Published : 07 Aug 2020 11:46 AM
Last Updated : 07 Aug 2020 11:46 AM

கொங்கு தேன் 14 - ஊட்ல சினிமா...

சிவகுமார்

‘தேவதாஸ்’ - படத்தில ஒரு பாட்டு வரும். ‘உறவுமில்லை பகையுமில்லை- ஒன்றுமே இல்லை!’என்று ஆரம்பிக்கற பாட்டுல ‘அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!’ன்னு ஒருவரி வருது.

அது எனக்கு அப்படியே பொருந்துது. தீபாவளி, பொங்கல் 2 நாள்தான் சினிமா பாக்கலாம்ன்னா, சினிமா பைத்தியம் புடிக்க ஆரம்பிச்ச பையன் என்ன பண்ணுவான்?

எங்கூர்லருந்து சூலூர் போயி திருச்சி ரோடு ஜங்ஷன்ல கிழபுரம் சொக்கப்பன் பீடிக் கடை (பெட்டிக்கடை) பக்கத்தால சினிமா தட்டியை 2 கம்பத்தில சேர்த்து ஒசரமா கட்டியிருப்பாங்க. அதிலதான் பராசக்தி சிலைக்குப் பின்னால சிவாஜி ரத்தம் வடியற முகத்தோட ஆவேசமா நிக்கற ‘பராசக்தி’ படத்தோட போஸ்டரைப் பாத்தேன். அங்கதான் குஷ்டரோகி வேஷத்துல எம்.ஆர்.ராதா படத்தை பார்த்தேன். தலையில ‘ஸ்கார்ஃப்’ கட்டி இடுப்பு பெல்டுல பிச்சுவா குத்தி - ஒத்த விரலைக் காட்டி நிக்கிற மலைக்கள்ளன் - ‘எம்.ஜி.ஆர்’ போஸ்டரை பார்த்தேன். தூணோட சேர்த்து கையில விலங்கு மாட்டி இருக்கற ‘மனோகரா’ சிவாஜியைப் பார்த்தேன்.

சிவாஜி

வேற என்ன பண்ணமுடியும்? வயித்தெரிச்சல தீத்துக்க சித்த நேரம் போஸ்டரைப் பாத்துட்டு ஊட்டுக்குப் போகவேண்டியதுதான்.

சூலூர் சண்முகதேவி தியேட்டர். போன அத்தியாயத்திலயே சொல்லீட்டேன். அதுல சிங்கிள் புரொஜக்டர்தான். ஒரு ரீல் முடிஞ்சதும் ‘ஸ்லைடு’ போட்டுட்டு 5 நிமிஷத்தில அடுத்த ரீலை மாத்தி படத்தை ஓட்டுவாங்க.

கோயமுத்தூர்ல நேரடி ரிலீஸ் - சிங்காநல்லூர் அம்பாள் அரங்கில 2வது ரிலீஸ். சூலூர் தியேட்டர்ல 3-வது ரிலீஸ். எல்லா தியேட்டர்லயும் ஓடி தேஞ்சு சூலூர் வரும் போது பிலிம் இடையில ‘கட்’ ஆயிடும். திரும்ப ஒட்டித்தான் ஓட்டணும்.

வீணாப்போன சில ‘பிரேம்’களை புரொஜக்டர் ரூம்லருந்து வெளியே தூக்கி வீசிடுவாங்க. ஸ்கூல் விட்டதும் நாங்க தியேட்டருக்கு கிழபுறம் இருக்கற காம்பவுண்டு ஓரத்தில ஏதாவது, ‘பிட் பிலிம்’ கிடைக்குதான்னு வேட்டை நாய் மாதிரி போய் தேடுவோம்.

ஒருத்தனுக்கு ‘கணவனே கண் கண்டதெய்வம்’ -ஜெமினி அஞ்சலி இருக்கிற பிரேம் கிடைச்சது.

இன்னொருத்தனுக்கு கலைவாணர் கோமாளி வேஷம் போட்டு சிரிக்கிற படம் கிடைச்சது.

