Published : 30 Jul 2020 11:46 AM
Last Updated : 30 Jul 2020 11:46 AM

கோவிட் – 19 தாக்கத்தால் மனிதக் கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு: தேவை வலுவான மற்றும் விரிவான சட்டம்

மனிதக் கடத்தல் என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து (organised crime) செய்யப்படும் ஒரு குற்றம். சட்டவிரோதமாகச் செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகத்திற்குப்பின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய குற்றத்தொழிலாகக் கருதப்படுகிறது. இது நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவம் ஆகும். உலக அளவில், வருடந்தோறும் 1.2 மில்லியன் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இந்தியா மனிதக் கடத்தலுக்கான மூலம், பயண இடைநிலை மற்றும் சேருமிடம் (Source, Transit and Destination) என அனைத்து நிலைகளிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவீதக் கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், உலக அளவில், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமானத் தொழிலாக விளங்குகிறது. முன்னெப்போதையும் விட கடத்தப்படுபவர்கள் அல்லது அடிமைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரக்கூடியத் தகவல். 1850-இல் ஒரு அடிமையின் விலை தற்போதுள்ள மதிப்பில் சுமார் 40,000 அமெரிக்க டாலர்கள். ஆனால் தற்போது அடிமைகளின் விலை வெறும் 90 டாலர்கள் மட்டுமே. இது அவர்கள் எந்த அளவுக்கு ஊறுபடத்தக்களவில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

மனிதக் கடத்தல் – வரையறை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 21(1) மனிதக் கடத்தலை முற்றிலுமாக வெளிப்படையாகத் தடை செய்கிறது. கடத்தப்படுவதற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இருந்தபோதிலும், ஒரு விரிவான வரையறை கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தில் பிரிவு 370-இல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யார் ஒருவரையும் சுரண்டும் நோக்கத்திற்காக, ஆட்களைச் சேர்ப்பது (Recruit), அழைத்துச் செல்வது (Transport), அடைக்கலம் கொடுப்பது (harbour), இடம் மாற்றுவது (transfer) ஒரு நபர் அல்லது நபர்களைப் பெறுவது (Receive) போன்றவை, அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துதல் அல்லது, கட்டாயப்படுத்துதல் அல்லது வேறு ஏதேனும் வகையிலான வற்புறுத்தல்கள் அல்லது, கடத்தல் மூலம் அல்லது, மோசடி/ ஏமாற்றுதல் அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது பணம் அல்லது சலுகைகள் கொடுப்பது அல்லது பெறுவது உட்பட, பெறப்படும் நபரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபரைத் தூண்டுவது மூலமாகச் செய்யப்படும், ஆட்சேர்ப்பு, அழைத்துச் செல்லுதல், அடைக்கலம் கொடுத்தல், இடம் மாற்றுதல் அல்லது பெறுதல் ஆகியவை செய்யப்பட்டால் அது மனிதக் கடத்தல் குற்றமாகும். சுரண்டல் என்பதில் உடல்ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தும் எந்தச் செயல்பாடுகளும், எல்லா வடிவிலான பாலியல் சுரண்டல்கள், அடிமை முறை அல்லது அடிமைத்தனத்திற்கு சமமான நடைமுறைகள், அடிமைத்தனம் அல்லது கட்டாயமாக உறுப்புகளை அகற்றுதல் அனைத்தும் அடங்கும். கடத்தல் குற்றத்தை நிர்ணயிப்பதில் பாதிக்கப்பட்டவரின் சம்மதம் ஒரு பொருட்டாகாது / முக்கியமற்றது.

மனிதக் கடத்தலின் வடிவங்கள் / நோக்கங்கள்

பாலியல்ரீதியான சுரண்டல்/ வணிகரீதியான பாலியல் சுரண்டல், கட்டாய வேலை மற்றும் கொத்தடிமைத் தொழில், பிச்சை எடுத்தல், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, கட்டாயத் திருமணம், தத்து எடுத்தல், வாடகைத்தாய், பொழுதுபோக்கு - நடனக் குழுக்கள் / நடன விடுதிகள், மதமாற்ற / தொண்டு நிறுவன இல்லங்கள் நிரப்புதல், போதைப்பொருள் கடத்தல், விளையாட்டுகளில் பங்கேற்க – ஒட்டகப்பந்தயம் போன்ற பல நோக்கங்களுக்காக மனிதக் கடத்தல் இந்தியாவில் நடைபெறுகிறது.

