Published : 01 Aug 2020 04:40 PM
Last Updated : 01 Aug 2020 04:40 PM

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை: உதவிக்கரம் நீட்டிய முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்

மதுரை

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை வைத்து முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

மதுரை அருகே அலங்காநல்லூரில் கரோனாவால் அன்றாட கூலி வேலைக்குச் செல்ல முடியாமல் கணவரால் கைவிடப்பட்ட மூளை வளர்ச்சி குன்றிய மகனுடன் வாழ்வாதாரத்திற்கு போராடிய ஏழை பெண்ணிற்கு அலங்காநல்லூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்து உதவியுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் நடுவது, படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைப்பது, வாழ்வாதாரத்திற்கு போராடும் ஏழைகளுக்கு உதவுவது போன்ற சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாணவர்கள் வேலைநிமித்தமாக வெவ்வெறு ஊர்களில் பணிபுரிந்தாலும் அவர்கள் வாட்ஸ் அப் குரூப் மூலம் ஒருங்கிணைந்து இந்த சேவையை செய்து வருகின்றனர்.

இந்த கரோனா ஊரடங்கில் இவர்கள், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினர், அரசு ஊழியர்களுக்கு பசுமை முகக்கவசம் வழங்கி கரோனா விழிப்புணர்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், ஊரடங்கால் வேலையிழந்த பல ஏழை, எளிய குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.

அலங்காநல்லூரில் கணவரால் கைவிடப்பட்ட 11 வயது மூளைவளர்ச்சியில்லாத மகனுடன் வசித்து வரும் பாக்கிய லட்சுமி( 42) என்பவர், கரோனா ஊரடங்கால் அன்றாட கூலிக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தார். வாய் பேச முடியாத, கைகால் செயல்பட முடியாத மனவளர்ச்சி குன்றிய மகனைப் பராமரிக்கவும் முடியாமல் மிகுந்த சிரமப்பட்டார்.

இந்தத் தகவல் ஆட்சியர் டிஜி.வினய்க்கு சென்றது. அவர் ரெட்கிராஸ் மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு அந்தப் பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவ அறிவுறுத்தினார்.

இதையடுத்து, இந்த பெண்ணிற்கு உதவ அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் முன்வந்தனர். அவர்கள், முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் தலைமையில் ஒருங்கிணைந்து இந்த பெண்ணிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு பெட்டிக்கடை செய்து கொடுத்தனர்.

ஆட்சியர், அந்தப் பெண் பெட்டிக்கடை வைக்க அலங்காநல்லூர் அரசு மருத்துவமனை நாடக மேடை அருகே இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடத்தில் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்த மாணவர்கள், அந்த பெட்டியில் விற்பனைக்கு தேவையான பொருட்களை ரூ.5 ஆயிரத்திற்கு வாங்கிக் கொடுத்தனர்.

முன்னாள் மாணவர்கள் உதவியால் தற்போது அந்த பெண் தன்னுடைய சுயசார்பால் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார்,

மதுரை மாவட்ட கிளை ரெட் கிராஸ் அமைப்பு நிர்வாகி ஜோஸ், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொன்குமார் ஆகியோர் அந்த பெண்ணிக்கு ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x