Last Updated : 08 Aug, 2020 10:40 AM

 

Published : 08 Aug 2020 10:40 AM
Last Updated : 08 Aug 2020 10:40 AM

கரோனாவுக்குப் பலனளிக்குமா ஜிங்கிவிர் –ஹெச்?

இந்தியாவில் தற்போதுவரை 20 லட்சம் பேர் கோவிட் – 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பங்கஜ கஸ்தூரி ஹெர்பல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (பி.கே.எச்.ஐ.எல்) நிறுவனம், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) கரோனாவுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தொற்றுநோய்க்கான கூடுதல் சிகிச்சையாக இந்த நிறுவனம் தனது மாத்திரையான ஜிங்கிவிர்-ஹெச் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.

கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்ற 116 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன, 58 பேருக்கு ஜிங்கிவிர்-ஹெச் வழங்கப்பட்டது, மீதமுள்ளவர்களுக்கு பிளேஸ்போ எனப்படும் மருந்துப் போலி வழங்கப்பட்டது. ஜிங்கிவிர்-ஹெச் என்ற மூலிகை-கனிம மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட 58 நோயாளிகள், ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (ஆர்.டி.-பி.சி.ஆர்) சோதனையின்போது சராசரியாக 5 நாட்களில் குணம் அடைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் சராசரியாக 8 நாட்களில் குணம் அடைகின்றனர் என்பது தெரியவந்தது.

உலக சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி ஜிங்கிவிர்-ஹெச் மாத்திரையின் மீதான மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. இறுதி முடிவுகள் ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கே.ஆர். மருத்துவமனை, மைசூரு கர்நாடகா; ஆர்.சி.எஸ்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் சிபிஆர் மருத்துவமனை, கோலாப்பூர், மகாராஷ்டிரா; சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு; இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஃபரிதாபாத், ஹரியானா; ஆகிய இடங்களில் ஜிங்கிவிர் – ஹெச் மீதான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

பங்கஜகஸ்தூரி ஹெர்பல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஜிங்கிவிர்-ஹெச் மாத்திரையின் சோதனை தொடர்பான முதல் அறிக்கையை ஆயுஷ் அமைச்சகத்தில் 2020 ஜூன் மாத இறுதியில் சமர்ப்பித்தது. அதே சமயம் ஒரு ஆய்வுக் குழுவால் 42 நோயாளிகளின் மீது பரிசோதிக்கப்பட்டது தொடர்பான இடைக்கால அறிக்கை ஜூலை 8 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. 116 நோயாளிகளின் முதன்மை சிகிச்சை நிலை குறித்த இறுதி அறிக்கை ஜூலை 24 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பங்கஜ கஸ்தூரி நிறுவனம் ஆயுஷ் அமைச்சகத்தின் இறுதி முடிவை விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இன்று, பல லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, வைரஸுடன் போராடி, மருத்துவமனைகளில் இருக்கின்றனர். இந்த நிலையில், அறிவியல்ரீதியாக நவீன ஆயுர்வேத அடிப்படையிலான சிகிச்சைகள், நீண்டகால நன்மைகளைக் கொண்ட மருந்துகளையும் உயிர்களைக் காப்பாற்ற உதவும் மருந்துகளையும் ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரித்து ஆதரிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x