எனக்கு மனோகரா ‘கிளைமாக்ஸ்’ சங்கிலில சிவாஜி கட்டியிருக்க, முழியாங்கண்ணை பெரிசாக்கி வசனம் பேசறதில ஒரு பிட்டு கிடைச்சது. ஒருத்தனுக்கு ‘மந்திரிகுமாரி’ -எம்.ஜி.ஆர் பிக்சர் கிடைச்சது.

எம்.ஜி.ஆர்

இந்த பிச்சரெல்லாம் வச்சு, நம்மூட்ல சினிமா காட்டினா என்னான்னு தோணுச்சு. ‘கரண்ட்’ வெளிச்சத்துக்கு பதிலா முகம் பாக்கற கண்ணாடில சூரிய ஒளிய வாங்கி, கதவு ஓட்டை மேல அடிக்கலாம்.

திண்டுக்கல் பூட்டோட, சாவி துவாரம் கொஞ்சம் பெரிசா இருக்கும். 2 கண்ணாடில, சூரிய ஒளிய வாங்கி, சாவி துவாரத்துல அடிச்சோம்.

ஊட்டுக்குள்ளே ‘ப்யூஸ்’ போன பல்ப், மேல் பக்க ‘மெட்டல்’ மூடிய நிதானமா கழட்டி எடுத்துட்டு, குடம் மாதிரி இருக்கிற கண்ணாடிக்குள்ளே தண்ணிய ரொப்பினோம். பூதக் கண்ணாடிக்குப் பதிலா தண்ணி ஊத்தின பல்பு. பொம்மைய அது பெரிசா காட்டும்.

இப்ப நாங்க தியேட்டர் பக்கமிருந்து கொண்டாந்த பிலிம் பிட்டை, பல்பு பக்கத்துல தலைகீழா புடிச்சா சிவாஜி எதுத்தாப்ல இருக்கிற செவுத்துல 4 அடிக்கு 4 அடி சைசுல பெரிசா தெரியராரு.

‘அய்யோ...அய்யோ..!’ தாமஸ் ஆல்வா எடிசன், எங்க அளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பாரா, தெரியாது. லீவு நாளில, சினிமா தியேட்டர் பக்கம் போயி பிட் பிலிம் பொறுக்கறது, வீட்டில் சினிமா காட்டறது... அப்படி கொஞ்ச நாள் ஓடிச்சு.

12, 13 வயசு. எதையும் செஞ்சு பாக்கணும்ன்னு மனசு துறு, துறுன்னு அலையற பருவம். ஊருக்குள்ள பீடி புடிக்காத ஆம்பிளைகளை தேடணும். நாம பீடி புடிச்சுப் பாத்தா என்னன்னு தோணுச்சு. தங்கமுத்து, ‘எங்கத்தை, ராயக்கா கடையிலருந்து ஒரு பீடி கட்டும், தீப்பட்டியும் எடுத்தாரேன்’னான்.

தங்கமுத்து- அத்தை ராயக்கா கடையில் பீடி எடுத்து வந்தவர்

ஈஸ்வரன், ‘நான் அஸ்கா சக்கரை கொண்டாரேன். பீடி நாத்தம் போக ஒரு ஸ்பூன் வாயில போட்டுக்கலாம்!’னான். எங்க ஊட்டுல சாமி ரூம் இருந்திச்சு. ராத்திரி பசங்கல்லாம் ‘ஒண்ணா படிக்கறோம்!’னு அம்மாகிட்ட சொல்லிட்டு கதவைச் சாத்திட்டோம். ஒவ்வொருத்தனா பீடிய பத்த வச்சு இழுத்தோம். ‘பொறை’ போயி இருமல் ஜாஸ்தி வந்திச்சு. அதை மறைக்கறதுக்கு ஒருத்தனை சத்தம் போட்டு படிக்கச் சொன்னோம்.

‘‘அசோக மன்னன் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தான். சாலையோரம் மரங்களை நட்டான். குளங்களை வெட்டினான்!’ன்னு ஒருத்த சத்தம் போட்டு வெளில கட்டில்ல படுத்திருக்கற எங்கம்முச்சிக்கு கேக்கற மாதிரி படிச்சான்.

