Published : 21 Aug 2020 09:26 AM
Last Updated : 21 Aug 2020 09:26 AM

கொங்கு தேன் 18- ‘மலம்புழா’கண்ணிக்கயிறு!

சிவகுமார்

கிராமப்புறங்கள்ளே காலுக்கு செருப்பு போடற பழக்கம் அந்தக் காலத்தில இல்லே. விளையற பூமிக்குள்ளே அதை போட்டு நடக்கறது, சோறு போடற தாயி நெஞ்சு மேல செருப்பால மிதிக்கிற மாதிரி. அதனால வேலை வெட்டிக்கு போறவங்களும் செருப்பு போட மாட்டாங்க. பள்ளிக்கூடம் போற குழந்தைகளும் செருப்பு போட மாட்டாங்க.

நினைவு தெரிஞ்சு செருப்பை நான் பார்த்தது - ஆடுகள் பின்னாடி ஊர் ஊரா நடக்கிற குறும்பர் இனத்து மக்கள்கிட்டத்தான். அவங்களுக்காகத்தான் முத முதலா செருப்பு செஞ்சதா சொல்லுவாங்க. மேலே கூட்டுவார் -ஒண்ணுக்குள்ளே ஒண்ணு கோத்து கூடாரம் மாதிரி பின்னியிருப்பாங்க. அடிப்பக்கம் ‘ஹீல்ஸ்’ -பகுதியில ரெண்டு ‘ஆஸ்’ (இரண்டு லேயர்) சேர்த்து வச்சு ஒசறமா பண்ணியிருப்பாங்க.

நடக்கும்போது ‘கிர்க்-கிர்க்’ன்னு சத்தம் வரும். என்னை பொருத்தவரைக்கும் சூலூர்ல 11-வது படிச்சு முடிக்கிற வரைக்கும் நான் செருப்பு போட்டு நடக்கவே இல்லே.

தினம் போக வர 6 கிலோமீட்டர். நடந்துதான் நாங்க சூலூர் பள்ளிக்கூடம் போனோம். 11வது படிக்கும்போது பழையபடி அம்மாகிட்ட சண்டை போட்டு, ‘சைக்கிள் ஒண்ணு வாங்கிக்குடுத்தே ஆகோணும்!’ன்னு நின்னேன்.

அப்பறந்தான் ஓட்டி ஓட்டி தரம்பின (தேய்ந்த)பிலிப்ஸ் கம்பெனி சைக்கிள் ஒண்ணு 90 ரூபாய்க்கு வாங்கிக் குடுத்தாங்க.

அதில உட்கார்ற சீட்லருந்து ஹேண்டில் பார் வரைக்கும் குறுக்கா போற பிரேம்ல ‘ஒட்டு’ - பெடல்லருந்து மேல ஹேண்டில்பார் வரைக்கும் வர்ற பிரேம்லயும் ஒரு ‘ஒட்டு’. இப்படி ஒட்டுப் போட்ட சைக்கிள்னா ‘பைபாஸ்’ ஆன மனுஷன் மாதிரி ரொம்ப ‘வீக்’கான சைக்கிள்னு அர்த்தம்.

பின்னாடி ‘கேரியர்’ கிடையாது. ‘மட்கார்டு’களில் பெயிண்ட் போய் துருப்பிடிச்சிருந்தது. ‘வீல்’கள் ரெண்டுலயம், குரோமியம் ‘கோட்டிங்’ (வெள்ளி மாதிரி மின்னும் பகுதி) அங்கங்கே தூறு உட்டு தண்ணிபட்டா அந்த ‘பிரேம்’லயும் துருப்பிடிக்கும். ‘டயர்’கள் பட்டன் தேய்ஞ்ச ‘டயர்’கள். ‘புதுசா மாத்தினா 20 - 30 ரூபாய்க ஆகும். பழைய டயரோட ஓட்டினா, ரோட்ல ஆணி குத்தி பஞ்ச்சர் ஆகற வாய்ப்பு இருக்கு!’ன்னேன். ‘பரவால்லே பதனமா ஓட்டுன்னாங்க!’

