

வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் வாய்ப்புள்ள எந்த நிறுவனமும் தற்போது தன் ஊழியர்களை அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற அழைப்பதற்கான வாய்ப்பில்லை. 2021- ல்தான் அலுவலகங்கள் தங்கள் பணிகளை இயல்பு நிலைக்குத் திருப்புவதற்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையவழியில் வேலைகளைப் பெற்றுக்கொள்ளும் பல சிறு நிறுவனங்கள், கட்டிட வாடகை, மின் கட்டணம், அலுவலகப் பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகளைத் தவிர்க்கும் வகையில் தாங்கள் செயல்பட்டுவந்த கட்டிடங்களைக் காலி செய்துவிட்டனர். பெரிய நிறுவனங்களும் தங்கள் பணிகளின் ஒரு பகுதியை இப்போது இருக்கும் இணையவழியிலேயே பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
பணிக்கு உவப்பில்லாத சூழல்
இணையவழியில் வீட்டிலிருந்து பணியாற்றுவது வசதியானதுதானே என்று சிலர் நினைக்கலாம். வேலை இல்லாத நிலையோ கிடைக்கும் சிறு வேலைக்கும் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் வருமானத்தின் பெரும்பகுதியைப் பயணச் செலவுக்கு இழக்கும் நிலையோ உங்களுக்கு இல்லையே, வெயிலிலும் மழையிலும் கடும் உழைப்பைச் செலுத்தும் தங்களது நிலையைவிட இது வசதியானதுதானே எனவும் சிலர் நினைக்கக்கூடும்.
அதில் ஒரு பகுதி உண்மைதான் என்கிறபோதும், இணையவழியில் பணியாற்றுவதில் உள்ள கடுமையான பணிச்சுமை, உளவியல் அழுத்தம் பலருக்குத் தெரியாது. இப்படியொரு சூழலில் வீட்டிலிருந்து பணியாற்றுவதில் உள்ள சிரமங்களையும் அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.
பெரும்பான்மையான ஊழியர்கள் வீட்டில் பணிபுரிவற்கு ஏதுவான சூழல் இல்லை. அலுவலகம்போல் பல மணிநேரம் அமர்ந்து வேலை செய்வதற்கான இருக்கையோ, மேஜையோ இல்லாத வீட்டிலிருந்துகொண்டு அதே அளவு பணியை மேற்கொள்வது உடல்ரீதியான சிரமங்களை ஏற்படுத்துகிறது. இந்நிலையைப் புரிந்துகொண்ட கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அலுவலக மேஜை, இருக்கை ஆகியவற்றை வாங்க 70 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓயாத வீட்டு வேலை
அதேநேரம் மற்றொரு முக்கியப் பிரச்சினை வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்துக்கொண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதுதான். அவர்கள் எந்த வயதுக் குழந்தையானாலும் அவர்கள் மீது கவனம்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆண்களைவிட வீட்டிலிருந்து அலுவலக வேலைகளைச் செய்யும் பெண்களின் நிலை மேலும் கொடுமையானது. முன்பு காலையிலேயே வீட்டுவேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டால் எவ்வளவு சோர்வும் உடல்வலியும் இருந்தாலும் அலுவலகத்தில் தங்கள் பணிகளைச் செய்ய குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பு நிலவும்.
ஆனால், தற்போதைய நிலையிலோ வீட்டில் இருப்பதால் உணவை அவ்வப்போது சூடாகச் சமைக்க வேண்டும், அலுவலகத்தில் புத்துணர்வுக்காகச் சென்று அருந்திய தேநீரைக்கூட கூடுதல் வேலையாகச் செய்து மேலும் சோர்வுடனே தேநீரை அருந்த வேண்டும். செய்ய செய்ய குறையாத கணக்கிலடங்கா வீட்டுவேலைகள் எல்லாம் பெண்களுடைய தலையில்தான். இவ்வளவுக்கும் இடையில்தான் அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
இன்றைய நிலையில் இந்தப்பணிச் சூழல் தவிர்க்க முடியாதது. இப்படியான காலகட்டத்தில் நாம் எப்படி நிதானமாக இதை எதிர்கொள்வது என்பதே முக்கியம். எல்லாம் கடந்துபோகும் என்பது உண்மைதான் என்கிறபோதும் அது நம்மைக் கடத்திக்கொண்டு போகாதவகையில் நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதுவே நமது உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்கும்.
பொதுவாக அலுவலகம் நமக்குப் பணிசெய்வதற்கான பணிச்சூழலை வழங்குகிறது. அது மனித உற்பத்தியை அதிக அளவு பெறுவதற்கான அம்சத்தோடு சம்மந்தப்பட்டதுதான் என்றபோதும் அத்தகைய வாய்ப்பு வீடுகளில் இல்லை.
ஆனாலும், அதே அளவிலான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
திட்டமிடல் அவசியம்
முடிந்த அளவு இடைஞ்சல் இல்லாமல் பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்த இடத்திலிருந்து மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சுத்தமான ஒழுங்கைக் கடைப்பிடிக்கப் பாருங்கள். அது நமது வேலையின் தன்மையிலும் அளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மடிக்கணினியே என்றாலும் மெத்தையில், சாப்பாட்டு மேஜையில் என எல்லா இடத்திற்கும் அதைத் தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள். அது நமது பணியை முடிக்க உதவலாமே தவிர அதை முழுமைப்படுத்த உதவாது.
வீட்டிலிருந்து பணியாற்றுகிறோம் என்பதற்காக எப்போதாவது வேலையைச் செய்வது, எப்போதுமே வேலையாக இருப்பது, நினைக்கிற நேரமெல்லாம் வேலை செய்வது என்கிற அனைத்துமே தவறு. ஒரு குறிப்பிட்ட நேரரைத்தை வகுத்துக்கொண்டு அந்த நேரத்துக்குள் வேலை செய்வதையும் அதற்குள் வேலையை முடிப்பதையும் உத்தரவாதம் செய்வது நல்லது. அப்போதுதான் திட்டமிட்ட வகையில் வேலைகளையும் முடிக்க முடியும். வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தைச் செலவுசெய்யவும் முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு எழுவது குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கைக்குச் செல்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே வரிசையாக நமது அனைத்து வேலைகளை செய்ய உதவும்.
வேலைப்பளு இருந்தாலும் அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் வீட்டில் இருப்பவர்களுடன் உரையாடுங்கள். வேலை செய்துகொண்டே டீ குடிப்பது என்றில்லாமல் எல்லோருடனும் இணைந்து இளைப்பாறுங்கள். தொடர் வேலைகளில் மூழ்கி மனச்சோர்வுக்கு ஆளாவதை இது தடுக்கும். முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செலவு செய்யும் நேரத்துக்கு நீங்களே அளவுகோல் வைத்துக்கொள்ளுங்கள்.
உடல் நலத்தைப் பேணுவதிலும் கவனம் தேவை. வீட்டில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இருப்பது உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும். வீட்டிலிருந்தாலும் சரியான நேரத்தில் சரியான அளவு உணவு எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி, உறக்கம் என அனைத்தையும் சீராகச் செயல்படுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நம்மை மேலும் சிறப்பாக நமது பணிகளைச் செய்ய உதவும்.