Published : 01 Aug 2020 05:32 PM
Last Updated : 01 Aug 2020 05:32 PM

கரோனாவும்... வேலை வாய்ப்பு  இழப்பும்!

வளரும் நாடுகளில், மக்கள் தொகையும் கல்வியும் அதிகமாகும்போது வேலைவாய்ப்பின்மையும் அதிகமாகும். அறிவியல் வளர்ச்சியால் கருவிகளின் - எந்திரங்களின் - ஆளுமையும் பயன்பாடும் அதிகமாகும் போது, மனித உழைப்பு தேவைப்படாததால் வேலைவாய்ப்பு குறைந்துதான் போகும்.

ஆனால், தொற்றுநோயால் ஊரடங்கு போடப்பட்டதால் வேலைவாய்ப்புகள் குறைந்துபோய்விட்டன, அத்துடன் இருந்த வேலைகளும் பறிபோய்விட்டன. கடந்த 2019 -20 ஆம் ஆண்டில் 14 கோடி பேருடைய வேலையும் வாழ்வாதாரமும் இல்லாமல் ஆகின. சூலை 2020 வரை இந்தியாவில் ஏறத்தாழ 30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நோயாளிகள், முதியோர் இறப்பு ஆகியவை இங்குக் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தனியாரின் கையில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், கணினி நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள் பலரை வேலையை விட்டே அனுப்பிவிட்டன. அவை தேவையென்றால் குறைந்த ஊதியத்துக்கு குறைந்த அளவுக்குப் புதியவர்களை எதிர்காலத்தில் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் திட்டத்தில் உள்ளன. அரசே கூட நிலைப்படுத்தப்படாத தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை என்பதோடு, வேலையும் தேவையில்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது. விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் கூட தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. பேருந்து விமானம் தனியாரும் ஓட்டுவதுபோல, தொடர்வண்டிகள் சிலவும் தனியாரிடம் உரிமை வழங்கப்படுகின்றன. இதனால் தனியார் வேலையாட்களைக் குறைத்து அதிக வேலை வாங்கத் தொடங்குவர் என்பதால் வேலைவாய்ப்பு மேலும் குறையும்.

வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்னும் கணினித் துறையில் பாதி ஆட்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு, அவ்வேலையும் மற்றவர் தலையில் சுமத்தி ஒன்றரை மனித உழைப்பை ஒரு மனிதனிடம் சுரண்டி வருகின்றனர். இதுவே பிற துறைகளிலும் பரவுகிறபோதும் கொத்தடிமை முறை போல் செயலாற்றுகிற கொடியவர்கள் அடக்குமுறையிலும் மூன்று மனித உழைப்பைச் சுரண்டத் தொடங்குவர். இதனாலும் வேலைவாய்ப்பின்மை மேலும் மிகும்.

தனியார் பள்ளிகள் பலரை வேலையைவிட்டு நீக்கிவிட்டு, இணையவழி வகுப்புகளில், இத்தகைய சுரண்டல் முறையில் ஆசிரியர்கள் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டன. ஆனால் பெற்றோர்களிடம் முன்னதாகவே அதிகப் பணத்தைக் கறந்துவிட்டன. தொற்றுநோய்க்காலத்தில் அதிக மருத்துவம் அளிக்க வேண்டிய தனியார் மருத்துவ மனைகளும் மருத்துவர் செவிலியர் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதுடன், பல மூடப்பட்டுவிட்டதால், அறவே மருத்துவர், செவிலியர் ஊழியர் வேலைவாய்ப்புகளும் பறிபோய்விட்டன. போதாக்குறைக்கு அரசும் மருத்துவர், செவிலியர் ஊழியர் வேலைவாய்ப்புகளுக்குத் தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கேட்டுள்ளது.

விமானத்துறை, தொலைத்தொடர்புத் துறை ஆகிய இரண்டும் பாதிக்கப்படும். அதனால் பிற அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் அறவே இல்லாமல் போய்விடும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். உண்மையில் சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகள் முன்பே விமானத் துறையும் தொலைத்தொடர்புத் துறையும் அரசு அமைப்பிலிருந்து நகர்ந்து போய்த் தனியார்மயமாகி விட்டன. காப்பீட்டு (இன்சூரன்ஸ்) துறையும் அரசின் கையிலிருந்து நழுவிவிட்டது. தனியார் மயம் என்பது பன்னாட்டுமயம் அல்லது அன்னியர் (அயல்நாட்டார்) மயம் என்பதன் முன்னறிகுறியே.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம் ஆகியன இத்தகைய நலிவுக்கு உள்ளாகி வருகின்றன. ஊடகத்துறையில் பல இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைத்துறை கூட அளவில் சுருங்கிப் பலரை வேலையைவிட்டு நீக்கி விட்டன.

ஒரு சிறு கணக்கு:

ஒரு பகுதியில்.... ஊரில்.... புறநகர்ப் பகுதியில் ... பத்து கீரைக்காரிகள் இல்லாமல் போகிறார்கள் என நினைக்கலாம். கீரையை விற்கத் தொடங்கும் 5 சிறுகடைகள், 2 பேரங்காடிகள், ஒரு முதலாளியின் மொத்த விற்பனைக் கடை இவற்றின் பின்னாலே...... 10 சிறு கடைகள், 5 பேரங்காடிகள், 3 மொத்த விற்பனையாளர்கள் கடை மூடி/ வருவாய் இழந்து மறைந்து கிடக்கிறார்கள். அங்கு வேலை பார்த்த ஆயிரம் பேர் வேலையும் வருவாயும் வாழ்வாதாரமும் இழந்துவிட்டார்கள் என்பதே உண்மை.

இக்கணக்கை..... நாட்டுக்கே நினைத்துப் பாருங்கள்.

கரோனாவால் ஏற்பட்டிருக்கும் மேலும் ஏற்படப்போகும் வேலை வாய்ப்பு இழப்பை வாழ்வாதார இழப்பை எப்படிச் சரி செய்ய .வேண்டும் என்பதைப் பொருளியல் வல்லுநர்களும் அரசியலாளர்களும் சான்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது.

- முனைவர் பா. இறையரசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x