
'க்யூட்டீஸ்' பேசப்போகும் சமூக அரசியல் என்ன, உண்மையிலேயே இது குழந்தைகளின் மீது அக்கறை கொண்ட படம்தானா என்பதெல்லாம் படம் வெளியானால்தான் தெரியவரும்.
அதேசமயம், திரைப்படத்தின் நோக்கத்தில் தவறு இல்லை எனும் பட்சத்தில், ட்ரெய்லரை இப்படி முகம் சுளித்து, வருந்த வைக்கும் விதமாக வியாபார நோக்கை மட்டுமே மனதில் கொண்டு அமைத்திருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.