Last Updated : 01 Sep, 2015 09:36 AM

 

Published : 01 Sep 2015 09:36 AM
Last Updated : 01 Sep 2015 09:36 AM

இன்று அன்று | 1947 செப்டம்பர் 1: இறுதிசெய்யப்பட்டது இந்தியாவின் நேரம்!

1947-க்கு முன்புவரை இந்தியப் பெருநகரங்களான சென்னை, கொல்கத்தா, மும்பை என ஒவ்வொன்றும் வெவ்வேறு நேரத்தைத்தான் காட்டின. அந்நகரங்களின் மணிக்கூண்டுகள் சொல்லிய நேரத்தைப் பின்பற்ற மறுத்த சாமானியர்கள் சூரியனையும், மணல் புட்டிகளையும் கொண்டு நேரத்தைத் தோராயமாகக் கணக்கிட்டுவந்தனர்.

4-ம் நூற்றாண்டிலேயே இந்திய நேரம் குறித்த குறிப்புகள் ‘சூரிய சித்தாந்தா’ எனும் புத்தகத்தில் காணப்படுகின்றன. இந்தப் புத்தகத்தின்படி பிரதம நண்பகலானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி நகரத்தின் ஊடாகவும் ஹரியாணாவில் உள்ள ரோடக் நகரத்தின் ஊடாகவும் பாய்கிறது. உஜ்ஜைன் நகரின் பிரதம நண்பகல் பகுதியில் சூரியன் உதித்ததும் அன்றைய நாள் நேரம் கணக்கிடப்பட்டது. இதைத் தவிரவும் 1733-லேயே சூரிய கடிகாரத்துடன் ஜந்தர் மந்தர் கட்டப்பட்டது.

1792-ல் கிழக்கிந்திய கம்பெனியின் மாலுமி மற்றும் வானியலாளரான மைக்கேல் டாப்பிங் ’மெட்ராஸ் ஆய்வுமைய’த்தை நிறுவினார். அதனை அடுத்து 1802-ல் ஜான் கோல்டிங்கம் எனும் பிரசித்தி பெற்ற ஆங்கிலேய வானியலாளர் கிரீன்விச் நேரத்தைக் காட்டிலும் 5 ½ மணி நேரம் கூடுதலாகச் சென்னையின் நேரத்தை முதன்முதலாக அமைத்தார். சூரியன் உதயமாகும்போதுதான் நாள் தொடங்கும் என்னும் மரபை மறுத்து நடுச் சாமத்தில் புதிய நாள் தொடங்குகிறது என்று இந்தப் புதிய நேர மண்டலம் சொன்னது.

இருந்தபோதும் வெகுஜன மக்கள் உள்ளூர் வழக்கப்படி தோராயமாகத்தான் நேரம் கணித்துவந்தார்கள். ஆனால் 1850-களில் இந்தியாவின் குறுக்கும் மறுக்குமாக ரயில்கள் ஓடத் தொடங்கியதும் பொதுவான நேரம் என்பது கட்டாயமானது.

1884-ல் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச மெரிடியன் கருத்தரங்கில் உலகம் முழுவதும் பின்பற்றவேண்டிய நேர மண்டலம் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை பீடங்களான மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை இந்தியாவின் மணித்துளிகளைத் தீர்மானித்தன. இதில் ஒரு வினோதம் என்னவென்றால், கொல்கத்தாவின் கடிகாரமோ கிரீன்விச் நேரத்தைக்காட்டிலும் ஐந்தரை மணி நேரம் 21 வினாடிகள் கூடுதலாக ஓடியது. மும்பை, சென்னை கடிகாரங்களும் வெவ்வேறு நேரத்தைக் காட்டின. 1880-களின் இறுதியில் சென்னையின் கடிகாரம் இந்திய ரயில் நேரமாக அறிவிக்கப்பட்டது.

1905-ல் அலகாபாத் அருகே உள்ள மிர்சாபூரில்தான் இந்தியத் தீர்க்க ரேகை ஓடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அங்குள்ள கோபுர மணிக்கூண்டில் கிரீன்விச் நேரத்தை விடவும் ஐந்தரை மணி நேரம் கூடுதலாக அமைக்கப்பட்டது. இருப்பினும் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெவ்வேறு நேரம் சொல்லிவந்தன. ஆகவே சென்னை ஆய்வுமையம் மிர்சாபூருக்கு இடம் மாற்றப்பட்டது. இறுதியாக இந்தியா சுதந்திரம் அடைந்ததும் 1947 செப்டம்பர் 1 முதல் மிர்சாபூர் மணிக்கூண்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நேரம் சொல்லத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x