Last Updated : 05 May, 2014 06:37 PM

 

Published : 05 May 2014 06:37 PM
Last Updated : 05 May 2014 06:37 PM

முதலில் தமிழர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் பாலிவுட் பக்கோடாக்களே!

மினிமம் கியாரன்ட்டி இயக்குனர், நாயகன் என்று இருப்பது போல் தற்போதைய பாலிவுட்டின் மினிமம் கியாரன்ட்டி கதாசிரியர் என்றால், அது சேத்தன் பகத். இவர் எழுதிய '5 பாயின்ட் சம் ஒன்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட படம் தான் அமீர் கான் நடித்த '3 இடியட்ஸ்' (தமிழில் 'நண்பன்'), '3 மிஸ்டேக்ஸ் ஆப் மை லைஃப்' கதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட இந்தி படம் தான் 'கை போ சே', 'ஒன் நைட் அட் தி கால் சென்டர்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட இந்தி படம் 'ஹலோ'. இவர் எழுதிய '2 ஸ்டேட்ஸ்' என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளிவந்துள்ள படம் '2 ஸ்டேட்ஸ்'.

எம்.பி.ஏ படிக்கையில் இவருடன் படிக்கும் பெண் மீது இவருக்கு ஏற்பட்ட காதலையும், கலாச்சார சமூகத்திலிருந்து வேறுபட்டு ஆண் - பெண் இணைந்து வாழும் லிவிங் டுகெதர் (Living Together) உறவினைப் பற்றியும், வேறுபாடுகளை கடந்து காதல் கை கூடிய கதையை விவரித்த புத்தகம் '2 ஸ்டேட்ஸ்'. '2 ஸ்டேட்ஸ்' படமும் புத்தகத்தோடு பெரிதொரு முரணேதும் கொள்ளாமல் ஒன்றிப் பிணைந்து நிற்கிறது.

வெளிநாட்டில் காதலர்கள் சேர, இருவரும் காதலித்தால் போதும். ஆனால் இங்கே காதலனை பெண் வீட்டாருக்கு பிடிக்க வேண்டும், காதலியை மாப்பிள்ளை வீட்டார்க்கு பிடிக்க வேண்டும். அது மட்டுமன்றி இரு வீட்டார்க்கும் ஒருவரை ஒருவர் பிடிக்க வேண்டும். அப்படியெல்லாம் நிகழ்ந்தால் தான் டும் டும் டும், இல்லையேல் காதல் டமால் டுமீல் தான்.

இப்படி கலாச்சாரம், சமூக கட்டமைப்புகள் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயப்படுத்துகிறது என்பதை இப்படம் விரித்துரைக்கிறது. கிட்டத்தட்ட நம்ம ஊர் 'ஜோடி', 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்து கதை தான். ஆனால், கதைக்களம் தான் டெல்லி டூ சென்னை வழி அகமதாபாத்.

'மலையாளக்காரர்கள் என்றால் டீ'க்கடை நாயர்கள், முண்டு கட்டிக் கொண்டு வரும் சேச்சீக்கள். குஜராத்தியர்கள் என்றாலே தலையில் தொப்பி அணிந்து வரும் சேட்ஜீக்கள், முஸ்லிம்கள் என்றால் டெரரிஸ்ட்கள், நிம்மல் நம்மல் என்று பேசும் கறிக்கடை பாய்கள், ஆந்திராகாரர்கள் என்றாலே நீட்ட நீட்ட முடிகள், உருட்டு கட்டை தாடிகளை வைத்து திடகாத்திரமாக அரிவாளுடன் உலாவும் தாதாக்கள்... இந்த பிம்பத்தை தான் பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் இவர்களுக்கு அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் இந்த வன்கொடுமை செயலுக்கு பழிவாங்கும் எண்ணத்திலோ என்னவோ தெரியவில்லை, இந்த பாலிவுட் பாட்ஷா பக்கோடாக்கள் தமிழன் என்றாலே இப்படித் தான் என்று அவர்களே ஒரு பிம்பத்தை அமைத்து அதற்குள் தமிழர்களை பொறுத்தி விடுகிறார்கள். அதிலும் ஷாருக்கான் இருக்கிறாரே இவர் ஒரு கொடூர வியாபாரி. 'ரா-ஒன்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' போன்ற படங்களில் தமிழர்களை வக்கணையாக இழிவுபடுத்திவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, லுங்கி டான்ஸ் என்று ஏதேதோ மண்டியிட்டு கடைசியில் படத்தை இங்கேயே சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்.

