Published : 14 Aug 2020 10:17 am

Updated : 14 Aug 2020 10:18 am

 

Published : 14 Aug 2020 10:17 AM
Last Updated : 14 Aug 2020 10:18 AM

ஆயிரத்துக்கு நூறு

samarpana-foundation

ஏழை மக்களின் பசிப் பிணியைப் போக்க காஞ்சி பெரியவரால் ‘ஒரு கைப்பிடி அரிசித் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு கைப்பிடி அரிசி கொடுத்தால் போதும். இது பலரின் பசியைப் போக்கியது. இதைப் போன்றதுதான் ஆயிரம் பேருக்கு 100 ரூபாய் திட்டம். இந்தத் திட்டத்தைத் தொடங்கி எண்ணற்ற கிராமியக் கலைஞர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுவருகிறது சமர்ப்பணா அறக்கட்டளை. இதன் நிறுவனரும் அறக்கட்டளை இயக்குநருமான காயத்ரி, நடனக் கலைஞரும்கூட! அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கலையும் வறுமையும்


கடந்த ஆகஸ்ட்டில் சமர்ப்பணா அறக்கட்டளையைத் தொடங்கினோம். பல கலைஞர்கள் வறுமையின் பிடியில் தவிப்பதைச் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஒரு கலைஞராக இது என்னை மிகவும் பாதித்தது. தொடக்கத்தில் வாய்ப்பு மறுக்கப்படும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த அறக்கட்டளையைத் தொடங்கினோம். சமூக வலைத்தளங்களின் வழியாகக் கலைஞர்களுக்கு உதவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினோம். இதுதவிர, வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளையும் அரங்கங்களில் நடத்தினோம்.

அவற்றில் ஒன்றுதான், சங்கப் பாடல்களைக் கொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி. பொதுவாகப் பரதநாட்டியத்தில் சங்கப் பாடல்களைக் கொண்டு யாரும் நாட்டியத்தை வடிவமைக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சங்கப் பாடல்களுக்கு நடனக் கலைஞர் கருணாசாகரி நாட்டிய வடிவம் கொடுத்து நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின் கர்னாடக இசைக் கலைஞர்கள் சிலரைக் கொண்டு மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சியை நடத்தி, அதில் திரட்டப்பட்ட நிதியின்மூலம் மூளைத் திறன் பாதிப்பு அடைந்த குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவினோம். அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களைத் தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை எங்கள் அறக்கட்டளை அமைப்பினர் சென்று வழங்குவார்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆங்கிலத்தில் எழுதுவது, பேசுவது போன்ற மென்திறன் பயிற்சிகளை வழங்கினோம்.

வலைத்தளம் மூலம் உதவி

கோவிட்19 பாதிப்பு தொடங்கியதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரத்யேகமாக கோவிட் விழிப்புணர்வு, ஆற்றுப்படுத்துதல் போன்றவற்றை மையப்படுத்தி ஆரம்பித்தோம். நோயை ஆற்றுப்படுத்தும் பண்பு கலைக்கு இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, கலை நிகழ்ச்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதைக் கொண்டே நிதி திரட்டும் நிகழ்ச்சிகளாக வடிவமைத்தோம். இதன் மூலம் திரண்ட நிதியை, கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர், இஸ்திரி போடுபவர்கள், சைக்கிள் ரிக்ஷா, பாரவண்டி இழுப்பவர்கள் போன்றவர்களுக்கு உதவினோம். கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து எங்களின் உதவியை நாடியவர்களுக்கு, அவசரத் தேவைக்காக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்துவது, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது என இரண்டு வழிகளிலும் உதவினோம்.

பறிபோன வாழ்வாதராம்

கிராமியக் கலைஞர்களுக்கு மார்ச் முதல் ஜூலை மாதம்வரை நடக்கும் கோயில் திருவிழாக்கள்தான் ஓராண்டுக்கான வாழ்வாதாரமாக இருப்பதை உணர்ந்தோம். அப்படிப்பட்ட கிராமியக் கலைஞர்களைக் கொண்டே ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி என ஜூன் 30 முதல் ஜூலை 30 வரை இன்ஸ்டாகிராமில் நடத்தினோம். அந்தக் கலைஞர்களுக்கும் அவர்களின் கலை நிகழ்ச்சிக்கான சன்மானமும் அளித்தோம். ‘சமர்ப்பணா’வின் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியக் கலாச்சார அமைச்சகத்தின் உதவியும் எங்களுக்குக் கிடைத்தது. இதன் மூலம் எண்ணற்ற கலைஞர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தந்ததுடன் சக கலைஞர்களுக்கும் எங்களால் உதவ முடிந்தது.

பிரச்சாரத்தை முன்னெடுத்த பிரபலங்கள்

பிரபல கர்னாடக இசைப் பாடகர்களான சுதா ரகுநாதன் உள்ளிட்ட பலரும், பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் போன்றவர்களும் தங்களின் பங்களிப்பைச் செலுத்தியதுடன் ‘100 ஃபார் 1000’ பிரச்சாரத்தைப் பொது மக்களிடையே கொண்டு சென்று பரவலாக்கினர். குறைந்தபட்சம் நூறு ரூபாயை நன்கொடை அளிப்பதன்மூலம் ஏழ்மையில் இருக்கும் கலைஞர்கள் அடையும் பலனை உணர்ந்து பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை அளித்துவருகின்றனர்.

இதுதவிர, பெரும் பாதிப்புக்குள்ளான கலைஞர்கள் சேலம், நாகர்கோவில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை எனத் தமிழகம் முழுவதும் இருக்கும்

கலைஞர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதிகளில் இருக்கும் கடைகளிலேயே பேசி அவர்களுக்கான மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்தோம். ஏறக்குறைய 2,800 கலைஞர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் முழுமையாக பலன் அடைந்திருக்கின்றனர்.

மாற்றுப் பணி ஆதாரம்

மார்ச் மாதம் தொடங்கிய கோவிட் தொற்றுப் பரவலால் ஊரடங்கு ஆறு மாதங்களை நெருங்கப் போகிறது. இன்னும் எவ்வளவு நாளுக்கு ஊரடங்கு இருக்கும் என்பது தெரியாத நிலையில், கலைக் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஏற்படும் மன உளைச்சல், குடும்பங்களில் வெடிக்கும் சண்டையால் மனம் உடைந்து தற்கொலைகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தையற்கலை, நூற்பாலை போன்ற பணிகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கான மாற்று வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறோம். வறுமையில் இருக்கும் கலைஞர்கள் தங்களுக்குத் தேவைப்படும் உதவியை எங்களுக்குத் தெரிவிக்க ‘மைத்ரி’ எனும் வாட்ஸ்அப் சேவையையும் அளிக்கிறோம். 94450 22150 என்னும் எண்ணில் கலைஞர்கள் அவர்களின் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைக் கேட்டு தகவல் அனுப்பலாம்.

நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் கிராமியக் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்தினருக்குக் கூட, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இவர்களை அடையாளம்கண்டு, இவர்களின் வாழ்வாதாரத்துக்கு மாநில அரசு உதவ வேண்டும் என்றார்.

உங்கள் உதவியை ‘கூகுள் பே’ மூலமாகச் செலுத்த: 9884458008


தவறவிடாதீர்!

ஆயிரத்துக்கு நூறுஒரு கைப்பிடி அரிசித் திட்டம்கிராமியக் கலைஞர்கள்தினக் கூலித் தொழிலாளர்கள்விளிம்பு நிலை மக்கள்மாற்றுத்திறனாளிசமர்ப்பணா அறக்கட்டளைSamarpana foundationBlogger special

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x