

கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் கைகொடுத்து வருவதும், குறிப்பிடத்தக்க பலன் அளித்து வருவதும் ஏற்கெனவே பதிவாகிவிட்ட ஒன்றுதான். இந்தப் பின்னணியில் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்தப் பிரிவில் சிகிச்சை பெற்ற 11 பேர், ஒரு வாரத்துக்குள்ளாகவே கரோனா நெகட்டிவ் நிலையை அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.
நிலாச்சோறும் மூலிகைக் கவசமும்
திருப்பத்தூர் மாவட்டம் அக்கிரகாரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் இந்தச் சிகிச்சை மையம் செயல்பட்டுவருகிறது. இந்தச் சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளர்களுக்கு முழுக்க முழுக்க சித்த மருந்துகளும் ஆரோக்கிய உணவும் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம் முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படத் தொடங்கிய இந்த மையத்தில், வியாழக்கிழமை வரை 35 பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். 11 பேர் குணமடைந்து திரும்பிவிட்ட நிலையில், 24 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களில் 5 பேர் துணைநோய் உள்ளவர்கள். இந்த மையத்தில் சிகிச்சை பெறுபவர்களில் 7 வயதுச் சிறுமி, 14 வயதுச் சிறுவன் ஆகியோரும் அடக்கம். அனைவரும் சித்த மருத்துவ சிகிச்சையைத் தேடிவந்தவர்கள்.
இந்த மையத்தில் இருப்பவர்களுக்கு உடலின் தன்மைக்கேற்ப கபசுரக் குடிநீர், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, அமுக்கரா சூரணம், பிரம்மானந்த பைரவம் போன்றவை மருந்தாக வழங்கப்படுகின்றன. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு ஆவாரைக் குடிநீர் வழங்கப்படுகிறது. நோயாளர்கள் தெரிவிக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப மற்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அருந்துவதற்கு வெந்நீர், ஆவி பிடிப்பதற்கு நொச்சி-தைல இலை, மூலிகை முகக்கவசம் போன்றவை கூடுதலாகத் தரப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் நோயாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குத் திட்டவட்டமான அட்டவணை இடப்பட்டு பின்பற்றப்படுகிறது. காலையில் யோகாசனப் பயிற்சி, நடைப்பயிற்சி, இரவில் நிலாச்சோறு, குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல் என இங்கு வருபவர்கள் உற்சாகமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கவனத்துடன் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டுள்ளன.
ஆரோக்கிய உணவு
இந்த மையத்தின் சிறப்பே ஆரோக்கியமான உணவுதான். வழக்கமான உணவு வகைகளுடன் நாட்டு கோழிக்கறி, கீரை, கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம், கம்பு தோசை, கேழ்வரகு அடை போன்ற ஆரோக்கிய உணவு பரிமாறப்படுகிறது. அத்துடன் காலை, மாலை என இரு வேளை ஆரோக்கியச் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. அதில் பாசிப்பருப்பு உருண்டை, தூதுவளை, முடக்கறுத்தான், கரிசலாங்கண்ணி, ஆட்டுக்கால் போன்ற சூப் வகைகள் தரப்படுகின்றன. அனைத்து உணவு வகைகளும் மண்பானையில் சமைக்கப்படுகின்றன.
கரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவை அமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டியது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மாவும். இந்த மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக டாக்டர் வி. விக்ரம்குமார் செயல்பட்டுவருகிறார். அவருடன் மற்றொரு மருத்துவர், மருந்தாளுனர் உள்ளிட்டோர் இந்த மையத்தை நிர்வகித்துவருகிறார்கள்.
சித்த மருந்துகள், ஆரோக்கிய உணவு என சிறந்த கவனிப்பைப்பெறும் இங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களின் உடலில் வைரஸ் சுமை விரைவாகக் குறைந்துவிடுகிறது. இந்த அம்சமும், இங்கு சிகிச்சை பெற வந்து ஒரே வாரத்தில் வைரஸ் நெகட்டிவ் பெற்று வீடு திரும்பியவர்களும் சித்த சிகிச்சை மையத்தின் பெயரை வெளிச்சமிட்டுக் காட்டும் அம்சங்களாக மாறியுள்ளன.