

கரோனா பரவும் வேகம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நம்முடைய நாட்டில்தான் அதிகம். நம்முடைய நாட்டை மட்டும் கணக்கில் கொண்டால், மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, நம்முடைய மாநிலமே அதிகப் பாதிப்புக்கு உள்ளானதாக உள்ளது. முனைப்பின் போதாமை, தெளிவற்ற திட்டமிடல், செயலாக்கக் குறைபாடுகள், வெளிப்படையின்மை எனப் பல காரணங்கள் பட்டியலிடப்பட்டாலும், நிச்சயமாக இவை மட்டுமே காரணங்கள் அல்ல. நமது பொறுப்பின்மையே இத்தகைய தீவிரப் பாதிப்புக்கான பிரதானக் காரணி. இந்தப் பொறுப்பின்மையுடன் நம்முடைய அதீத அச்சத்தையும் அலட்சியத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.
நான்கு முனைத் தாக்குதல்
கரோனாவால் ஆபத்து என்று தெரிந்தவுடன், பெரும்பாலான மக்கள், அடைகாக்கும் கோழியைப் போன்று வீட்டினுள் முடங்கிவிட்டார்கள். ஆனால், எந்த அரசை இன்று நாம் குறை கூறுகிறோமோ, அந்த அரசின் அதிகாரிகளும், மருத்துவர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும், களப்பணியாளர்களும், காவல்துறையினரும், ஆபத்து என்று தெரிந்தும் தங்களுடைய பாதுகாப்பையும் தங்களுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பையும் தெரிந்தே புறந்தள்ளி, தங்கள் பணிகளில் தீவிரம் காட்டினர். கரோனா, குடும்பத்தினரின் அச்சம், பொதுமக்களின் ஒத்துழையாமை, அரசின் அழுத்தம் என நான்கு முனைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
கோபத்தின் வடிகாலா அரசு ஊழியர்கள்?
கொல்கத்தாவில் கரோனா பரிசோதனைக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளாயினர். பெருந்தொற்று கடந்துநரால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள மீனவக் கிராமத்துக்கு ஆய்வுசெய்ய அரசுக் களப்பணியாளர்கள் சென்றபோது, அவர்களுடைய வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனத்தின் கண்ணாடியை இறக்குமாறு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். கண்ணாடியை இறக்கியவுடன், பொதுமக்கள் அந்த வாகனத்துக்குள் தலையை நுழைத்து இருமியுள்ளனர். வட இந்தியாவில் பல மருத்துவர்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில், கரோனாவால் தன்னுடைய தாயார் உயிர் இழந்துவிட்டார் என்பதற்காக, சிகிச்சையளித்த மருத்துவரின் நெஞ்சிலும் கழுத்திலும் கையிலும் இறந்தவரின் மகன் கத்தியால் குத்தி உள்ளார்.
உடல்ரீதியிலான தாக்குதல் ஒருவகை என்றால், அவர்கள் மீதான மனரீதியிலான தாக்குதல் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சிகிச்சையளிக்கும் அளிக்கும் மருத்துவர்கள், தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில், சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சென்னையில் கரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்குக் கூட அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய பயத்துக்கும் இயலாமைக்கும் அரசின் மீதான கோபத்துக்கும் அரசு ஊழியர்களை வடிகாலாகப் பயன்படுத்தும் போக்கு மக்களிடம் அதிகரித்துவருகிறது.
உணர்வுரீதியிலான தாக்குதல்
கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கணக்கெடுப்பு நடத்தவும், பரவலைக் கண்காணிக்கவும், நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் நம்முடைய வீடுகளுக்கு ஊழியர்களை அரசு அனுப்புகிறது. வீடு தேடி வரும் அரசு ஊழியர்களுக்கு அப்போது கிடைக்கும் அவமரியாதைகளும் ஏளனப் பேச்சுகளும் வசவுகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
பரிசோதனை முடிவு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விவரங்களைச் சேகரிப்பது அரசு ஊழியர்களின் மற்றொரு தலையாய பணி. கரோனா பரிசோதனை முடிவுகள் உடனடியாகக் கிடைப்பது இல்லை. பாதிப்புக்கு உள்ளானோர் அறிகுறிகளை இலகுவாக எடுத்துக்கொள்வதால், பரிசோதனைகளையும் அவர்கள் உடனடியாக எடுப்பது இல்லை. இதனால், பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே சிலர் மரணித்துவிடுகின்றனர். இவர்களுடைய குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச நேரும்போது, அந்தக் குடும்பத்தினரின் ஒட்டுமொத்தக் கோபமும், தொடர்புகொண்ட ஊழியரின் மீது பாய்கிறது. கோபம் மட்டுமல்ல, வருத்தமும் இயலாமையும்கூட இவர்களிடமே கொட்டப்படுகிறது.
