தன்மானமே ஆற்றல்: தலைவர்கள் காட்டும் தன்னம்பிக்கைப் பாதை!

தன்மானமே ஆற்றல்: தலைவர்கள் காட்டும் தன்னம்பிக்கைப் பாதை!
Updated on
3 min read

இந்த உலகில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு சூழலில் அவமானத்தை சந்தித்திருப்பார்கள்.

நம்முடைய தன்மானத்தை மற்றவர்கள் உரசிப் பார்க்கும்பொழுது நம்மையும் அறியாமல் நம்மிடம் ஏற்படுகின்ற உணர்வுகளின் உச்சகட்ட வடிவம்தான் இந்த அவமானம். உடலில் ஏற்பட்ட காயம் ஓரிரு நாட்களில் ஆறிவிடும். மனதில் ஏற்பட்ட காயம் ஆறவே ஆறாது.

காந்தியடிகள் சந்தித்த அவமானம்

அவமானத்தைச் சந்தித்தவர்களில் பல நபர்கள் பின்னாளில் அதிகமாக கொண்டாடப்பட்டிருக்கிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.

ஆப்பிரிக்க தேசத்தில் பீட்டர் மாரியட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அண்ணல் காந்தியடிகளை வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ரயில் பெட்டியில் இருந்து வெளியே தள்ளி அவமானப்படுத்துகிறார். அன்றுதான் காந்தியடிகளின் மனதில் வெள்ளையரையும், அடிமைத்தனத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற மனப்பான்மை முதன்முதலில் தோன்றியது. அதுதான் இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்டது.

நம்மை அவமானப்படுத்துகிறவர்களிடம் மோதுவதை விட, நம்முடைய வெற்றிகளால் அவர்களைத் தலைகுனிய வைக்கவேண்டும். பாராட்டு என்பது நேர்மைத் திறமான ஆற்றலை உருவாக்குவது போல அவமானம் என்பதும் மாறுபட்ட முறையில் மனிதனின் தன்மான ஆற்றலைத் தூண்டி வெற்றிபெற ஒரு காரணியாகும் .

டாடாவும் தாஜ் ஓட்டலும்

ஒரு முறை டாடா இரும்பு எஃகு நிறுமத்தின் தலைவர் ஜேஆர்டி டாடா இங்கிலாந்துக்கு இரும்பு எஃகுத் தொழில் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார்.

அப்பொழுது அங்குள்ள உணவு விடுதியில் காபி அருந்தச் சென்றபொழுது, அந்த உணவகத்தின் பணியாளர் காபி தர மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, இது எங்கள் நாட்டின் கொள்கை முடிவு. கறுப்பர்களுக்கு நாங்கள் காபி தர மாட்டோம் என்றும் கூறினார். அவமானத்தை வெளிக்காட்டாமல் வெளியேறிய பின் இந்தியா திரும்பிய டாடா, தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் சில ஆண்டுகள் கழித்து மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் தாஜ் ஓட்டலை நிறுவினார்.

அதன் சங்கிலித் தொடராக இன்று 50-க்கும் மேற்பட்ட நட்சத்திர உணவகங்களை தாஜ் ஹோட்டல் குழுமம் உருவாக்கியுள்ளது. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் என்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகமும் இந்தக் குழுமத்தின் ஓர் அங்கம்தான்.

தாஜ் ஓட்டலின் திறப்பு விழாவிற்காக இங்கிலாந்தின் அப்போதைய அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில் அழைக்கப்பட்டிருந்தார். திறப்பு விழாவின்போது வின்ஸ்டன் சர்ச்சில் மிகவும் வியப்போடு டாடாவிடம், ’’உங்களால் எவ்வாறு இவ்வளவு பெரிய ஹோட்டலை நிறுவ முடிந்தது?’’ என்று கேட்டார்.

அதற்கு ’’உங்கள் நாட்டில் நான் பெற்ற அவமானம்தான் இவ்வளவு பெரிய ஹோட்டலை நிறுவக் காரணம்’’ என்று டாடா பதிலளித்தார். அதைக் கேள்விப்பட்ட சர்ச்சில் டாடாவை உணவகப் பணியாளர் அவமானப்படுத்தியது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இவ்வளவு பெரிய வெற்றியை அடைவதற்கு அவர் பெற்ற அவமானமும் அதனால் தூண்டப்பட்ட தன்மானமும் மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தது.

