

காவியக் காதல் திரைப்படங்களின் வரிசையில் மறக்க முடியாத படம் ‘அம்பிகாபதி’. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகனுக்கும் மன்னனின் மகள் அமராவதிக்குமான காதலைச் சொல்லும் படம். இந்தத் திரைப்படத்தில் 20-க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். ஆனாலும் டி.எம்.சௌந்தரராஜனும் பானுமதியும் பாடும் ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே கண்ணே…’ பாடல் ஒரு காவியத் தன்மையோடு ஒலிக்கும்.
இசை மேதை ஜி.ராமனாதன் இந்தப் பாடலில் ராகமாலிகை தாளமாலிகையைப் பயன்படுத்தி இசையமைத்திருப்பார். இந்தப் படத்தைப் பற்றியோ பாடியவர்களைப் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லாத இந்தத் தலைமுறைக்கு இந்தப் பாட்டின் பெருமைகளை எடுத்துக்கூறி, அவர்களைப் பாடவைத்து வெளியிட்டிருக்கிறார் சுபஸ்ரீ தணிகாசலம். கிருதி பட், அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த ஹூஸ்டன் நகரிலிருந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ராகவ் கிருஷ்ணா பிரான்ஸின் பாரீஸ் நகரத்திலிருந்து பாடியிருக்கிறார்.
கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கும் இந்தப் பாடலின் வரிகளில் வெளிப்படும் பலவிதமான உணர்வுகளையும் இளம் பாடகர்களான கிருதியும் ராகவ்வும் அற்புதமாகத் தங்கள் குரலில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இளம் தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு ‘குவாரன்டைன் ஃபிரம் ரியாலிட்டி’ எனும் பெயரில் தன் ‘ராகமாலிகா’ யூடியூப் தொலைக்காட்சியின் மூலம் இத்தகைய அரிய வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கிறார் சுபஸ்ரீ. நாம் அதிகம் கேட்டிராத ஆனால், இசையின் மேன்மை அடங்கியிருக்கும் எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களிலிருந்து தினம் ஒரு பாடலை பிரபலமான இசைக் கலைஞர்கள், கர்னாடக இசைக் கலைஞர்கள், மெல்லிசை பாடும் இளம் கலைஞர்கள் ஆகியோரைப் பாடவைத்து வெளியிடுகின்றனர். இவற்றைக் கேட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மன நிம்மதி அடைகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து சுபஸ்ரீ நம்மிடம் பேசியதிலிருந்து…
“இந்த ஊரடங்கு காலத்தில் இருக்கும் இடத்தை விட்டு யாரும் நகராமல் இந்த நிகழ்ச்சியைச் செய்வதுதான் இதன் சிறப்பு. பாடகர்கள் அவர்கள் பாடிய பாடலின் ஆடியோவை மட்டும் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவார்கள். வாத்தியக் கலைஞர்கள் அந்தப் பாடலில் இடம்பெறும் இசையை வாத்தியத்தில் வாசித்து வீடியோவோடு அனுப்புவார்கள்.
பெரும்பாலும் நான் தேர்ந்தெடுக்கும் பாடல்கள், இப்போது பாடும் பாடகர்கள் பிறப்பதற்கு முன்பாக வந்தவை. அதனால், பெரும்பாலானோருக்கு அந்தப் பாடலின் சூழ்நிலை, அதைப் பாடிய கலைஞர்கள், அந்தப் பாட்டில் இருக்கும் பல சிறப்புகளையும் விளக்கிப் பாடவைப்பேன். இப்படிப் பாடகரிடமிருந்து நான் எதிர்பார்க்கும் திறனோடு பாடல் வெளிப்பட்டவுடன், அதை இசையோடு சேர்த்து இறுதி வடிவமாக அதை மீண்டும் அவர்களுக்கு அனுப்புவேன். அதற்குத் தகுந்தபடி பாடகர்கள் பாடும் வீடியோவை அவர்கள் எனக்கு அனுப்ப வேண்டும். எல்லாவற்றையும் மிக்ஸிங்கில் இணைப்போம்.
தொடக்கத்தில் எங்களின் தயாரிப்பில் மட்டுமே இதைச் செய்தோம். 104 நாட்களுக்குப் பின்தான் ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் இந்த நிகழ்ச்சி நடந்துவருகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவில் குறைந்தபட்சம் 200 பாடல்களை இந்த முறையில் இளம் கலைஞர்களைக் கொண்டு பாடவைத்து வெளியிட வேண்டும் என்னும் முனைப்பில் இருக்கிறேன்” என்றார் சுபஸ்ரீ.
‘மாசில்லா நிலவே நம்’ பாடலைக் காண: