

காட்டு யானைகள் இறக்கும் செய்திகளை தொடர்ச்சியாகக் கேள்விப்படுகிறோம். இந்தியாவில் கொண்டாடப்படும், வழிபடப்படும் யானைகள், மற்றொருபுறம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிக்கப்படுகின்றன. அல்லது அவை அழிக்கப்படுவதை, அழிக்கப்படுவதற்கான காரணங்களை நாம் கண்டும் காணாமல் இருக்கிறோம். இந்த நிலையில் உலக யானை நாள் ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த யானை நாளில், யானைகள் குறித்து குறைந்தபட்ச அறிவைப் பெறுவது நிச்சயம் உதவும்.
அந்த வகையில் யானைகளைப் பற்றிய ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த 'மியூசிக் டிராப்ஸ்' குழு இந்தப் பாடலை யூடியூபில் வெளியிட்டுள்ளது. சூழலியலாளரும் கவிஞருமான கோவை சதாசிவம் பாடலை எழுத, எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைப்பள்ளியை நடத்திவரும் ராஜபாளையம் உமாசங்கர் மெட்டமைத்துப் பாடியுள்ளார். அவருடன் சிறுமி யாழ்நங்கையும் சேர்ந்து பாடியுள்ளார்.
யானைகளின் இயற்கை குணாம்சங்களையும் முக்கியத்துவத்தையும் மிக எளிமையாக விளக்கும் இந்தப் பாடலில், மனிதச் செயல்பாடுகளால் பலியாகும் யானைகள், மனிதர்களிடம் அடிமைப்பட்டுத் துன்புறும் சர்க்கஸ் யானைகள், பிச்சையெடுக்கும் யானைகள் போன்றவற்றைக் குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாடல் வரிகளுடன் யானைகள் குறித்த ஒளிப்படங்கள், காணொலிக் காட்சிகளின் தொகுப்பு பாடலை சிறந்த காட்சி அனுபவத்தைத் தருகிறது. படத்தொகுப்பும் வண்ணமும் கா. இராகவேந்திரன். ஜெரார்டு மஜெல்லாவின் இனிமையான இசை, கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. யானைகள், காடுகள், இயற்கையைக் குறித்துக் குழந்தைகள் புரிந்துகொள்ள இந்தப் பாடல் பெரிதும் உதவும்.
யானைகள் குறித்த அந்தப் பாடல்:
உயிரே உயிரே பேருயிரே
தரையில் உலவும் கார்முகிலே
வீணை வயிற்று யானைகளே
காட்டை இசைக்கும் நாதங்களே!
தந்தம் நீண்ட களிறானாலும்
தாயின் சொல்லை மீறாது
புல்வெளி சோலைக் காடானாலும்
வலசைப் பாதை மாறாது!
யானையைத் துரத்தும் பட்டாம்பூச்சிகள்
எச்சத்தில் உப்பைத் தேடுமே
ஊற்றுப் பறிக்கும் யானையின் பின்னே
எல்லா உயிர்களும் ஓடுமே!
யானை காட்டின் ஆதாரம்
அவை அழிந்தால் இயற்கைக்கு சேதாரம்!
ஆதிவிதைகள் யானையின் வயிற்றில்
நொதித்த பிறகே மரமாகும்
மரங்கள் பூச்சி பறவைகள் சேர்ந்து
வாழ்வது தானே அறமாகும்!
யானை இருந்தாலும் இறந்தாலும்
ஆயிரம் பொன் என்ற கதையினை மறப்போம்
யானை இருந்து யாவும் செழித்து
பல்லுயிர் பேணும் வழி நடப்போம்!