கடத்தலுக்கு வழிவகுக்கும் காரணிகள்

மனிதக் கடத்தலுக்கான காரணிகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகின்றன. ஒரு காரணத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பொருளாதாரக் காரணிகள் - வறுமை, கடன், மாற்று வேலை வாய்ப்பு இல்லாதது, வேலையின்மை, அரசாங்கத்திடமிருந்து பொருளாதார உதவி/ பிழைப்பாதாரத் திட்டங்கள் கிடைக்காதது, சமூக நடைமுறைகள் மற்றும் கலாச்சார காரணிகள் - உயர் சாதியினரின் சுரண்டல்/ அடக்குமுறை / பாகுபாடு, ஆணாதிக்க மனச் சார்பு. கல்வி கற்க போதிய வசதிகள் இல்லாதது, பெண்களின் உரிமைக்கான மதிப்பின்மை, பெண் குழந்தைகள் அதிகம் படிக்காதது, வரதட்சணை நடைமுறைகள், குழந்தைத் திருமணம், பிரச்சினை உள்ள குடும்பங்கள் மற்றும் பேரிடர்கள் கடத்தலுக்கு முக்கியமான உந்தும் காரணிகளாக (Push factor) இருக்கின்றன.

உள்ளூருடன் ஒப்பிடுகையில் சிறந்த கூலி, நல்ல உணவு மற்றும் வாழும் சூழல், நகரத்தை நோக்கி ஈர்க்கப் படுதல், வேலை / திருமணத்திற்கு உத்தரவாதம், திறன் இல்லா உழைப்புக்கான தேவை, முகவர்களின் தவறான வாக்குறுதிகள், பாலியல் தொழிலுக்காக கடத்துபவர்கள் உருவாக்கும் சந்தை மற்றும் தேவை, பாலியல் சுற்றுலா, இணையத்தில் ஆபாச படங்களுக்கான தேவை மற்றும் கடத்தலைத் தடுக்க வலுவான சட்டங்களோ அமைப்புகளோ இல்லாதது போன்றவை ஈர்க்கும் காரணிகளாக (Pull Factor) இருக்கின்றன.

தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள்

இந்தியாவில், இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code - IPC), சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் (Special and Local Laws – SLL) கீழ்ப் பதியப்படும் புகார்களின் தரவுகளைச் சேகரித்து தொகுக்கும் பணியை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் செய்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் பிரிவு 370 இன் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் தரவுகளை ஆய்வு செய்யும்பொழுது, 2013 ஆம் ஆண்டை விட, 39 சதவீத வழக்குகள் கூடுதலாக 2014 ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டை விட கூடுதலாக 26 சதவீத வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில், கூடுதலாக 21 சதவீத வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. மாறாக 2017 ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டைவிட 65 சதவீதம் குறைவாகவும், 2018-ல் 14 சதவீதம் குறைவாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 2016 இல் 93 சதவீதமும், 2017 இல் 95 சதவீதமும், 2018 இல் 92 சதவீதமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளார்கள். இது, கடத்துபவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்டு செயல்படுவதைக் காட்டுகிறது.

மூன்றாண்டுகளின் சராசரியை ஆய்வு செய்தால், கடத்தப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 37 சதவீதம் பேர் பெண்கள். கடத்தலுக்கான காரணங்களை ஆய்வுசெய்தால், கட்டாய வேலைக்காக 31 சதவீதம் பேரும் பாலியல் /சுரண்டல் / ஆபாசப் படங்களுக்காக 32 சதவீதமும், கட்டாயத் திருமணம், வீட்டு வேலை பிச்சை எடுத்தல் சிறு குற்றங்களில் ஈடுபடுத்த, உடல் உறுப்பு மாற்றம் செய்ய போன்ற பல காரணங்களுக்காக 8 சதவீதமும் மற்ற காரணங்களுக்காக 29 சதவீதமும் கடத்தப்படுகிறார்கள்.