பீடிக் கசப்பு, அடிக்கடி வாயில எச்சில் ஊறுச்சு. அதை முழுங்க முடியாது; அப்பப்ப கதவைத் திறந்துட்டு வந்து, வாசல்ல எச்ச துப்பிட்டுப் போனோம்.

நாலுநாள் கதை இப்படி போச்சு. ஒரு நாள் சாமி ஊட்டு, கதவு மேல ஏறி, அட்டாலில தாம்பு கயிறு எடுத்துட்டு, எங்கம்மா கீழே இறங்குறப்போ, மேப்படியிலிருந்த, 5, 6 கொரக்கட்டை பீடி (துண்டு பீடி) கயித்தில மாட்டி, கீழே விழுந்திடுச்சு.

அவ்வளவுதான். அத்தனை பசங்களுக்கும் ‘டோஸ்’. ‘இனிமே எவனையும் இந்த வீட்டு பக்கம் நான் பாக்க கூடாது. போங்கடா!’ன்னு தொரத்தி உட்டுட்டாங்க அம்மா.

சினிமா 1950-கள்ளே எல்லா ஜனங்களால ஏத்துக்கொள்ள படலே. பீடி, சிகரெட்டு, தண்ணி மாதிரி ஆளை கெடுக்கற விஷயமாத்தான் எங்கம்மாவும் நெனைச்சாங்க.

சினிமாவுல நல்ல விஷயமும் இருக்குது. ஒரேயடியா அதை குத்தஞ் சொல்லக்கூடாதுன்னு எங்கம்மா வாயிலிருந்தே வார்த்தையை வரவழைக்கணும்னு ஒரு ஐடியா பண்ணினேன். டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கிராமியப் படங்கள், குடும்ப சென்டிமென்ட் படங்கள் எடுக்கறதுல கில்லாடி.

கே.எஸ். கோபால கிருஷ்ணன்

‘கற்பகம்’- படம் சூலூருக்கு வந்திச்சு. நல்ல குடும்பக் கதை படம்.

‘‘ஏம்மா நீ எப்பவாவது சினிமா பாத்திருக்கியா?’’

‘‘ஆமா! உங்கய்யன் ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனாரு. அது ஊமைப் படம்!’’

அப்படின்னா அது 1931-க்கு முன்னாடி.

‘‘சரி. இப்பல்லாம் சினிமா பேசும். ‘கற்பகம்’னு ஒரு படம். சூலூர்ல ஓடுது. பாக்கலாமா?’’

‘‘சரி சரி பாத்தாப் போகுது!’’

அம்மா ரெடி.

மூஞ்சியைக் கழுவி, பொடவைய மாத்தி - மத்தியான சோறு முடிச்சிட்டு சைக்கிள்ல டபுள்ஸ் போட்டு தியேட்டருக்கு கூட்டிட்டுப் போனேன். 2 1/2 மணி ஆகுது. தியேட்டர் ‘விரோச்சு’ன்னு இருக்குது. காக்கா, குருவியைக் காணோம். கிட்ட போனேன். மெயின் கேட்'ல ஒரு தட்டி. ‘பாரதப் பிரதமர் நேருஜி இறந்ததை முன்னிட்டு இன்று தியேட்டர் விடுமுறை!’.

கற்பகம்-கே.ஆர். விஜயா

‘‘அட. ஏன் நிக்கறே? போயி டிக்கெட்டு வாங்கிட்டு வா!’’

‘‘எங்க வாங்குறது, நேரு செத்துப் போயிட்டாராம். அதான் மூடிட்டாங்க...!’’

‘‘விடியா மூஞ்சி படம் பாக்க வந்தா தியேட்டரையும் மூடுவாங்க; குண்டு கூட போடுவாங்க. வா, போலாம்!’’

சைக்கிளில வீடு வந்தோம். ராத்திரி சோறு எறங்கலே. அம்மாவை எப்படியாவது நாளைக்கு கூட்டிட்டுப் போயிடணும்.