ராயல் தியேட்டர்

சைக்கிள் வாங்கியாச்சு. அப்புறம் ஊட்லயே முடங்கிக் கிடக்க முடியுமா? எறகு முளைச்ச பறவைங்களை கூட்டுக்குள்ளேயே இருக்கச் சொன்னா அடங்குமா? மலம்புழா அணை பாத்திட்டு வரலாம்ன்னு புறப்பட்டோம். எங்க ஊர் நடராஜன். சூலூர் செல்வராஜ் கூட ரெண்டு பேர் கிளம்பினோம். ராத்திரி சாப்பாடு ஊர்ல முடிச்சிட்டு, 18 கிலோமீட்டர்ல இருக்கற கோயமுத்தூர் போயி, ‘ராயல்’ தியேட்டர்ல சிவாஜி-ஜெமினி நடிச்ச, ‘பெண்ணின் பெருமை’ படம் பார்த்துட்டு -ஆளுக்கு ஒரு கிளாஸ் பால் சாப்பிட்டு 2 மணி வாக்கில மேக்கே கிளம்பினோம்.

மலம்புழா சைக்கிள் பயணம்

அந்தக்காலத்தில பாலக்காடு நம்ம பக்கத்து ஊர் மாதிரி -கேரள மாநிலம் பிரிக்கப்படாத நாட்கள். போற வழியில அப்ப வாழையாறு மேடுன்னு ஒண்ணு இருந்திச்சு. இப்ப அதை லெவல் பண்ணி ‘ஹைவே’ரோடாக்கிட்டாங்க.

45 டிகிரிக்கு ரோடு சரிவா ஒரு பர்லாங் போயி, அதே வேகத்தில் 45 டிகிரி மேல் நோக்கி ரோடு எழும்பும். பாரம் வச்ச வண்டிங்க சரிவுல கடகடன்னு ஓடும் -எருதுக இழுத்திட்டுப் போக வேண்டியதில்லே வண்டியே எருதுகளை தள்ளிட்டு போகும். அப்படி ஒரு சரிவான ரோடு.

அந்தப் பக்கங்கள்ளே எருதுகள் வண்டி இழுக்க பயன்படுத்தறதில்லை. எருமை ‘போத்துகள்’தான் (ஆண் எருமை) வண்டிய இழுக்கும். எருதுகளுக்கு முதுகுல, ‘திமிழ்’ இருக்கும். எருமைகளுக்கு அந்த எடம் சப்பட்டையா (தட்டையா) இருக்கும்.

மலம்புழா- வாளையாறு ரோடு

இந்த எருமைகள் கடகடன்னு வண்டிய இழுத்துட்டுப் போய் -ரோட்டுல ஏறறப்ப, பின்பாரம் அதிகமா இருந்தா 45 டிகிரி கோணத்தில மேல் நோக்கி போறப்ப வண்டி கொடை சாஞ்சிரும். அதாவது வண்டியின் முன்பக்கம் ஏர்க்கால் பகுதி மேலே போய் -பின்பக்கம் தரைக்கு வந்திடும். அப்படி ஆகும்போது எருமை கழுத்தில கட்டியுள்ள கண்ணிக்கயிறு அந்த எருமைகளின் கழுத்துப் பகுதிய இறுக்கும். குதிரைக முன்னங்கால் ரெண்டையும் தூக்கி நிற்கிற மாதிரி -எருமைகள் 2 கால்களை தூக்கி தொங்க வேண்டி வரும்.

அதனால வண்டியில் ‘சென்ட்டர் பார்’ - என்று சொல்லும் நடுமரத்தின் அடியில் 4 அடிக்கு பனைமரத் துண்டை வெட்டி, கம்பி மூலம் அதில் தொங்க விடுவார்கள். வண்டி கொடை தூக்கி முன்பக்கம் மேலே போனால் இந்த பனைமரத்துண்டு தரையில் முட்டி - பாதுகாக்கும்.

இதெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு ராத்திரி மூணு மணிக்கு மதுக்கரை, வேலந்தாவாளையம் எல்லாம் தாண்டி போயிட்டிருக்கறோம். ‘கோக்... கோக்.. கோக்...!’ன்னு சைடுல சத்தம் கூடவே வந்திட்டிருக்கு. என்னடான்னு உத்துப் பார்த்தா காட்டுக்குரங்குக எங்களை கிண்டல் பண்ணிட்டே சைடில ஓடி வருதுங்க.

ஒரு வழியா விடியக்காலைல பாலக்காடு போய் அங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில வடக்கால போனா மலம்புழா அணை. என்ன ஒரு பிரம்மாண்டம்... கோட்டை சுவர் மாதிரி. மைல் கணக்கா சுத்தி சுத்திப் போய் தண்ணிய தேக்கி வச்சிருக்கற அணை. அணையின் மேல்பக்கம் அகலமா இருக்கு. உள்ளே சுரங்கம் மாதிரி ஒரு பாதை. ‘ஆர்ச்’ வடிவத்தில் வளைவா அணைக்குள்ள நடந்து போய் பார்க்கறதுக்கு. 1000 அடி பூமிக்குள்ளே போய் சுரங்கத்தில நிலக்கரி வெட்டற மக்களை நினைச்சுகிட்டேன். அவ்வளவு திகிலா இருந்திச்சு.

மலம்புழா அணை முன்பக்க தோற்றம்

அணை மேல ஏறறதுக்கு 45 டிகிரி சாய்வா ஒரு ரோடு இருக்கு. புதுகார், வலுவான எஞ்சின் இருந்தாலே முக்கிட்டுத்தான் மேல ஏறும்.

சைக்கிள்ள போறது ‘ரிஸ்க்’ன்னு சொன்னாங்க. ‘ரிஸ்க்’ எடுக்கறதுதான் நம்மளுக்கு பிடிக்குமே.

எங்கக்காவுக்கு கல்யாணம் முடிஞ்ச சமயம். மூணு மாதத்துக்கு வீட்டு மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டில மருகலம் போடுவாங்க. அதாவது தினம் விருந்து சாப்பாடு, 3 மாதத்துக்கு. சாயங்காலம் எங்க மச்சான் வந்தா எங்கம்மா பச்சப்பயிறு வடை சுடுவாங்க. நானும் மச்சானும் ஆளுக்கு 25, 30 வடைக சர்வ சாதாரணமா சாப்பிடுவோம். அப்பறம் ராத்திரி 8 மணிக்கு சோறும் மூச்சு முட்ட எறக்கிடுவோம்.

அப்படி சாப்பிட்டு சாப்பிட்டு சேகு ஏறிப்போன (உரம் ஏறிப்போன) ஒடம்பு.

‘நடராசு வாப்பா ஒரு கை பாக்கலாம்!’ன்னு அணை மேல 45 டிகிரி ரோட்டுல சைக்கிள விட்டோம். பாதி போனதும் இனி ஒரு இஞ்ச் கூட மேல ஏறாது. ரிவர்ஸ்ல போகப் போகுதுன்னு தெரிஞ்சதும், எழுந்து நின்னு பெடல் பண்ணி, கெண்டைக்கால் சதை ‘டைட்’ ஆகற மாதிரி ஓட்டி போயே போயிட்டோம். பெரிசுகல்லாம், ‘ஏம்பா இப்படி ஆபத்தை வெலைக்கு வாங்கறீங்க?’ன்னு திட்டினாங்க.