முதல் 10 மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகளின் பங்கு, 2016 ஆம் ஆண்டில் மொத்த வழக்கில் 93 சதவீதமாகவும், சற்று குறைந்து 2017இல் 85 சதவீதமாகவும், மேலும் குறைந்து, 2018இல், 81 சதவீதமாகவும் இருக்கிறது. மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்கள், மூன்று ஆண்டுகளிலும் முதல் 10 மாநிலங்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, மொத்த வழக்குகளில், தரவுகளின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டைவிட 2016 ஆம் ஆண்டு 2.6 சதவீத உயர்வும், குற்றவியல் (IPC) வழக்குகளில் 0.9 சதவீதம் உயர்வும், 2017 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டைவிட 3.6% ஒட்டுமொத்த உயர்வும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு வழக்குகளில் 2.9 சதவீதமும் உயர்வுகள் காணப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் குற்ற வழக்குகள் 2.3% உயர்ந்துள்ளன. தமிழ்நாடு, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பதியப்படும் வழக்குகளின் அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு 6.1 சதவீதப் பங்களிப்புடன் ஏழாம் இடத்திலும், 2017 ஆம் ஆண்டு 8.4 சதவீதப் பங்களிப்பு மற்றும் 2018 ஆம் ஆண்டு 9.8 சதவீதப் பங்களிப்புடன் நான்காம் இடத்திலும் தொடர்கிறது.

மாறாக, 2016 ஆம் ஆண்டு 29 மாநிலங்களில் கடத்தல் வழக்குகளில் 434 வழக்குகளுடன் 5-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2017இல் 13 வழக்குகளுடன் பதினெட்டாவது இடத்திற்கும், 2017இல், வெறும் 8 வழக்குகளுடன் 21-வது இடத்திற்கும் வந்திருக்கிறது. ஆனால் கடத்தல் வழக்குகளைப் பொறுத்தவரை கள நிலவரங்களுக்கு முரணாக புள்ளிவிவரங்கள் இருப்பதை அறியமுடிகிறது.

கடத்தல்காரர்கள் பொதுவாக ரயில் போக்குவரத்தை, சுலபமாக, ,செலவு குறைவாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதால் அதிகம் பயன்படுத்துகின்றனர். கடத்தல்காரர்கள், காவல்துறையினரிடம் சிக்கினாலும் வழக்குகள் பதியப்படுவதில்லை. உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும், சென்னை எழும்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மீட்கப்படுகின்றனர். இவர்களில் வீட்டை விட்டு ஓடிவந்த குழந்தைகளும், கடத்தப்படும் குழந்தைகளும் உள்ளனர். GRP / RPF அலுவலர்கள் தினசரிக் குறிப்பேட்டில் பதிவது (DD entry) / மெமோ போடுவது போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஒரு வழக்குகள் கூட GRP - யால் பதியப்படவில்லை.

மே மாதம் 2019 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வில் பேசிய தெற்கு ரயில்வேயின், ரயில்வே காவல் படையின் முதன்மை பாதுகாப்பு ஆணையர் பீரேந்திரகுமார், 2016 ஆம் ஆண்டு மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 454 ஆகவும், 2017 ஆம் ஆண்டில் 905 ஆகவும், மேலும் உயர்ந்தது 2018 ஆம் ஆண்டு 1063 ஆகவும் உள்ளது; மேலும் ஏப்ரல் 2019 வரை 683 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவர்களில் பெரும்பாலோனோர் கடத்தப்பட்ட குழந்தைகள் என்று அவர் கூறியதுதான். குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

கடத்தல் வழக்குகள் குறைவாக இருப்பதற்கானக் காரணங்களைப் புரிந்து கொள்வதற்காக, ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் துறையினர், குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ரயில்வே நிலையத்திலுள்ள வியாபாரிகள், விற்பனையாளர்களிடம் நடத்தப்பட்ட பேட்டிகள் மூலம் பல வழக்குகள் முறையாகப் பதியப்படாமல் விடப்படுவது இதற்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்தது. வழக்குகள் பதியப்படாமைக்கு ஒரு காரணத்தை மட்டும் சுட்டிக்காட்ட இயலாது. பல்வேறு காரணங்கள் மீட்கப்படுவோரை பொறுத்து வேறுபடும்.