‘‘எனக்காக இந்த ஒரு தடவை வா. சரியில்லேன்னா இனி எப்பவுமே நீ சினிமா பக்கம் போக வேண்டாம்!’’

மறுநாள் போய் - டிக்கெட் வாங்கி அம்மா கையில குடுத்து பெஞ்ச்ல உட்கார வச்சுட்டு, ‘‘படம் பார்த்திட்டு, உங்க சின்னம்மிணி (தங்கை) ராமாத்தா ஊட்ல, சூலூர்லயே படுத்துக்கோ, கார்த்தால வந்து கூட்டீட்டுப் போறேன்!’’

ஊர்த் திரும்பும் வழியில் அடைமழை. ஆத்தில தண்ணி தொடை அளவுக்கு. தலைக்கு மேல சைக்கிளை தூக்கி ஆத்தை தாண்டி ஊட்டுக்கு போனேன். மழையா கொட்டு கொட்டுனு கொட்டுது. வேற வழியில்ல. தாவாரத்திலருந்து மழைச்சாரல் தெறிச்சு பாதி திண்ணை ஓதமடிச்சிருந்தது. அந்த பாதித் திண்ணையில பாயை போட்டு துப்புட்டுப் போத்தி படுத்தா குளிரு தாங்க முடியல. வேற வழியில்லாம சாக்குப் பைய எடுத்து -அந்த சாக்குப்பைக்குள்ளே காலை இடுப்பு வரைக்கும் உட்டு அப்பிடியே படுத்துத் தூங்கினேன். விடியக்காலை சூலூர் போயி - சின்னம்மா ஊட்ல இருந்த அம்மாவ பார்த்தேன். நான் பேசறதுக்குள்ளேயே அவங்க ஆரம்பிச்சுட்டாங்க.

‘‘நான் அப்பவே சொன்னே. இந்த சினிமா கினிமா எல்லாம் நமக்கு செரிப்பட்டு வராதுன்னு. கேக்கறியா நீயி?’’

‘‘ என்னாச்சு? டிக்கெட் வாங்கி தியேட்டர்க்குள்ள உட்கார வச்சுட்டுதானே நான் வந்தேன்?’’

அம்மா

‘‘ஆமா நீ உக்கார வச்சுட்டு போயிட்டே. இடைவேளைக்கப்புறம் கே.ஆர்.விசயாளை மாடு முட்டுனப்போ போன கரண்ட்டு ‘இதா வருது, அதா வருது!’ன்னாங்க. விடிஞ்சு வாசல்ல சாணி கூட தொளிச்சுட்டாங்க. கரண்ட் வரவே இல்லை!’’

என்னால இந்த ஏமாற்றத்த தாங்க முடியல. அன்னிக்கு சாயங்காலம் கால்ல விழுந்து, ‘இனிமே எந்த சினிமாவையும் நீ பாருன்னு நான் கேக்கவே மாட்டேன். இதை மட்டும் முழுசா பாத்துடுன்னு கூட்டிட்டு போனேன்.

அம்மா ‘உம்’முன்னு இருந்தாங்க. ஒரு வார்த்தை பேசல. தியேட்டர்ல உட்கார வச்சிட்டு - பயந்திட்டே ஊருக்கு வந்தேன்.

மறுநாள் சூலூர் போனேன்.

‘‘ஏங்கண்ணு! சினிமா நல்லாத்தானே இருக்கு. அப்புறம் ஏன் சனங்க சினிமா பார்த்தா புள்ளைங்க கெட்டு போயிடும்னு சொல்றாங்க?’’ன்னாங்க.

அடாடா! அதைக் கேட்டு நான் எப்படி சந்தோஷப்பட்டேன்னு வார்த்தையில சொல்ல முடியாது. பிற்காலத்துல சினிமாவுல நான் நடிக்க போறேன்னதும் அம்மா மறுப்பு ஏதும் சொல்லாதற்கு ‘கற்பகம்’ - படமும் ஒரு காரணம்.

சுவைக்கலாம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x