நம்ம பாலிவுட் பாட்ஷா (ஷாருக்கான்) படங்களைப் போல் '2 ஸ்டேட்ஸ்' கூட தமிழர் கலாச்சாரம் என்று பல விஷயங்களை உளறிக் கொட்டி கிளறி மூடுகிறது. 'பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு நெற்றியில் பட்டையுடன் ஹோட்டலில் பரிமாறும் சப்ளையர்கள், இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் முகம் முழுதும் பவுடர் பூசிக் கொண்டு கொண்டை முழுதும் ஒரு இடம் விடாமல் பூவணிந்து மேக்கப் போட்டு இருக்கும் மயிலை மாமி, நிறத்தின் பொருட்டு இழிவுபடுத்தும் வசனங்கள், அந்தரங்கங்கள் தெரிய அரைகுறையாக கட்டிய சேலையுடன் பெண் பார்க்க பெற்றோர் முன் அமரும் மகள்'... இப்படி நாம் சேலை கட்டும் முறையை கூட தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காடாக சித்தரித்துள்ளனர்.

இப்படத்தைப் பொறுத்தவரை அரை நெற்றிவரை பட்டை அடித்து வேட்டியை கட்டித் திரிபவன் தமிழன், இல்லையேல் அவன் பஞ்சாபி. யார் தமிழன் யார் பஞ்சாபி என்ற வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொள்ள இயக்குநர் கையாண்டுள்ள முறை தான் இது.

பல இடங்களில் தமிழர்களை கேலி செய்கிறார் என்றால் அதற்கு நிகராக பஞ்சாபிய கலாச்சாரத்தில் உள்ள சம்பிரதாயங்களும் கதையில் எள்ளி நகையாடப்பட்டுள்ளது. மாப்பிள்ளையை நல்ல தொகைக்கு விற்கும் வரதட்சணை கலாச்சாரம், பஞ்சாபியற்கு சிக்கனும் மதுவும் இருந்தால் மட்டும் போதும் என்று பெண்மணி பேசுகின்ற வசனம், மாமியாரின் கட்டுக்கோப்புக்கு அடங்கிய மருமகளாக ஒரு பஞ்சாபி பெண் தான் இருப்ப்பாள் என்று அவர்கள் சுய சிந்தனையற்றவர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தும் வசனங்கள்... இப்படி பஞ்சாபியர்களையும் இக்கதை கேலி செய்கிறது.

முன்கூறிய 'ஜோடி', 'பூவெல்லாம் கேட்டுப்பார்' போன்ற படங்களிலிருந்து '2 ஸ்டேட்ஸ்' விலகி நிற்பதே இவ்விரு இனத்தவரை எள்ளி நகையாடும் விதத்தில்தான். சினிமா எப்போதும் ஒரு கலாச்சார தூதுவனாக விளங்குகிறது. இப்போது இரானிய நாட்டின் கலாச்சரங்களை, அங்குள்ள மக்களின் நிலையை சினிமா மூலமும், இணையதளம் மூலமும் தான் அறிந்து கொள்கிறோம். பாலிவுட், தமிழரைப் பற்றிய தவறான பிம்பத்தையை உலகத்திற்கு முன் வைக்கிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் தமிழர்களை எள்ளி நகையாடியே இவர்கள் 'பிழை'ப்பு நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சரி நம்ம படம் பார்த்து கலாச்சாரம் கத்துக்கோங்க என்று அவர்களுக்கு சொல்லலாம் என்றால், படத்துக்கு படம் "ஓபன் தி டாஸ்மார்க்கு” என்று ஒரு குத்தாட்டம் வைத்து விட்டு இவன் தான் தமிழன் என்று பறைசாற்றுகிறார்கள்.

படம் எடுப்பது போதாதென்று விருது விழாவில் கெவின் ஸ்பேசி போன்ற தரமான ஹாலிவுட் நடிகர்களை வரவழைத்து தமிழர்களுக்காக என்று கூறி அவரையும் லுங்கி டான்ஸ் ஆட வைக்கிறார்கள். "பாலிவுட்டை கலக்கிய பெரிய தமிழ் நடிகைகள் எல்லாம் பணக்கார பஞ்சாபியர்களைத் தான் மணந்துள்ளனர்" என்ற வசனம் வேறு.

தொடர்ந்து பாலிவுட் சினிமாக்கள் தமிழர்களை மஞ்ச மாக்கானாக சித்தரித்து வருவதை எப்போது நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x