மதுக்கரையிலிருந்து - நான் வரைந்த ஓவியம்

அணைய சுத்திப் பார்த்துட்டு கொளுத்தற வெயில்ல பாலக்காடு போய் மத்தியான சாப்பாடு சாப்பிட்டு -வேப்ப மரத்து நிழல்ல கட்டைய சித்த நேரம் சாச்சுட்டு (லேசான உறக்கம்) 3 மணிக்கு கிளம்பி கோயமுத்தூர் ரோட்ல இருக்கற கந்தே கவுண்டன் சாவடி கிராமம் வந்தோம்.

இருட்டறதுக்கு முன்னாடி வாழையாறு மேடு தாண்டிடணும்னு வேகமா வந்தோம். கீழே பள்ளத்தில சைக்கிள்கள் மிதிக்காமயே மோட்டார் பைக்கில் போற மாதிரி பறந்துச்சு. மேட்டு மேல ஏறறப்போ செல்வராஜூக்கு நெஞ்சு வலியே வந்திருச்சு. சரின்னு அவரை நான் டபுள்ஸ் போட்டு கூட்டீட்டு வந்தேன். நடராஜ் செல்வராஜ் சைக்கிளையும் ஒரு கையில புடிச்சிட்டு, தன் சைக்கிளையும் ஓட்டீட்டு வந்தாரு.

கந்தே கவுண்டன் சாவடி மெயின் ரோட்லயே உள்ள கிராமம். எங்கம்மாவோட மூத்த அக்கா நான் சிறுவயசில இருக்கும்போதே செத்துப் போயிட்டாங்க. கருப்பராம்பாளையத்து பெரியம்மான்னு அம்மா சொல்லியிருக்காங்க. பெரியம்மாளுக்கு ஒரு பொண்ணு, சுப்பாத்தா. கந்தேகவுண்டன் சாவடிக்கு கட்டிக் குடுத்தது. அவங்களை இது வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. சுப்பாத்தாளுக்கு அய்யாத்தான்னு ஒரு பொண்ணு; அய்யாசாமின்னு பையன். புருஷன் செத்துப் போனதனால சுப்பாத்தா தம்பி ஆறுமுகம் அக்காவுக்கு துணையா விவசாயம் பண்றாரு. சுப்பாத்தா பொண்ணை பின்னாடி கல்யாணம் பண்ணகிட்டாரு. அந்த ஊரைக்கண்டதும் அவங்க நினைப்பு வந்துருச்சு. ‘இங்கே சுப்பாத்தா வீடு எங்கே?’ன்னு எதிர்ப்பட்டவங்ககிட்ட கேட்டேன்.

‘வேலந்தாபாளையம் ரோட்லயே 4 வீடு தள்ளிப் போனா வரும்ன்னாங்க. வடக்கு வாசல் வீடு. ஆசாரம் தெக்குப் பாத்து, கூரையெல்லாம் போட்டிருந்தது. வீட்டை கண்டு பிடிச்சிட்டேன். ‘சுப்பாத்தா தோட்டத்தில இருக்கா!’ன்னு ஒரு செவத்த பொண்ணு -12 வயசுப் பொண்ணு சொல்லிச்சு. தோட்டத்துக்குப் போனோம். அந்தி மயங்கற நேரம். சுப்பாத்தாளும் அவங்க தம்பி ஆறுமுகனும் விதைப்பு போட்டிட்ருந்தாங்க.

யாருன்னு சொன்னதும், ‘அட சாமி! உன்னை பாக்கோணும் பாக்கோணும்னு எத்தனை வருஷம் ஆசைப்பட்டேன். நீயே வீடு தேடி வந்துட்டியா ராசா!’ன்னு வீட்டுக்கு கூட்டீட்டு வந்து அக்கா ஒரு கிளாஸ் பால் குடுத்தது. அப்புறம் கிளம்பி மதுக்கரை, கோயமுத்தூர் வழியா சூலூர், அப்புறம் காசிக்கவுண்டன் புதூர் ராத்திரி 10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

உடன் வந்த நடராஜன்

முந்தின நாள் ராத்திரி 8 மணிக்கு கிளம்பி மலம்புழா பார்த்துட்டு மறுநாள் ராத்திரி 10 மணிக்கு திரும்பினப்போ 180 கிலோமீட்டர் சைக்கிள் சவாரி பண்ணின கணக்காகுது. இது நடந்து 50 வருஷம் தாண்டிருச்சு. மெட்ராஸ் போனேன். ‘பொம்மை காலேஜ்ல (ஓவியக் கல்லூரி படிப்பு) படிச்சேன். நடிகனாயிட்டேன்.