மனிதக் கடத்தல் வழக்குகள் பதியப்படாமல் இருப்பதற்கு காரணங்கள்

வழக்குகளைப் பதிவு செய்வதில் காவல்துறையினர் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். நிறைய நடைமுறைச் சிக்கல்களும் மாறுபட்ட கருத்தாக்கங்களும், உரிமை சார்ந்த புரிதல் இன்மையும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. கீழ்க்கண்ட காரணங்களைப் புரிந்து கொண்டால் மட்டுமே தீர்வுகளை இனம் காணமுடியும்.

பிரிவு 370 குறித்த புரிதலின்மை - தற்போதுள்ளச சட்டங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தில்லாத் தொழில்களில் ஈடுபடத் தடை ஏதுமில்லை. மேலும் அனைத்துக் குழந்தைகளும், பெற்றோர்கள் சம்மதத்தில் அல்லது சுய சம்மதத்தின் பேரில் அழைத்து வரப்படுகிறார்கள். கடத்துபவர்கள் தங்களை குழந்தைகளின் உறவினர் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சம்மதத்தின் பேரில் வருவதால் வழக்குப் பதிவு செய்ய இயலாது என மறுக்கப்படுகிறது. ஆனால் சட்டத்தின் விளக்கம் - 2 - ல் மிகத்தெளிவாக கடத்தல் குற்றத்தை நிர்ணயிப்பதில் பாதிக்கப்பட்டவரின் சம்மதம் ஒரு பொருட்டாகாது எனக் கூறப்பட்டுள்ளது.

கடத்தப்படுபவர்கள், தங்களது சொந்த ஊரில் உணவுக்கு வழியில்லாமல் வேலை தேடி வருகின்றனர். இவர்களை மீட்டுத் திருப்பி அனுப்பினால் வேறு இடங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அது இதைவிட மோசமான சூழலாக இருக்கலாம். அவர்களை புகார் பதியாமல் விட்டுவிட்டால், குறைந்தபட்சம் உணவாவது கிடைக்கும் அதையும் கெடுக்கக் கூடாது என்ற பரிதாப உணர்வு காரணமாக விட்டுவிடுகிறார்கள். அவர்களுடைய கடமை கடத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது என்பதை மறந்து விடுகிறார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் கடத்துபவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தர உதவும். ஆனால் கடத்தப்பட்டவர்களுக்கு எந்தவித மறுவாழ்வு அல்லது இழப்பீட்டுத் தொகை வழங்கச் சட்டத்தில் அனுமதி இல்லை. மறுவாழ்வு வசதி இன்றி திரும்பிச் சொந்த ஊருக்கு அனுப்புவதை விட, விட்டுவிடுவது சாலச்சிறந்தது என்று காவல்துறையினர் எண்ணுகிறார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படும் நபர்கள் பல்வேறு கை மாறி வருகிறார்கள். கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் இருப்பதால் அந்தக் குற்ற இணைப்பில் உள்ள அனைவரையும் இனம் கண்டுபிடித்து புகார் பதிவதில் நிறைய சவால்களும், பிரச்சினைகளும் உள்ளன. ஒரு வழக்கிற்கு மூன்று நான்கு மாநிலங்களை தொடர்புகொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

கடத்தல் வழக்குகளை மாநிலங்களுக்கு இடையே கையாளவும், ஒருங்கிணைக்கவும் தேசிய அளவில் அமைப்புகள் ஏதுமில்லை. மட்டுமல்லாமல் மாநிலங்களில் இதற்கென்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் வழக்குகளை பதிந்து தொடர்ந்து எடுத்துச் செல்வதில் காலதாமதம் அதிகமாக ஆகிறது. இது அந்த அதிகாரிக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு /மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் வழக்கு விசாரணைக்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. மேலும் ஆண்டுக்கணக்கில் வழக்கு நடந்து தீர்ப்பு தாமதமாகவே கிடைக்கிறது. காவல்துறையினர் கடத்தல்காரர்களைத் தண்டிக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்தாலும், சாட்சிகளும் / பாதிக்கப்பட்டவர்களும் பல்டி அடிப்பதும், சமரசம் அல்லது மிரட்டலால் பின்வாங்குவதும் நடக்கிறது. வேறு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இங்கிருந்து கொண்டு பாதுகாப்பு வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது.