அலட்சியம் வேண்டாம்
சமூக விலக்கு, ஏளனப் பார்வை, தனிமை பயம் போன்ற காரணங்களால் பலர் தங்களுக்கு ஏற்படும் கரோனா அறிகுறிகளை மறைத்துவிடுகின்றனர். கரோனாவால் நேரும் பெரும்பாலான இறப்புகளுக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது. என்னுடைய குடியிருப்பில் உள்ள 50 வயதான பெண்மணி, பாதிப்பு முற்றி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட பின்னரே, தனக்கு கரோனா இருப்பதை வெளியில் தெரிவித்தார். ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு முன்னரே அவர் உயிரை இழக்க நேரிட்டது. 47 வயதான இன்னொரு நபர், கரோனாவுக்குப் பயந்து சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றார்.
சொந்த ஊரில் அவருக்குத் தொற்று ஏற்பட்டது. காய்ச்சலுக்கும் சளிக்கும் மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். கரோனா பரிசோதனை செய்ய அவருக்கு மனமில்லை. வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிறுநீர் கறுப்பு நிறத்தில் வெளியேறத் தொடங்கியது. இறுதியில் மூச்சுத் திணறல் அதிகரித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கரோனாவைப் பொறுத்தவரை, அது வயதானவர்களை மட்டுமே தீவிரமாகத் தாக்கும் என்றோ நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்களை மட்டும் தீவிரமாகத் தாக்கும் என்றோ ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது. எவ்வித நோயுமற்ற இளம் வயதினர்கூட கரோனாவினால் உயிரிழந்துள்ளனர். கரோனாவைப் பொறுத்தவரை காலம் பொன் போன்றது. அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால், பாதிப்பிலிருந்து விரைந்து மீள்வதற்கான வாய்ப்பு அதிகம்.
கரிசனமே மனிதச் செயல்
பாதிக்கப்பட்டோர் வெளியேற்றும் நீர்த் திவலைகள் மூலமே கரோனா பரவும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே அதீத பயம் தேவையில்லை. இருப்பினும், பல இடங்களில், பாதிக்கப்பட்டோரின் வீடுகளின் அருகில் செல்லக்கூடப் பலர் தயங்குகின்றனர். இன்னும் சிலர் அந்தத் தெருக்களை மட்டுமின்றி, அந்தத் தெருக்களில் வசிப்போரையும் புறக்கணிக்கின்றனர். என்னுடைய நண்பர் ஒருவர் கொளத்தூரிலிருக்கும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். அந்தக் குடியிருப்பில் வசித்த ஒரு பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். அவர்களுடைய மூன்று வயதுக் குழந்தையைக் கவனித்துக்கொள்ள அருகில் வசித்த யாரும் முன் வரவில்லை.
வேறு வழியின்றி, உறவினர் வரும்வரை, ஆம்புலன்ஸில் இருந்த சுகாதாரப் பணியாளர் வீட்டின் வெளியே நின்றார். குழந்தை வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தது. வந்த உறவினரும் அந்தக் குழந்தையை அழைத்துச் செல்லத் தயக்கம் காட்டினார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின்னரே அவர் அந்தக் குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். கரோனாவின் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நமது குடும்பத்தினருக்கும் ஏற்படலாம். எனவே, பாதிக்கப்பட்டோரையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் வெறுத்து ஒதுக்காமல், ஏளனத்துக்கோ விலக்குக்கோ உள்ளாக்காமல் கரிசனத்தோடு நடப்பதே அடிப்படை மனிதநேயம்.
நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்
கரோனா ஓர் ஆபத்தான பெருந்தொற்று. அதற்கு மருந்து இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்து, அந்த மருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் இன்னும் ஓராண்டு ஆகும் என்பதே நிதர்சனம். இந்தச் சூழ்நிலையில், நமது பாதுகாப்பு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பாதுகாப்பும் நம்முடைய பொறுப்புணர்வைச் சார்ந்தே உள்ளது. முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அறிந்த பின்னரும், அதை அணியாமல் செல்வது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்த பின்னரும், பலர் முகக்கவசம் இன்றி சாலைகளில் பயணிப்பதைக் காணமுடிகிறது. எவ்விதக் குற்றவுணர்வும் இன்றிப் பலர் கண்ட இடங்களில் இன்றும் சாலைகளில் துப்புகின்றர். அரசையும் அரசு ஊழியர்களையும் குறை சொல்லும்முன், நம்மையே நாம் நேர்மையுடன் கேள்விகள் கேட்டுக்கொள்வது அவசியம்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in