Published : 09 Aug 2020 11:47 AM
Last Updated : 09 Aug 2020 11:47 AM
ஐஏஎஸ் அதிகாரியாக விரும்பும் இளைஞருடனான நினைவுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.9) தன்னுடைய முகநூல் பக்கத்தில், "குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று காலை தொலைபேசியில் வாழ்த்துக் கூறியபோது ஒரு இனிமையான மலரும் நினைவுகள்...
மருங்கூர் ராமநாதனின் மகன் ராம்பிரசாத். அவரும் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். ராமநாதனின் மூத்த மகளும் குடிமைப் பணி தேர்வுக்காக டெல்லியில் தயாராகி வருகிறார். கரோனா பரவல் அச்சம் காரணமாக இப்போது இருவரும் கடலூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.
ராமநாதனின் மகன் ராம்பிரசாத் என் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் பாமக மீதும் பற்று கொண்டவர். ஒருமுறை நான் சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த ராம்பிரசாத், காரை நிறுத்தி விட்டு, எனது காரை நோக்கி ஓடி வந்தார். அதற்குள் சிக்னலில் இருந்து புறப்பட்டு விட்டேன். ஒரு இளைஞர் ஓடி வருவதை பார்த்த நான் காரை நிறுத்தும்படி கூறினேன்.
அந்த இளைஞனை அழைத்து விசாரித்த போது தான், அவர் மருங்கூர் ராமநாதனின் மகன் என்பது தெரியவந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்ட போது, ஐஏஎஸ் படித்துக் கொண்டிருப்பதாகவும், கலெக்டராக வேண்டும் என்பது தான் லட்சியம் என்றும் கூறினார்.
அதற்காக ராம் பிரசாத்தை ஊக்கப்படுத்திய நான், 'நீ கலெக்டர் ஆனால், நான் உனக்கு டிரைவராக வந்து கார் ஓட்டுகிறேன்' என்று கூறினேன். அதைக் கேட்டு அந்த இளைஞர் மகிழ்ச்சி அடைந்தார். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை பெரிதாக்கி அவரது வீட்டில் மாட்டி வைத்திருப்பதாக அவரது தந்தை இன்று என்னிடம் கூறினார்.
ஐஸ்வர்யாவைப் போலவே ராம்பிரசாத்தும், அவரது மூத்த சகோதரியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ராம்பிரசாத் ஐஏஎஸ் ஆகி கலெக்டர் ஆனவுடன் ஏற்கெனவே உறுதி அளித்தவாறு அவருக்கு ஒரு நாள் கார் ஓட்ட ஆசையுடன் இருக்கிறேன்; காத்திருக்கிறேன்!
கழனியில் உழைத்த பாட்டாளி சொந்தங்கள் கலெக்டர் ஆகும் போது, அவர்களுக்குக் கார் ஓட்டுவதை விட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் எனக்கு?"
இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT