

விநாயகர் சதுர்த்தி விழா ஆக.22-ல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மக்கள் அதிகளவு கூடுவதைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இந்நிலையில், ஆக.22-ல் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவதற்கு 20 நாட்களுக்கு முன் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிடும். வடமாநிலத் தொழிலாளர்கள் சாலையோரங்களில் கொட்டகை அமைத்து விநாயகர் சிலைகள் செய்து, வியாபாரம் செய்வார்கள்.
இந்தாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்தவொரு தொழிலும் முழு அளவில் நடைபெறவில்லை. இதில், விநாயகர் சிலைகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்து, வீடுகளிலேயே விநாயகரை வழிபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இங்கு ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் விநாயகர் சிலைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் கூறும்போது, நாங்கள் கடந்த பிப்ரவரி மாததே எங்கள் ஊரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்துவிட்டோம். நாங்கள் சுவாமி சிலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறோம்.
ஆனால், மார்ச் மாத கடைசியில் இருந்து ஊரடங்கு தொடர்ந்ததால் எங்களால் சிலைகள் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. ஆக.22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் கடந்த மாதம் முதல் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டோம். இவை அனைத்தும் சுற்றுச்சுழலை பாதிக்காத அளவில் தயாரிக்கப்பட்டதாகும்.
அரசு சார்பில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் முன்கூட்டியே சுமார் 20 செ.மீ. முதல் ஒன்றரை அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் செய்துள்ளோம்.
இவை ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரைக்கு விற்பனை செய்கிறோம். இதற்காக தினமும் ஒவ்வொரு ஊராக சுமை ஆட்டோ மூலம் சிலைகளை கொண்டு விற்பனை செய்து வருகிறோம்.
ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல் விற்பனை இல்லை. இது மட்டுமே எங்களது தொழில். நாங்கள் வருமானமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம், என்றார் அவர்.