கடத்தும் நபர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு (ஒரு நபருக்கு ரூபாய் 1000 அல்லது 2 ஆயிரம் ரூபாய்) விடுவதும் உண்டு. மேலும் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அழுத்தமும் புகார் பதிவு செய்வதைத் தடுக்கிறது. கடத்தல் நடப்பது அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது. இதனால் மீளாய்வு செய்யும் உயரதிகாரிகள், மீட்கப்பட்ட குழந்தைகளில் எத்தனை பேர் கடத்தப்பட்டவர்கள், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்ற குறைந்தபட்சக் கேள்வியைக் கூட கேட்பதில்லை. மேலும் வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்யாமல் விடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஏற்கெனவே காவல்நிலையங்களில் அலுவலர்கள் பணியமர்த்தப்பட வில்லை. நிறைய பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இந்த சூழலில் புகார்களைப் பதிவு செய்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்ற எண்ணம் இருக்கிறது.

கடத்துபவர்கள், பொதுவாக குழுவாக அழைத்து வருவது வழக்கம். சிலநேரங்களில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை அழைத்து வருவார்கள். ஒருவேளை இவர்களை மீட்டால், குறிப்பாக, பெண் குழந்தைகளை தங்க வைக்க போதிய வசதி இல்லை. பெண் குழந்தைகள் தங்க போதிய வசதிகள் ஏற்பாடு செய்வது அவசியம்.

குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டு லைன் போன்ற அமைப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு அல்லது காவல்துறையிடம் செல்வாக்கு / அதிகாரம் இல்லை. குழந்தைகள் நலக்குழு முன்பாக மீட்கப்பட்ட குழந்தைகளை ஒப்படைக்கும் பொழுது, அக்குழந்தையிடம் முழுமையாக விசாரித்து கொத்தடிமைத்தனம், கட்டாயவேலை, பாலியல் துன்புறுத்தல் போன்ற விஷயங்களில் தொடர்பு உள்ளதா என்று கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக விசாரணை முறையாக நடத்தப்பட்டு பதிவு செய்யப்படுவதில்லை. குழந்தைகளைப் பெற்றோர்களிடம் நேரடியாக ஒப்படைப்பதை, தவிர்த்து சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு அனுப்பி சமூக விசாரணை அறிக்கை (Social Investigation Report) யின் முடிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. மேலும் காவல் துறையினருக்கு புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் / குழந்தையோ முன்பணம் பெற்றிருந்தால் வருவாய் கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் எதுவும் செயல்படுவது போல் தெரியவில்லை. பெயரளவுக்கு கூட்டங்கள் நடத்தி தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.

மேற்சொன்ன நடைமுறைச் சிக்கல்களை கலைந்தால் மட்டுமே, கடத்தல் வழக்குகள் முறையாக பதியப்படும் என்ற கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். காவல்துறையினரிடம் குற்றம் காண்பதை விடுத்து, இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும். மற்ற சட்டங்களும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை முழுமையாக பாதுகாப்பது இல்லை. தற்போது உள்ள சட்டங்களில் இடைவெளிகள் உள்ளன. முதலாவதாக பிரிவு 370 முழுமையான செயல்படுத்துவதில் மேற்கண்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும், சிரமங்களும் இருக்கின்றன. இந்தப் பிரிவு நடத்துபவர்களுக்கு தண்டனை வாங்கித் தர உதவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் இழப்பீட்டுத் தொகையும் கிடைக்க வாய்ப்பில்லை. இரண்டாவதாக, பரத்தமை கடத்தல் தடுப்பு சட்டம் (Immoral Traffick (Prevention Act) பாலியல் கடத்தலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கட்டாய உழைப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பிச்சை எடுத்தல், வாடகைத்தாய் போன்ற அனைத்து வகையான கடத்தல்களுக்கும் பொருந்தாது.

இந்தச் சட்டத்தின் கீழ், மறுவாழ்வு என்பது 'பாதுகாப்புக் காவலில்' கவனம் செலுத்துவதால், மீட்கப்பட்டவர்களை சிறையில் அடைக்க வழிவகுக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மறுவாழ்வு என்ற சொல் வரையறுக்கப்படவில்லை. இதன் விளைவாக, மீட்கப்படாதது மற்றும் மீட்கப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுப்பது போன்றவற்றைச் செய்ய இயலாமல் மீண்டும் அவர்களை கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளுகிறது. மூன்றாவதாக, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின்படி முதலாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடத்தப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. மேலும் இதில் இழப்பீட்டுத் தொகை என்பது குற்றவாளிக்குத் தண்டனை கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற வகையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை.