சவுக்காய் இருப்போம்

பொதுவாகக் கட்டிடம் கட்டும் பொழுது சவுக்கு மரத்தை முக்கியமாக வைத்து சாரம் கட்டி, குறுக்கே பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்று வேலை பார்க்கக் கட்டிடம் உயர்ந்துகொண்டே போகும். கட்டிட வேலை முடிந்த பின்பு அந்தக் கட்டிடத்திற்கு வர்ணங்கள் பூசிய பின்னர், ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். வேலைகள் அனைத்தும் முடிந்து பின்பு எந்த சவுக்கு மரம் கட்டிடம் கட்டுவதற்கு முக்கியமானதாக இருந்ததோ, அந்த சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் வீட்டின் பின்னால் எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு, வேறு எங்கேயோ முளைத்த வாழை மரத்தை வீட்டின் முன்னால் நட்டுவைத்து, கிரகப்பிரவேசம் நடத்தி எல்லாரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உண்மை என்னவெனில், அந்த வாழை மரம் மூன்று நாட்கள் வாழ்க்கைதான் வாழும். அதன்பின்பு ஆடுகளும், மாடுகளும் அந்த வாழை மரத்தை மேயும். குழந்தைகள் பிய்த்து எடுப்பார்கள். அதன்பின்பு வாடிப்போன அந்த வாழை மரம் குப்பை வண்டியில் போய்ச் சேரும். ஆனால் அந்த வீட்டில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த சவுக்கு மரம் தன்னை ஒதுக்கி வைத்ததற்காகக் கண்ணீர் விடுவதில்லை, கலங்குவதில்லை. அது அடுத்த கட்டிடம் கட்டுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.

சவுக்கு மரம் அங்கீகாரத்தை எதிர்பார்த்து வாழாமல், தனது கடமையைச் சரிவரச் செய்கிறது. எனவே நாமும் சவுக்கு மரம் போல வாழ்வதற்குப் பழகவேண்டும். வாழ்க்கையில் யார் நம்மை மிதித்தாலும், மனம் தளராமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்று கொடுக்கும் ஆசிரியர், நம்மைச் சுமந்து செல்லுகின்ற வண்டிதான்.

நம்மைக் குப்பையில் கிடக்கும் காகிதமாக நினைப்பவர்கள் முன்னால், பட்டமாக உயரத்தில் பறக்க வேண்டும். வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற மூன்றையும் துணையாகக் கொண்டு செயல்படவேண்டும்.

தடம் பதித்து நடப்பவர்களே மாமனிதர்கள்

பாராட்டையும், பதக்கங்களையும் எதிர்பார்த்து வாழவும் கூடாது. அவமானத்தையும், அலட்சியத்தையும் பொருட்படுத்தவும் கூடாது. உழைப்பு மழையை சிந்திப் பாருங்கள், உங்கள் வாழ்க்கையெல்லாம் வெற்றி மலர்கள் பூத்துக் குலுங்கும். வாழ்க்கையில் பெற்ற அவமானங்கள் எல்லாம் உழைப்பினால் மட்டுமே வெகுமானங்களாக மாறும். தடம் பார்த்து நடக்கின்ற மனிதர்களின் மத்தியில் தடம் பதித்து நடப்பவர்களே மாமனிதர்கள்.

காலம் நம் மீது சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது துரும்பாய் இருந்தால் நாம் தொலைந்து விடுவோம், இரும்பாய் இருந்தால் ஜெயித்து விடுவோம்.

வெற்றியின் ரகசியம் நமக்குள்தான் இருக்கிறது. அதை வெளியே தேடி அலைய வேண்டியதில்லை. கிடைக்கின்ற நேரத்தை உங்களை வளப்படுத்திக் கொள்ள மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் உங்கள் கதவைத் தேடிவந்து தட்டும். வானம் கூட உங்களுக்கு வசப்படும்..!

- எஸ்.ராஜசேகரன், தலைமையாசிரியர்

இந்து மேல்நிலைப் பள்ளி, வத்திராயிருப்பு, விருதுநகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in