திடீர்னு ஒரு நாள் ஒரு போன்:

‘‘அப்பிச்சி! நல்லா இருக்கீங்களா?’’

‘‘யாருப்பா அது, முன்ன பின்ன தெரியாம அப்பச்சின்னு கூப்பிடறது?’’

‘‘நாந்தான் அப்பச்சி, அய்யாத்தா பேரன்...!’’

எங்க சொந்தத்துக்குள்ள ‘அய்யாத்தா’ன்னு நாங்க பேர் வைக்க மாட்டோம். இந்த பேரு புதுசா இருக்கே.

‘‘கந்தே கவுண்டன்சாவடி - உங்க பெரியம்மா மக சுப்பாத்தாளுக்கு ‘அய்யாத்தா’ன்னு ஒரு பொண்ணு

இருந்திச்சே!’’

ஆ.. ஞாபகம் வந்திருச்சு. மலம்புழா போயிட்டு கந்தே கவுண்டன் சாவடி வீட்டுக்குப் போனனே!‘சுப்பாத்தா தோட்டத்தில இருக்கா!’ன்னு ஒரு செவத்த பொண்ணு -12 வயசுப் பொண்ணு சொல்லிச்சே!

அய்யாத்தா பேரன்-மனைவியுடன்

‘‘ அந்த அய்யாத்தா பேரன்தான் அப்பச்சி’’’ போன் குரல் பாசமா இழையோடுது...

‘‘மலம்புழா போயிட்டு வந்தப்ப உங்கம்மாளை -12 வயசில சின்னப்புள்ளையில பார்த்தது!’’

இதை சொல்லும்போதே என் கண்ணில நீர் கட்டிட்டுது. 1956-ல விட்டுப் போன ஒறவு 50 வருஷம் தாண்டி புதுப்பிக்குது.

‘‘உன் பேரு என்னய்யா?’’

‘‘பழனிசாமி’’

‘‘என் பேரையே உனக்கும் வச்சிருக்காங்களா?’’

‘‘....!’’

‘‘அய்யாத்தா, தாய் மாமன் ஆறுமுகனை கண்ணாலம் பண்ணி அவங்களுக்கு பொறந்த பொண்ணுதான் எங்கம்மா..!’’

‘‘ரொம்ப சந்தோஷம்பா!’’

‘‘நான் எல்.ஐ.சில வேலை பார்க்கறேன். தொண்டாமுத்தூர்ல அடுத்த மாசம் கல்யாணம் அப்பிச்சி!’’

சத்தியமா வர்றேன்னு சொல்லி -மாதம்பட்டிக்கு வடக்கே போற ரோட்ல தொண்டாமுத்தூர் கல்யாண மண்டபம் போனேன். எல்லோருக்கும் அதிர்ச்சி.

‘‘என்னடா, நடிகர் இங்க வந்திருக்காருன்னு ஆச்சர்யப்படறீங்களா? எங்க பெரியம்மாவோட 5 வது தலைமுறை, பேரன் மாப்பிள்ளை -அதில கலந்துக்கத்தான் வந்தே!’’ன்னதும், சொந்தக்காரங்க பல பேர்த்தோட கண்ணுல குபு,குபுன்னு கண்ணீர். எனக்கும்தான்...

வந்திருந்த சனங்க முகத்தில ஆச்சர்யக்குறி. தலைக்கட்டு கடந்த உறவுகன்னா சும்மாவா?

----

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x