நான்காவதாக, தேசிய சட்ட உதவிகள் ஆணைக்குழு மூலம், 357-A சிஆர்பிசியின் கீழ் நிறுவப்பட்ட பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் திட்டம் (Victim Compensation Scheme) கடத்தப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. கடந்த 7 ஆண்டுகளில், 2012-2019 க்கு இடையில், இந்தியா முழுவதும், மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு கூட இழப்பீடு வழங்கப்படவில்லை. மொத்தம் 100 விண்ணப்பங்களில், 30 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. 19 மாநிலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடான ரூபாய் 544.53 கோடியில், ரூபாய் 128.27 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, 75% நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. (ஆதாரம்: சஞ்சோக், கொல்கத்தா - தாக்கல் செய்த ஆர்டிஐ).

பரிந்துரைகள்

ஏற்கெனவே மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான மசோதா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் திருத்தப்பட்டு வருகிறது. மசோதாவைத் திருத்தும்போது, கடத்தலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் / மறுவாழ்வு அளிப்பதற்கும் மற்றும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் மற்றும் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கும், இந்தச் சட்டம் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, கடத்தப்பட்டவர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வகையான கடத்தல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்- கொத்தடிமை, - குழந்தைத் தொழிலாளர், தத்து எடுத்தல், கட்டாய உழைப்பு, கட்டாயத் திருமணம், பாலியல் சுரண்டல், வாடகைத்தாய், பிச்சை எடுத்தல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற வடிவங்கள். மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளிடையே வழக்குகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு தேசிய அளவிலான அமைப்பு இருக்க வேண்டும். மறு வாழ்வு என்பது பாதிக்கப்பட்டோரின் உரிமையாக இருக்க வேண்டும். அது அவர்களின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும். அதற்கான நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை, தண்டனையுடன் தொடர்புப்படுத்தக் கூடாது. கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - தண்டனை, வங்கிக் கணக்கை முடக்குவது உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்குவது மிகவும் முக்கியம்.

தண்டனை விகிதம் (conviction rate) அதிகரிக்கப்பட வேண்டும், அதற்காக விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும். வீடியோ கான்பரன்சிங்கில் வழக்கு விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடு உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதற்கான வழிவகைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளால் அவ்வப்போது வழக்குகளை மீளாய்வு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத / பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். வேலைக்கு ஆட்களை எடுக்கும் முகவர்கள் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இது முகவர்கள் ஏமாற்றுவதையும் சுரண்டுவதையும் தடுக்கும். கடத்தலைத் தடுப்பதில் ஈடுபடுத்தப்படும் அமைப்புகள் / அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்

மனிதக் கடத்தல் சம்பவங்கள் முறையாக காவல் நிலையங்களில் பதியப்படாமல் இருப்பது மற்றும் தற்போதுள்ள மற்ற சட்டங்களில் நிறைய இடைவெளிகள் இருப்பது போன்றவை கடத்தப்படுபவர்களுக்கு அதிக பாதிப்பை உருவாக்குகிறது. பாதிக்கப்பட்டவர்களைச் சுரண்டுவதற்குக் கடத்தல்காரர்களுக்கு வழிவகுக்கும். மேலும், கடத்தலுக்கு காரணமான முக்கியக் காரணிகளில் வறுமையும் பேரிடரும் பெரும் பங்கு வகிக்கின்றன. கோவிட் – 19 ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தால், பல ஏழைக் குடும்பங்கள் கடுமையான வறுமைச் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது கடத்தல்காரர்கள், பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளை கொத்தடிமை, கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல் போன்றவற்றில் ஈடுபடுத்த ஊக்குவிக்கும். எனவே, தற்போதைய சூழலில், மனிதக் கடத்தலைத் தடுக்க ஒரு வலுவான மற்றும் விரிவான புதிய சட்டம் தேவை.

- முனைவர் ப. பாலமுருகன்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: balaviji2003@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x